13 Oct 2018

சம்பவ வருட நாட்குறிப்பு


சம்பவ வருட நாட்குறிப்பு
எஸ்.கே. தன் நாட்குறிப்பை எடுத்தார். அமைதியாக அதையே உற்றுப் பார்த்தவர் சில நிமிடங்கள் ஆழ்ந்த பெருமூச்சில் லயித்துக் கொண்டிருந்தார். பிறகு எழுதுவதெனத் தீர்மானித்து எழுதத் துவங்கினார்.
எழுதி நீண்ட நாட்கள் ஆகியிருந்ததால் எழுத்துகள் அவருக்கு மறந்து போயிருந்தன். பிரயதனப்பட்டு ஞாபகம் செய்து அவர் எழுதிய விசயங்களில் சில -
''இப்போதெல்லாம் மனம் அமைதியாக இருப்பதை விரும்புகிறேன். அந்த அளவுக்கு மனம் அமைதியற்று குத்தாட்டாம் போடுகிறது. தேவையில்லாமல் யாரிடமும் பகை வளர்க்க விரும்பவில்லை. அதற்காக பயந்து கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டால் அதுவும் சரிதான்.
இவர்களெல்லாம் மனிதர்களா? என்று சிலரைப் பார்த்து நினைக்கத் தொன்றுகிறது. ஆனால் அவர்கள் மனிதர்கள்தான். இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் மனிதர்கள் என்பதற்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது. இறந்து விட்டால் இறப்புச் சான்றிதழ் கொடுப்பார்கள். ஆதார் எண் கூட வைத்து இருக்கிறார்கள். அதனால் அப்படி நினைப்பது தவறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த மனிதர்களுக்கு எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தாலும்  திருந்த மாட்டார்கள். பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம். சுவர் ஓரமாய் சிறுநீர் கழிப்பதை மன்னித்து விடலாம். அது வரும் போது அப்படித்தான் செய்ய முடியும். அது யாராக இருந்தாலும் அதை அப்படித்தான் செய்ய முடியும். அவர்கள் அப்படித்தான்.
பொதுவாகவே ஒருவரின் அமைதியற்ற தன்மைதான் அவர்களின் செயலைத் தூண்டுகிறது. அவர்கள் அமைதி பெற்று விட்டால் செயலற்ற தன்மையைத்தான் அடைகிறார்கள். அதனால் மனிதர்கள் அமைதியற்று இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது இறைவனிடம். இறைவன் அதைத்தான் செய்கிறார். நீங்கள் ஆலயங்களில் பார்க்கலாம். மன அமைதியற்ற மனிதர்கள் அங்கே அநேகம்.
அடிப்படையில் மனிதர்கள் சோம்பேறிகள் என்று சொன்னால் யாருக்கும் பிடிக்காது. நானே அடிப்படையில் அப்படித்தான் என்று சொல்லிக் கொள்வதால் யாருக்கும் அதில் பிடித்தம் இல்லாமல் போகாது. ஆகவே அப்படியே சொல்லிக் கொள்கிறேன். அவர்களை (மன்னிக்கவும்) என்னை செயல்பட வைப்பது சாதாரணம் அல்ல. அந்த சோம்பேறித்தனத்தை அடித்துத் துரத்துவதற்குதான் அவர்கள் (மன்னிக்கவும்) என்னை நான் யாரிடமாவது அடமானம் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சிலர் (மன்னிக்கவும்) என்னை ஏதோ சில வஸ்துகளிடம் அடமானம் வைத்துக் கொள்வதும் உண்டு. வஸ்துகள் என்றால் என்னவென்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னால் புரிய வைக்க முடியாது. நீங்களே கஷ்டபட்டாவது புரிந்து கொள்ளுங்கள்.
அவரவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அன்றி யாரும் தம்முடைய கடமையைச் செய்ய மாட்டார்கள் என்று சொல்லப்படுவதை நான் எதிர்க்கிறேன். யார் கடமையைச் செய்கிறார்கள்? ஏதோ பணத்துக்காக ஏதோ செய்து கொண்டு இருக்கிறோம். அதை கடமை என்று சொல்லிக் கொள்கிறோம். பிறகு அதை லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்றா எதிர்மறை வார்த்தைகளிலா சொல்ல முடியும்?
அப்புறம் மனசாட்சி பற்றிப் பேசுகிறார்கள். மனசாட்சிக்குப் பயந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள் யார்? அதிகாரத்துக்குப் பயந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள்தான் அதிகம். அந்த அதிகாரமும், பயமுறுத்தும் தன்மையும் யாரும் கொடுப்பதல்ல. நாமாக வளர்த்துக் விடுவதுதான்.
அது உடைந்து கிடக்கிறது, இது உடைந்து கிடக்கிறது, அவைகள் விரைவில் சீராக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நல்லதுதான். அதை முறைப்படி சீர் செய்தால் பணத்தை ஒதுக்குவது எப்படி? பொதுவாக உடைவது நிர்வாகங்களுக்கு நல்லது. இல்லையென்றால் கமிஷன் வியாபாரம் பாதிக்கப்பட்டு விடும்.
பிரியாணி ஆசையில் பிள்ளைகளைக் கொன்றவர்களைப் பற்றிக் கேள்விபடும் போது பயமாக இருக்கிறது. அது குறித்து அந்தப் யாருக்கும் எந்த உறுத்தலும் இல்லை. ஒருவேளை உறுத்தல் ஏற்பட்டால் அடுத்த முறை பிரியாணி சாப்பிடும் போது விக்கல் ஏற்படுமோ என்னவோ! அந்த அளவுக்கு மனிதர்கள் மாறிக் கொண்டு வருகிறார்கள். தனியொரு மனிதருக்கு பிரியாணி கிடைக்கவில்லை என்றால் பிள்ளைகளைக் கொன்றிடுவோம் என்றால் எப்படி? இந்த தேசத்தில் பிள்ளைகள் வாழ வேண்டாமா?
ஆடையில்லாமல் நடிப்பது குறித்து பிரக்ஞை இல்லை என்று ஒருவர் சொன்னதாக கேள்விபட்டேன். அந்த படத்துக்கு அது தேவை என்பார். படத்தைப் பார்த்தால் அதைப் புரிந்து கொள்வீர்கள் என்பது அவரது வாதமாக இருக்கும். படத்தைப் பார்த்தால் நாம் என்ன புரிந்து கொள்ளப் போகிறோம்? புரிந்து கொண்டால் அப்புறம் ஜொள்ள விட முடியுமா என்ன?
இப்படியெல்லாம் யோசிக்கும் போது நாட்டில் நிறைய கெட்ட விசயங்கள் நடக்கின்றன என்பது போலத் தோன்றும். அதற்கு இடையே ஒன்றிரண்டு நல்ல விசயங்களும் உண்டு. அது எங்கேயோ எப்போதோ நடக்கிறது. அதனாலேயே நல்ல விசயங்கள் வைரல் நியூஸ் ஆகி விடுகின்றன. கெட்ட விசயங்கள் எப்போதும் ப்ளாஷ் நியூஸ்களாவே இருக்கின்றன.
கடைசியாக அதிகார ஜபர்தஸ்தை ரவுடி மிரட்டுகிறார் என்றால் ரவுடி அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாரா? அதிகார ஜபர்தஸ்து அவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறாதா?
இப்படியெல்லாம் நாட்குறிப்பு எழுதினால்... அப்புறம் தூக்கம் போய் விடுகிறது. அதற்காக நாட்குறிப்பு எழுதாமல் இருந்தால் எழுத்துகள் மறந்து போய் விடும் போலிருக்கிறது.
இந்த நாட்குறிப்பைப் படிக்க பிரியம் உள்ளவர்கள், இரவில் படிக்க வேண்டாம். பகலில் படியுங்கள். பகலில் தூங்குபவர்களுக்கு உபயோகமானது இது. பகல் தூக்கம் போய் விடும்.''
நாட்குறிப்பு நாள் - சம்பவ வருடம், புகாரி மாதம் 708 வது நாள், பனிரெண்டாவது நாழிகை.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...