மனதுக்குள் தீப்பிடித்தால்...
மனஇறுக்கம் அல்லது மன உளைச்சல் என்பது
எப்படி இருக்கலாம்? மனஇறுக்கமும் மன உளைச்சலும் ஒன்றா? வேறு வேறா? என்ற குழப்பம் வேறு
நீடிக்க அதைப் பற்றி எழுதுவது என்று தீர்மானித்தார் எஸ்.கே.
எதையும் தானே அனுபவித்து எழுதுவது அவரது
ஸ்பெஷல் மசால் தோசை என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் தனக்குத் தானேவோ அல்லது
பிறர் மூலமாகவோ மன இறுக்கத்தையோ, மன உளைச்சலையோ ஏற்படுத்திக் கொள்வதெனத் தீர்மானித்தார்.
அதற்காக மெனக்கெட்டு பல முயற்சிகளில் இறங்கி கடைசியில் ஒரு வழியாக அதை ஏற்படுத்திக்
கொண்டார். பின் என்ன? வழக்கம் போல் எழுதத் துவங்கினார். அவர் எழுதியதாவது...
எல்லாம் வழக்கமானதுதான். அதற்கு எந்த
விதமான தீர்வுகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லா பிரச்சனைகளும் அநேகமாக ஒரே
மாதிரித்தான் இருக்கின்றன. எந்த மாற்றமுமில்லை. அப்படியே ஒரே மாதிரியாக. ஒரே மாதிரியாகச்
சோர்ந்து போகிறேன், களைத்துப் போகிறேன், சலிப்படைகிறேன், கோபப்படுகிறேன். எல்லாம்
ஒரே மாதிரியாகத்தான். இதிலிருந்து விடுபட வழியில்லை. இது ஒரு சுழற்சி போல என்று நினைக்கிறேன்.
இந்த சுழற்சியில் மனம் சில நேரங்களில் அதீதமாக பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் கண்டு
கொள்ளாமல் இருந்து விடுகிறது. எப்படியும் அதீதமான பாதிப்புகள் அதிகம்தான். எனது உடல்
தளர்ந்து விட்டது. தலைமுடி அளவுக்கு அதிகமாகவே வெளுத்து விட்டது. பஞ்சு பஞ்சாகி விட்டது.
கிட்டதட்ட இருபத்தைந்து வயதுக்குள் நான் கிழத் தன்மையை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.
என் இதயம் சரியானபடி துடிப்பதாக நான் நினைக்கவில்லை. அது தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.
எனது சுரப்பிகள் சரியானபடி சுரப்பதாக நான் நினைக்கவில்லை. அதன் சுரப்புகள் கண்டபடி
இருக்கக் கூடும்.
இந்த அமைப்பே குழப்பமாக இருக்கிறது. அமைதி
என்பது இல்லாமல் இருக்கிறது. அதுவும் குறிப்பாக மனநிலை. ஒவ்வொருவரின் மனநிலையும் இவ்வளவு குழப்பமாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. இவர்களைப்
புரிந்து கொள்வதற்குள் வாழ்நாள் முடிந்து விடும் போலிருக்கிறது. பிறகு எப்படி நான்
என்னைப் புரிந்து கொள்வது? எனக்கானச் சின்ன சின்ன விசயங்களை எப்படி நான் நிறைவேற்றிக்
கொள்வது? நிலைமை படு சிக்கலாக இருக்கிறது.
ஒரு சரியான மனிதன் குழம்பித்தான் தவிப்பான்
என்பது போலிருக்கிறது நிலைமை. நான் சரியான மனிதனா என்ற குழப்பமும் அவ்வபோது சேர்ந்து
கொண்டு கும்மியடிக்கிறது.
அதிகார வெறி பிடித்த ஒரு போராட்டம் நடக்கும்
போது எப்படி ஒரு சரியான மனிதன் சரியானபடி செயல்பட முடியும்? அவன் அதிலிருந்து தப்பித்துக்
கொள்வதற்காகவாவது குறுக்கு வழிகளை நாட வேண்டியிருக்கிறது. நடக்கின்ற போர் தந்திரங்களால்
ஆனது என்றால் அதற்கு நியாயமான உபாயங்கள் உதவ முடியாது. அதே தந்திரத்தில் இறங்கித்தான்
அந்தப் போரை எதிர்கொள்ள முடிகிறது.
நேர்மை என்ற ஒன்று, உண்மை என்ற ஒன்று,
நியாயம் என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர்களின் மனநிலைக்கு ஏற்ற நேர்மை,
உண்மை, நியாயம் என்பவைகள்தான் இருக்கின்றன.
எல்லா நேர்மையும் சார்புநிலை நேர்மைகளே.
எல்லா உண்மையும் சார்புநிலை உண்மைகளே. எல்லா நியாயங்களும் சார்புநிலை நியாயங்களே. அவைகளில்
தூய்மை என்பது இல்லை. எல்லாவற்றிலும் கொஞ்சம் பச்சோந்தித்தனம் இருக்கவே செய்யும்.
எல்லாவற்றிலும் கொஞ்சம் கருங்காலித்தனம் இருக்கவே செய்யும்.
*****
No comments:
Post a Comment