18 Oct 2018

யோசிப்பது பழக்கமாகி விட்டது!


யோசிப்பது பழக்கமாகி விட்டது!
            இந்த மற்றும் அந்தப் பிரச்சனைகளை எழுதித் தீர்ப்பது கூட ஒரு நல்ல வழிமுறை. தாளுக்கும், பேனாவுக்கும் வலிக்கும். மனதுக்கு வலிக்காது. உங்கள் அபத்தங்களை நீங்களே பார்க்கலாம்.
            மனதுக்குள்ளே தீர்ப்பது என்பது மட்டரகமான முறை. சமயங்களில் பிரச்சனைகளை அதிகப்படுத்தி விடும்.
            எஸ்.கே.யின் பழைய அனுபவங்களிலிருந்து சொல்லும் போது அப்படி எழுதித் தீர்த்த பின்தான் அவரால் வெளிவர முடிந்திருக்கிறது. அவர் எழுதுவது கூட அதற்காகத்தான் இருக்கலாம். படிப்பவர்களுக்கு இதனால் நிச்சயம் சிக்கல்தான்.
            நிச்சயமாக மனதுக்குள்ளே போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கு வரை உங்களால் வெளிவர முடியாது. அது என்ன கணக்கா? நீங்கள்தான் என்ன ஆர்க்கிமிஸா? பேசித் தொலைத்தால் தொலைந்து போகும் வஸ்து அது. எரித்தால் குப்பை எரிந்து சாம்பலாகப் போகிறது.
            மனம் ஒரு நெடுங்காலமாக நடக்கும் போராட்டம். நீங்கள் சம்பந்தமில்லாமல் உங்களுக்குப் புரியாத விசயங்களையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  உண்மையில் அது புரியாத விசயம்தான். புரியப் புரிய புரியாத விசயமாக ஓடிக் கொண்டிருக்கும் கைக்குப் பிடிபடாத காற்று போன்றதுதான் அது. அதை அப்படிப் புரிந்து கொள்வதன் மூலம்தான் அதிலிருந்து விடுபட முடியும்.
            பிடித்துப் பார்க்க வேண்டும் என்றாலும் பிடித்தப் பின் ஒன்றும் இருக்கப் போவதில்லை. புரிந்து கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் புரிந்து கொண்ட பின் அது ஒன்றுமில்லை என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதனாலேயே அது புரியப்படாமல் இருக்கிறது என்பதுதான் அதனுடைய வினோதம்.
            நீங்கள் உங்களுக்குப் புரியாமல் இருப்பது என்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயம். உங்கள் மகிழ்ச்சியே அதுதான். அது புரியப் புரிய நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைத்தான் முதலில் தொலைப்பீர்கள். கடைசியில் அது ஒன்றுமில்லை எனும் போது நீங்கள் உங்கள் மகிழ்ச்சிக்குத் திரும்புவீர்கள்.
            நீங்கள் நெருக்கடியில் தள்ளப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள். உண்மையில் அப்படி ஒரு நெருக்கடி இல்லவே இல்லை என்பதை உணர்வதுதான் இதன் முதல் படி. எது இருக்கிறது என்று சொல்லப்படுகிறதோ அது எதுவும் இங்கே இல்லை. எது இல்லை என்று சொல்லப்படுகிறதோ அதுவும் இங்கு இல்லை. அப்படி இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு தோற்றம் மட்டும்தான் இங்கே இருக்கிறது. அது ஒரு தோற்றம் மட்டுமே. உங்களால் உருவாக்கப்பட்ட தோற்றம். உங்கள் மனதால் உருவாக்கப்பட்ட தோற்றம்.   
            இதன் பின்னும் நீங்கள் புரியாத விசயங்களைப் புரிந்து கொள்வதில்தான் ஆர்வம் செலுத்துவீர்கள். அது உங்கள் தவறல்ல. அதன் கவர்ச்சி அப்படி. கவர்ச்சிக்கு மனம் எப்போதும் அடிமை.
            நாம் யாரையும் திருத்த வேண்டியதில்லை. அவரவர்களாக திருந்தி வருவார்கள். உங்கள் மனதைப் பொருத்த வரையிலும் அப்படித்தான். அதுவாகத் திருந்தி வரும். ஏனென்றால் அங்கே திருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை என்ற நிலை உணரப்படும் வரை நீங்கள் திருத்தத்தைத்தான் பற்றித்தான் பேசிக் கொண்டு இருப்பீர்கள். 
            அதிலும் உங்களால் என்ன செய்ய முடிந்ததோ அதைத்தான் செய்து இருக்கிறீர்கள். அதுவே அதிகம்தான். நீங்கள் சிந்தித்துச் சிந்தித்தே களைத்திருக்கிறீர்கள். என்ன ஒரு கொடுமை. அப்படி ஒரு கொடுமையைச் செய்து கொள்ளாமல் உங்களால் அந்தப் பரீட்சைகளில் தேறியிருக்க முடியாது என்று கருதுகிறீர்கள். உண்மையில் அது ஒரு பரீட்சையே இல்லை. நீங்கள் எந்த அளவுக்கு விலகி இருக்கீர்களோ அந்த அளவுக்கு அது கடினமாக இருக்கிறது. நெருங்கி வந்து விட்டால் அது ஒன்றும் இல்லாததாகி விடுகிறது. 
            இப்போதும் கூட உங்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தொடரும் பிரச்சனை இது என்பார்கள். நீங்கள் நினைத்தால் இந்த நொடியில் விட்டு விடலாம். விடும் அது வேண்டும். அதை மனம் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். விட வேண்டிய ஒன்றுக்கு மீண்டும் பெயர் சூட்டுவது போல ஆகி விடும்.
            இது உங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அது சவால்களையோ, விவாதங்களையோ தரவில்லை. அப்படித் தருவதற்கு ஒன்றுமில்லை. மேலும் மேலும் அடிமைத்தனங்களையே சுமத்துவதையே நீங்கள் விரும்பினால் சவால்களையும், விவாதங்களையும் தரலாம். அதுவோ சர்வ சுதந்திரமானது. ஆக அப்படித் தருவதற்கு எதுவுமில்லை.
            சொல்வதற்கு ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஒருமுறை அந்த அடிமைத்தனத்துக்கு ஆளாகி விட்டால் பின் அதிலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமில்லை. பின்பு அங்கிருக்கும் அடிமை சாசனம் செய்வதாக அது நீள்கிறது. ஒரு மாபெரும் கொடுமை என்னவென்றால் அடிமை சாசனத்தைக் கிழித்தெறிய ரொம்பவே யோசிப்பீர்கள். யோசிப்பது உங்கள் பழக்கமாகி விட்டது. அப்போதுதான் விடுபடுவது சுலபமில்லை என்று நீங்கள் சொல்வீர்கள். விடுபடுவது சுலபம்தான் என்று சொல்வேன் நான். அது எப்படி? என்று யோசிப்பீர்களானால் தொலைந்தீர்கள். ஏனென்றால் யோசிப்பது உங்கள் பழக்கமாகி விட்டது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...