14 Oct 2018

அகில உலக எழுத்தாளன்


அகில உலக எழுத்தாளன்
நான் எஸ்.கே. என்னைத் தெரியாதவர்கள் எழுத்துலகில் இருக்க வாய்ப்பில்லை. காரணம் நான் அகில உலக எழுத்தாளன். நோபல் பரிசு மயிரிழையில் தவறிக் கொண்டு இருக்கிறது. இந்த வருடம் பாலியல் புகாரால்! பெரிய பெரிய தலைவர்களே அதற்கு (மேட்டருக்கு அதாவது அந்த குஜாலுக்கு) ஆளாகும் போது எழுத்தாளன் என்ன செய்வான் சொல்லுங்கள். நான் பேச வந்த விசயம் அதுவல்ல. எழுத்தாளராக இருப்பது எவ்வளவு ஆபத்தான விசயம் என்பதை உங்களுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்புகிறேன். அது சரி! இந்த நூற்றாண்டில் எதில்தான் ஆபத்து இல்லை. அதில் எழுத்தாள ஆபத்து கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் அதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
நான் முன்பெல்லாம் தினசரி கவிதை எழுதிக் கொண்டு இருப்பேன். அப்புறம் அவைகள் எல்லாம் கவிதைகள் இல்லை என்று தெரிந்ததும் விட்டாயிற்று. மாதத்துக்கு பத்து பனிரெண்டு சிறுகதைகள் எழுதுவதுண்டு. அவைகள் சிறுகதைகள் இல்லை என்று தெரிந்ததும் யாரையாவது இழுத்து வைத்துக் கொண்டு வெட்டிக் கதைகள் கதைப்பதுண்டு. அவைகளைத்தான் நான் சிறுகதைகளாக எழுதித் தள்ளியிருந்தேன். இப்போதும் வேலை வெட்டி இல்லாதவர்கள் வெட்டிதனமாக இருப்பவர்கள் வீடு தேடி வந்து நான் எழுதி வைத்திருக்கும் சிறுகதைகளை படித்து விட்டுப் போவதுண்டும். இதற்காகவே ஏகப்பட்ட ஜெராக்ஸ் (தமிழில் நகல் என்று சொல்வார்கள்) எடுத்து வைத்து இருக்கிறேன்.
அப்புறம் நிலைமை மாறி விட்டது. தினம் ஏதாவது புரியாத கவிதைகளுக்கு விளக்கம் எழுதினேன். அப்படியாவது அந்தக் கவிதைகள் புரிந்து விடுமா என்ற நப்பாசைதான். புரியாத தன்மைதான் அந்தக் கவிதைகளுக்கு நல்லது என்பதை நாட்பட்டுப் போய் உணர்ந்தேன். உணர்ந்து என்ன புண்ணியம்? எழுதியதை என்ன செய்வது?
சில நேரங்களில் நூல் அறிமுகங்கள் எழுதுவதுண்டு. ரொம்ப கன்றாவியான வேலை அது. சில இலக்கிய அறிமுகங்கள் கிடைக்கும் என்ற அல்ப ஆசைதான். கிடைத்த அறிமுகங்கள் ரொம்ப பயங்கரமானவை. அதாவது அவர்கள் எழுதிய வாக்கியங்களுக்கு அவர்கள் சொல்லும் விளக்கம் இருக்கிறதே, அதை போன் போட்டு சொல்கிறார்கள். அதைக் கேட்க வேண்டும். ரொம்ப பொறுமையான வேலை அது. பொறுமை இல்லையென்றால் போனை உடைத்து விடுவீர்கள். போனே சூடாகி விடுகிறது என்றால் பாருங்களேன். சுமார் ஒன்றரை மணி நேரம் அல்லது ஒன்றே முக்கால் மணி நேரம் விளக்குகிறார்கள்.         
ஆகவே, நான் சொல்ல வருவது என்னவென்றால்... எழுத்தாளராக ஆக முயற்சிப்பது என்பது ஓர் அபாயமான வேலை. இன்னும் கூடுதலாக இதைப் பற்றி நீங்கள் அறிய விரும்புகிறீர்கள் அல்லது கேட்க விரும்புகிறீர்கள் என்பது புரிகிறது. எதையும் அபாயக் கட்டத்தைத் தாண்டினால்தான் சொல்ல முடியும்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...