24 Oct 2018

புதிய உறுதிமொழி


புதிய உறுதிமொழி
இப்படி ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்வது நல்லது என்றார் எஸ்.கே. உறுதிமொழிகள் எல்லாம் பள்ளிக்காலத்தில் எடுத்தது. அப்போதே தேசிய ஒருமைபாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டு கமர்கட் கொடுக்காததற்காக கிறிஸ்டோபர் மேல் விழுந்து பிராண்டியதுண்டு. அப்புறம் நிறைய உறுதிமொழிகள். குறிப்பாக கொசுக்கள் கடிக்க கடிக்க எடுத்த டெங்கு எதிர்ப்பு உறுதிமொழி. எவ்வளவோ உறுதிமொழிகள் எடுத்தாயிற்று, இதை எடுக்க முடியாதா? என்பார் எஸ்.கே. அடிக்கடி.
இனி உறுதிமொழியைப் பார்ப்போம்.
உறுதிமொழி ஆரம்பமாகிறது...
            ஏதோ எனக்குத் தெரிந்ததை பேசிக் கொண்டு இருக்கிறேன். தெரிந்ததைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. தவறுகள் செய்தது போல சித்தரிக்கப்படுகிறேன். தவறு என்றால் எப்படி இருக்கும் என்றே எனக்குத் தெரியாது.
            இவர்கள் / அவர்கள் யாரும் நான் சொன்னதைக் கேட்டதில்லை. இவர்களிடம் / அவர்களிடம் எதையுமே சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்லி இவர்கள் / அவர்கள் கேட்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
            நான் யாரையும் / எவரையும் சந்தோஷப்படுத்தப் பிறக்கவில்லை. நான் யாரையும் / எவரையும் திருத்தப் பிறக்கவில்லை. நான் நானாக / own ஆக வாழவே பிறந்தேன். யாரையும் சந்தோஷப்படுத்துவது என்பதோ, திருத்துவது என்பதோ அவ்வளவு எளிதானதல்ல. அது அவரவர்களின் மனம் / பணம் சம்பந்தப்பட்ட விசயம்.
            நான் சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்லி விட்டேன். அதை இவர்கள் / அவர்கள் எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாமல் தூக்கி எறிவதும் அவர்களின் விருப்பம். எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டால் அது மிகப் பெரிய பிரச்சனையே. அப்படித்தான்  பிரச்சனைகள் பெரிதாகின்றன. பிரச்சனைகள் சிறிதாக அடுத்தவர்களின் சார்பாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
            நானாக வலிய சென்று சரியாக சிக்கிக் கொண்ட இடங்கள் இருக்கின்றன. ஆசை கொண்ட மனதினால் அடைந்த துன்பங்கள் அவைகள். நான் எதைத் துவங்கினாலும் துலங்காமல் போன காலக்கட்டமும் உண்டு.
            எதற்கும் ஓர் ஆழமான ஒரு பார்வை வேண்டும். அந்த ஆழமானப் பார்வையிலிருந்து செயல்பட வேண்டும். பல நேரங்களில் அந்த ஆழமான பார்வையும் தலைகுப்புறத் தள்ளி விடும்.
            அடிக்கடி மனச்சோர்வுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதிலிருந்து எப்படி வெளிவருவது, மீள்வது என்பது புரியாத புதிராகி விடும். சந்திரபாபுவின் பாடல்களை சில முறைகள் / அடிக்கடி கேட்க வேண்டும். டப்பாங்குத்துப் பாடல்களும் பயன் தரும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...