காமெடி ப்ளாக்குகளின் டிராஜெடி வடிவம்
மகிழ்ச்சியான ஒன்றை செய்ய முடியாத வரை
தத்தளித்துக் கொண்டுதான் இருப்பீர்கள். வேறு வழியில்லை, மகிழ்ச்சியான ஒன்றை மீண்டும்
செய்யத் துவங்கும் வரை தத்தளிப்பதிலிருந்து விடுபட. நதியில், புதைகுழியில் விழுந்துதான்
தத்தளிக்க வேண்டும் என்பதில்லை. இப்படியும் தத்தளிக்கலாம்.
மகிழ்ச்சியானவைகள் நிறைய இருக்கலாம். செய்ய
வேண்டியவைகள் ஒரு சில வகைகளே. அது போதும். முழு முற்றுமான மகிழ்ச்சியைக் களவாடி விட
முடியாது. மகிழ்ச்சி உள்ளுக்குள் உள்ளது. சிரித்துக் கொண்டே செருப்படி வாங்கியவர்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள்.
இது குறித்துச் சொல்லும் போது, குறிப்பாக...
எதுவும் சொல்ல முடிவதுமில்லை, செய்ய முடிவதுமில்லை.
வேறு விதமாகத்தான் ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றால் விட்டு விடுங்கள்.
மேலும் ஒரு குறிப்பாக, ஏதோ மருத்துவச்
செலவு இல்லாமல் இப்படி குருட்டுத்தனமாகச் செலவு செய்து கொண்டிருக்கிறார்களே என்று.
எத்தனை கதவுகளை உருவாக்குவார்கள்? அதற்காக எத்தனைப் பூட்டுகளை உருவாக்குவார்கள்?
நீங்களே பாருங்களேன்! வீடு என்பதே சிக்கலாகிக்
கொண்டு இருக்கிறது. அது பராமரிப்பதற்கு மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போய்க்
கொண்டு இருக்கிறது. தேவையில்லை, பிரயோஜனம் இல்லை என்றாலும் அதை உருவாக்கிக் கொண்டு
இருக்கிறார்கள். அதை உருவாக்காமல் இருக்க முடியாத ஒரு வியாதியில் சிக்கி விட்டார்கள்.
எதைச் செய்ய வேண்டுமோ அதைக் கட்டாயமாக
விலக்குகிறார்கள். எதை விலக்க வேண்டுமோ அதைக் கண்டிப்பாகச் செய்கிறார்கள். நிச்சயமாக
சொல்வதை நிராகரிக்கிறார்கள். வேண்டாம் என்பதை நிறைவேற்றுகிறார்கள். எதிர்பார்ப்பதைக்
கொடுக்கக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
இவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் பாதுகாப்பின்மையைத்தான்
அதிகப்படுத்துகின்றன. அச்சத்தைதான் அதிகம் உருவாக்குகின்றன. கைகளில் விலங்குகளிட்டு
அதை ஆபரணமாக நிறுவவதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. விலங்கிடப்பட்டவர்களுக்கே தெரியும்
அதன் இறுக்கமும், எரிச்சலும்.
இப்போது ஒருவாறாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்
உங்கள் மகிழ்ச்சி தொலைந்த இடத்தை. உடனே குதியாட்டாம் போடாதீர்கள். இன்னும் சில இருக்கின்றன...
அப்புறம்,
எதிலும் அவசரப்பட வேண்டியதில்லை. அவர்கள்
என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாகக் கேட்டுக் கொண்ட உடனே பதில் சொல்ல வேண்டும்
என்ற அவசியம் இல்லை. மெதுவாகவே சொல்லலாம். சொல்லாமலும் இருக்கலாம்.
ஒன்று உங்களுக்குக் கிடைக்காது என்று தோன்றலாம்.
அதற்கான நடைமுறைகள் எதுவுமே சரியாக அமையாமல் போகலாம். மிகப்பெரிய அளவில் அலைக்கழிக்கப்படலாம்.
அதன் ஒவ்வொரு முயற்சியின் போதும் தடைகள் ஏற்படலாம். நல்லது ஒன்றும் நிகழாமல் போகலாம்.
மிக நல்லது அது. அதில் நடக்கும் ஒரே நல்ல விசயம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்தான். அதுவும்
சிரிப்பான பாடங்கள். அவ்வளவு அபத்தமானப் பாடங்கள். வாழ்நாள் முழுதும் சிரித்துக் கொண்டே
இருக்கலாம். மற்றபடி நிகழ்வுகள் எல்லாம் ரண கொடூரம். இது போன்ற நிலைமைகள் வாய்ப்பது
அபூர்வம். வாழ்க்கையின் காமெடி ப்ளாக்குகள் டிராஜெடி எனும் வடிவில்தான் வருகின்றன.
*****
No comments:
Post a Comment