17 Oct 2018

அமைதிக்குள் அடியெடுத்து வையுங்கள்!


அமைதிக்குள் அடியெடுத்து வையுங்கள்!
எவரையும் எதுவும் சொல்ல முடிவதில்லை. அவரவர்க்கு அவரவர் மனக்குகை. பல விசயங்களைக் கலந்தாலோசித்தால் எதைத்தான் செய்வதோ? ஏன்தான் செய்கிறோமோ? என்று குழம்பி விடுவீர்கள்.  அப்படியானால் இது நம்மைப் பற்றியதா என நினைக்காதீர்கள். என்னைப் பற்றியதாகவும் இருக்கலாம். எழுதும் போது அப்படி ஒரு கோதா வந்து விடுகிறது.
            குறிப்பாக அப்படி நிகழ்ந்த தாழ்நிலையிலிருந்து (அது ரகசியம். வெளியில் சொல்வதற்கில்லை) உயர் நிலையை அடைய வேண்டும் என்பதற்காக நிறைய பைசா பார்க்க வேண்டும் என்று என்று நினைத்து தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்ட ஒன்றைப் பற்றி எழுதப் போகிறேன். அதற்காக சம்பவம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாம் பொதுமைபடுத்தப்பட்ட டால்டா கிடைக்காத நிலையில் பாமாயிலில் பொங்கப்பட்ட ஒரு பொங்கலைத்தான் எழுதப் போகிறேன்.
இதில் எது நான்/நீ நினைத்தபடி என்ன நடந்தது? எல்லாம் சிக்கலுக்குள் சென்று சிக்கியதுதான் மிச்சம். அனைத்தும் தேவையில்லாத வேலைகள். இப்போது அவைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட அமைதியாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. இதை முன்பே அதாவது இப்போதே அமைதியாக இருப்பதை அப்போதே அமைதியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சில சந்தர்ப்பங்களில் பாய்ந்து அடிக்கலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் அது முடியாது. பாய்ந்து அடிப்பதற்கு சந்தர்ப்பங்கள்தான் காரணம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் அமைய வேண்டும். அப்படி அமைந்தால்தான் அதைச் செய்யலாம். மற்ற நேரங்களில் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். வேறு வழியில்லை.
சம்பவங்கள் எது வேண்டுமானாலும் நடக்கட்டுமே, அது அப்படித்தான் நடக்கும். அதை மாற்ற முடியாது. ஆனால் நான் என்னை அமைதியாக இருக்கும் வகையில் என்னை மாற்றிக் கொள்ள முடியும். அதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. பயந்தவருக்கும், பயந்தாங்கொள்ளிக்கும் அதுதான் வழி. அதாவது பயந்தவர் வேறு, பயந்தாங்கொள்ளி வேறு.
எந்த இருவர் எண்ணங்களும் எப்போதும் ஒத்துப் போகாது. அதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி எண்ணங்கள் எப்போதும் ஒத்துப் போகாது என்பதைப் புரிந்து கொள்வதுதான். இது இப்போது நடப்பதில்லை. மனிதர்கள் தோன்றிய காலந்தொட்டே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நடக்கின்ற இது புதிதில்லை. ஒத்துப் போவதற்கான ஓர் எளிமையான முயற்சியை நாம் செய்து பார்க்கலாம். அவ்வளவுதான். அதற்கு மேல் முயன்று அவரின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியதில்லை. அது ஓர் எளிமையான முயற்சி மட்டுமே. வலிமையான முயற்சிகள் பயன் தராது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்து விட்டால் நீங்கள் அமைதியாகி விடுவீர்கள். அதைப் புரிந்து கொள்வது கஷ்டம்தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். இப்படி உங்களை இதைப் படிக்க வைத்து அமைதியற்ற நிலைக்கு ஆளாக்கி விட்டதாக நீங்கள் நினைக்கலாம். அதுவன்று விசயம், நீங்கள் அமைதியை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்பதுதான் விசயம். கொஞ்சம் கஷ்டப்படுங்கள், மரண அடி விழுந்த பிறகு அமைதி தானாகவே கிட்டி விடும். மீண்டும் கவனியுங்கள் மரண அடி, மரணத்திற்கான அடி அல்ல. அது கிட்டதட்ட மரணம் போன்றதுதான் ஆனால் மரணம் அல்ல. அதற்குப் பின் நீங்கள் செத்த சவம் போன்றுதான் இருப்பீர்கள். பாடையில் மட்டும் ஏற்ற மாட்டார்கள். சந்தோசந்தானே!
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...