11 Sept 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 8


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 8
            மாணவர்களுக்கானப் புத்தக இயக்கமாக செங்காந்தள் அறிவுத் திருவிழாவைத் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். செங்காந்தளின் எட்டாவது அறிவுத் திருவிழா, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், நாகராஜன்கோட்டகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 10.09.2018 - திங்கள் அன்று மிகச் சரியாக மாலை 3.00 மணி அளவில் தொடங்கி 4.00 அளவில் நிறைவு பெற்றது.
            மிகச் சரியாகத் திட்டமிட்டால் ஒரு விழாவை மிகச் சரியாகத் தொடங்கி மிகச் சரியாக நிறைவாகவே நிறைவு செய்ய முடியும் என்பதற்கு இவ்விழா கட்டியம் கூறியது.
            ஒரு விழா எளிமையாகும் போதுதான் அது பலரையும் சென்றடைகிறது. அத்தகைய ஓர் எளிமையை இந்த எட்டாவது விழாவில்தான் அடைய முடிந்தது. பெயரில் விழா என்ற வார்த்தை இருந்தாலும் இயல்பாக நடந்த நிகழ்வு இது.
            இந்த எளிமையான நிகழ்வு கிராம மக்கள் அனைவரையும் பள்ளியை நோக்கி இழுத்து வந்தது. ஒரு விழாவைச் சொன்ன நேரத்தில் துவங்க முடியும் என்பது அவர்களை ஆச்சரியப்படுத்தியது. அதே நேரத்தில் ஒரு குக்கிராமத்தில் இவ்வளவு நூல்களை வாங்குவார்களா என்ற வியப்பையும் அள்ளித் தந்தது.
            இவ்விழாவில் பேச்சுகளை அறவே குறைத்திருந்தோம். அதாவது ‍மேடைப் பேச்சுகளை. மிக எளிமையாக உரையாடினோம். புத்தகங்கள் குறித்து மாணவர்களும், மக்களும் என்ன கருத்துகள் கொண்டிருந்தார்களோ அந்தக் கருத்துகளை மட்டுமே உரையாடலின் களமாக அமைத்துக் கொண்டோம். புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு நிறையவே இருப்பதை அறிய முடிந்தது. அடிக்கடி வந்து இது போன்ற விழாக்களை நடத்த வேண்டும் என்பதை அவர்கள் தங்களின் அன்புக் கட்டளையாகவே வெளிப்படுத்தினார்கள்.
            நிச்சயமாக ஒரு மணி நேரத்தில் இவ்விழா அதாவது இந்நிகழ்வு நிறைவு பெற்றதில் அவர்களுக்கு நிறைவில்லை. அவர்கள் இன்னும் நடக்க வேண்டும், இன்னும் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பு மிகுந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டு மிகச் செறிவாக இந்நிகழ்வு நிறைவு பெற்றது. அதைத் தாண்டியும் நாம் அவர்களிடம் பேச என்ன இருக்கிறது? இனி அவர்களோடு பேச, உரையாட, விவாதிக்க அவர்களின் அனைவரின் கையிலும் ஒரு புத்தகம் இருக்கிறது. இனி அது பேசும். அதுதானே நம் எதிர்பார்ப்பும் லட்சியமும்.
            59 புத்தங்களை அவர்கள் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அந்த 59 புத்தகங்களும் 59 மறுமலர்ச்சிக்கான விதைகளாக முளை விடும்.
            இந்த 59 புத்தகங்களோடு அண்மையில் மன்னார்குடி ஒன்றியப் பகுதியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி & அறிவியல் சோதனைகள் நிகழ்வுக்காகப் பல பள்ளிகளிலிருந்து 146 புத்தகங்களை வாங்கிச் சென்று விதைத்திருக்கிறார்கள். ஆக எட்டாவது அறிவுத்திருவிழா வரை 205 புத்தகங்களைப் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்த்திருக்கிறோம்.
            ஒரு லட்சம் புத்தகங்களைப் பிஞ்சுக் கரங்களில் கொண்டு சேர்ப்போம் என்ற நம்முடைய இலக்கில் இன்னும் 97,686 புத்தகங்கள் என்பது நாம் கொண்டு சேர்க்க வேண்டிய இலக்கு. இந்த இலக்கில் தற்போது நாம் கொண்டு சேர்த்த 205 புத்தகங்கள் எனும் இலக்கை கழித்துக் கொண்டால் இன்னும் நாம் கொண்டு சேர்க்க வேண்டிய இலக்கு 97,481 புத்தகங்கள் ஆகும்.
            கரங்கள் கோர்ப்போம்! பிஞ்சுக் கரங்களில் புத்தகங்களைக் கொண்டு சேர்ப்போம்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...