8 Aug 2018

விண்ணில் எழும் சூரியன்


விண்ணில் எழும் சூரியன்
எமனுக்கு எத்தனை நாள் ஏக்கம் இருக்கும்
உம் தமிழைக் கேட்காமல் மனம் பொறுத்து இருக்கும்
போராடிப் பார்த்து முடியவில்லை உம்மை கொண்டு செல்ல
மண்டியிட்டு அழைத்துச் செல்கிறான் உம்மை மெல்ல

வானுக்கு ஒரு சூரியன் அங்கிருக்க
பூமிக்கு ஒரு சூரியன் இங்கிருக்க
வானத்துச் சூரியன் மறையலாம்
பூமியின் சூரியன் மறையலாமா
மண்ணில் தினம் எழும் சூரியன்
விண்ணில் சென்று உறையலாமா

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து சுழன்றவா
மரணத்துக்கு ஓய்வு கொடுத்து மீண்டு வா
முத்தமிழும் உம் சொல் பட்டு தித்திக்குமே
உம் மரண செய்தி சொல்கையில் கசக்கின்றதே

பெரியாரைப் பிரிந்து எத்தனை நாள்
இருப்பதெனச் சென்றாயோ
அண்ணாவை இழந்து இத்தனை நாள்
இருப்பதா எனச் சென்றாயோ

உம்மொழியால் செம்மொழி ஆன தமிழ்
பேனா பிடித்து நீ வளர்த்த பகுத்தறிவு
நா சுழற்றி நீ காத்த சமூக நீதி
போராடி நீ காத்த மாநில சுயாட்சி
உம் பேர் சொல்ல ஆயிரம் இருந்தாலும்
நீர் இல்லாமல் நீர் இல்லா நிலமாகிறோம்
முக்கனியே நீர் இல்லாமல் வித்தில்லா பழமாகிறோம்

நூற்றாண்டுப் போராட்டமே
திராவிடத்தின் உயிரூட்டமே
கழகத்தின் காவல் மரமே
இலக்கியத்தின் பெட்டகமே
சம நீதியின் வரலாறே
சம கால போர்வாளே
ஆரூரில் புறப்பட்டது உம் பயணம்
காவிரியில் நிகழ்ந்தது உம் மரணம்

வரலாற்றில் இனி எழுத என்ன இருக்கிறது
வரலாறே நீ எழுதியது அன்றோ
கண்கள் கண்ணீர் கடலாக கடலை விட்டு
சூரியரே விண்ணில் எழுதல் நன்றோ
(ஓய்வறியா சூரியன் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ஓய்வு கொள்ள, கடிகாரத்தைப் பொருட்படுத்தாது காலமாய்ச் சுழன்ற அவர் காலமான பொழுதில்...07.08.2018 செவ்வாய் மாலை )
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...