7 Aug 2018

புரிந்தாலும் புண்ணியமில்லை எனும் போது...

புரிந்தாலும் புண்ணியமில்லை எனும் போது...
எதையெடுத்தாலும் ஐந்து ரூபாய்க்காரன்
தண்டலிலிருந்து தப்பிக்க
ஐம்பது ரூபாயை எடுத்து வைப்பான்.
எழுபது மி.லி. தேநீரை
நூறு மி.லி. போல பாவித்துக் கொடுப்பவன்
பத்து ரூபாய்க்கு மூன்று ரூபாயை
மாமூலாகக் கட்டுவான்.
சலுகைகள் தரும் திட்டத்திற்காக
வரிசையில் நிற்பவன்
தில்லுமுல்லுகள் சகஜமெனவும்
தன் முறை வந்தால் போதுமெனவும்
புலம்பிக் கொண்டிருப்பான்
மானியத்திற்காக மயங்கி நிற்பவன்
எடுப்பதை எடுத்துக் கொண்டு
கொடுப்பதைக் கொடுத்தால் போதுமென
வெறுத்துப் போய்
அலைந்து கொண்டிருப்பான்
ஒரு கை மாறி கடக்கும் நூறு ரூபாய்க்கு
ஊழலின் விழுக்காடு மேலும்
மாமூலின் விழுக்காடு கூடுதலாக
லஞ்சத்தின் விழுக்காடு போக
வரியின் விழுக்காடு ஆக
கணக்குப் பார்த்தப் பாவத்துக்கு
இருநூறு ரூபாயாய்க் கனத்துக் கொண்டிருக்கும் தேசத்தில்
ஐம்பது ரூபாயில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
என்னதான் செய்வார்கள்
கருத்துப் போனப் பணத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு?
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...