2 Aug 2018

மீண்டும் மண்சாலை


மீண்டும் மண்சாலை
            அடிப்படைத் தேவைக்கு நம் வீட்டில் இருக்கும் மணலை அள்ளினால் விடுவார்களா? பிடித்து விடுவார்கள்.
            வயலைத் தூர்த்து கட்டிடம் கட்டுவதற்காக மண்ணை அள்ளிக் கொண்டு வருகிறேன் என்று மெயின் ரோடு முழுவதும் மண்ணை வாரி இறைத்துச் செல்லும் வாகனங்கள் பிடிபடாமல் சென்று கொண்டே இருக்கின்றன.
            அந்தச் சாலையில் செல்ல முடிகிறதா?
            களிமண் அப்படியே தார் ரோட்டுக்கு பரு வந்தது போல பிடித்துக் கொண்டு, வண்டியில் சென்றால் தட தட என்று இருக்கிறது கட்ட வண்டியில் செல்வதைப் போல.
            இந்த நேரம் பார்த்து மழை பெய்து தொலைக்கிறது.
            அது தார் சாலையா? மண் சாலையா? என்று நிலைமை.
            வருகின்ற பேருந்து வழுக்கிக் கொண்டு போய் வாய்க்காலில் இறங்குகிறது.
            பேருந்துக்கு இந்த கதி என்றால் இரு சக்கர வாகனத்துக்கு?
            அப்படித்தான் பாஸ் சேறில் சக்கரம் சிக்கி வழுக்கி விழுந்து விட்டேன். கை கால்களில் சிராய்ப்புகள்.
            தோலைப் பெயர்த்து விட்டது.
            ரத்தம் வெளியே வருகிறது. உள்ளுக்குள் வலிக்கிறது.
            கீழே விழுந்ததில் அந்த இரவுப் பொழுதில் வண்டியின் லைட் நின்று விட்டது.
            இப்போது அந்த கும்மிருட்டில் லைட் வெளிச்சம் இல்லாமல் விழுந்த வண்டியை தள்ளிக் கொண்டு வருகிறேன். வண்டி மேல் ஏறிக் கொண்டு வந்த எனக்கு இப்போது வண்டி என் மீது ஏறி வருவதைப் போல இருக்கிறது.
            ஒரு வழியாக வண்டியின் லைட்டை மெக்கானிக் ஒருவர் சரி செய்து கொடுத்த பின் ரத்தம் வழிய வழிய வீடு வந்து அப்புறம் ஒரு மருத்துவரைப் பார்த்து சிகிச்சை செய்து கொண்டேன்.
            நாட்டில் வானங்களைச் சரி செய்யும் மெக்கானிக்குகள் வீதிக்கு வீதி இருக்கிறார்கள். மருத்துவர்களைத் தேட வேண்டியிருக்கிறது. எல்லாரும் டவுனில் ஒரு குறிப்பிட்ட வீதியில் கும்பலாக இருக்கிறார்கள்.
            கையில் அப்படியே திட்டுத் திட்டாய் பெயர்த்துத் தள்ளியதைப் பார்க்க வேண்டும் என்றனர் பிள்ளைகள். நான் என்ன மருதாணியா போட்டு வைத்திருக்கிறேன் கையைக் காட்ட. காட்ட மறுத்து விட்டேன்.
            காலில் அடிப்பட்டதையும் காட்ட மறுத்து விட்டேன். கைலியை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டேன். ரத்தக் காயங்களைக் குழந்தைகளுக்குக் காட்டக் கூடாது. பெயர்த்துத் தள்ளிய கப்பிகளுக்கு வலிக்கும் என்று உச் கொட்டுவார்கள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...