எளிமையின் பாதை
உலகில் எவ்வளவோ நடைபெறுகிறது. எல்லாவற்றையுமா
கண்டு கொள்கிறோம். தொடர்புடையவைகளை மட்டுமே கண்டு கொள்கிறோம். அந்தத் தொடர்புதான்
மனம். அந்தத் தொடர்பு இல்லாவிட்டால் எதையும் மனம் கண்டு கொள்ளப் போவதில்லை. இதைப்
புரிந்து கொள்வதுதான் அனைத்திலிருந்தும் விடுவிக்கிறது. முடிவில் அந்தப் புரிதலையும்.
அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு மரணம் நிகழ்ந்து விட்டது. நீங்கள் உயிர்ப்புடன்
இருப்பீர்கள்.
இது மிகவும் எளிய செயல்தான். எளிமையாக
நடந்து விடாத செயல். தொடர்பைப் புரிந்து கொண்ட பிறகு அதை விடுவதற்கு விருப்பம் இல்லாதவர்கள்
இருக்கிறார்கள். அத்தொடர்பைப் புரிந்து கொள்வதும், அதை விளக்குவதும் அலாதியான சுகம்
தரும் ஒன்று. அச்சுகத்திற்கு ஆசைபட்டு விளக்குபவர்களாக ஆகியிருக்கிறார்கள். விளக்க
முயற்சித்தவர்கள் எவரும் அதைக் கடந்து செல்ல விரும்பாதவர்கள். அவர்கள் அற்புதங்களின்
மேல் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களால் எளிமையைக் கடந்து செல்லும் அற்புதத்தை நிகழ்த்த
முடியாது.
எளிமையானவர்கள் மிக எளிமையாக கடந்து செல்கிறார்கள்.
ஏனென்றால் அது எளிமையின் பாதை. எதுவுமில்லாத பாதை. எதுவுமில்லாத பாதையில் எப்படிக்
கடப்பீர்கள்? இங்கு எல்லாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அவ்வளவு விரைவாக
ஒரு மரணத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். ஒரு பிறப்பைத் தொடங்கி வைக்கும் மரணம் என்று
அதைச் சொன்னால் யாரும் ஏற்க மாட்டார்கள்.
உங்களால் ஒரு மரணத்தின் மூலம் பிறக்க முடியும்
என்ற புரிதல் இருந்தால் அதற்கு நீங்கள் சம்மதிப்பீர்கள். மரணம் மீள முடியாத பாதை என்ற
நம்பிக்கை இருக்கும் வரை நீங்கள் அந்தப் புரிதலைக் கடந்து வர ஒப்புதல் தர மாட்டீர்கள்.
நீங்கள் அங்கே நின்று விடுவீர்கள். நின்று கொண்டிருக்கும் ஒரு பாதையில் கடத்தலைப்
பற்றிப் பேசிக் கொண்டிருப்பீர்கள். நதியில் மிதந்து போகத் தெரியுமென்றால் உங்களுக்குப்
படகு எதற்கு?
*****
No comments:
Post a Comment