21 Jul 2018

நாசகார வேலையைத் துவக்குவதில் என்ன இருக்கிறது?


நாசகார வேலையைத் துவக்குவதில் என்ன இருக்கிறது?
            ஒருவர் உங்களை முட்டாள் என்று சொன்னால் அதில் கவலைப்பட ஏதுவுமில்லை. அவர் உங்களைப் பற்றி புரிந்து கொண்டது அவ்வளவுதான். ஒருவர் உங்களை புத்திசாலி என்று சொன்னால் அதில் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை. அவர் உங்களைப் பற்றி தெரிந்த கொண்டது அவ்வளவுதான்.
            மனிதர்களுக்கு வார்த்தைகள் தேவை. அதன் உள்ளார்ந்த பொருள்கள் முக்கியமில்லை. தாங்கள் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு அவசியமில்லை.
            மனிதர்களால் வார்த்தைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. அவர்கள் ஏதேனும் வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதற்கெல்லாம் ஆழமான அர்த்தங்களைத் இருக்க வேண்டியதில்லை. ஆழமற்ற மனதால்தான் அவர்கள் அத்தகைய வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆழமான மனம் எந்த வார்த்தைகளையும் உதிர்ப்பதில்லை.
            வார்த்தைகள் மூலம் எதையாவது வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பழக்கத்திற்கு மனித சமூகம் ஆளாகி விட்டது.  வார்த்தைகளே தேவையில்லை எனும் போது அதை வெளிப்படுத்தவும் வார்த்தைகளையே அது பயன்படுத்துகிறது.
            சொல்பவர்களுக்குச் சாதாரணமாகத் தெரியும் வார்த்தைகள் கேட்பவர்களுக்கு அணுகுண்டாக வெடிக்கும். கேட்பவர்களின் நிலையில் நின்று வார்த்தைகளை உதிர்ப்பவர்கள் கனிகளை உதிர்க்கும் மரத்தைப் போன்றவர்கள். இங்கே காய்களை உதிர்க்கும் மரங்களே அதிகம்.
            சொல்பவர்களை என்ன சொல்ல முடியும்? கேட்பவர்கள்தான் சொல்பவர்களைக் குழந்தையாக பாவித்தோ அல்லது சொல்பவர்களின் வார்த்தைகளைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமலோ தங்களைப் பாதித்துக் கொள்ளாமல் காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
            ஏனென்றால்,
            சகிக்க முடியாத வார்த்தைகளையும் கேட்டு பொறுமையாக இருந்தால் சத்தியமாக நீங்கள்தான் மனித குலத்தின் ரட்சகர்.
            வார்த்தைகள் உங்களைக் கோபப்படுத்தினால் சத்தியமாக நீங்கள் ஒரு நாசகார வேலையைத்தான் துவங்கி வைக்கிறீர்கள்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...