19 Jul 2018

வருங்கால சந்ததிக்கான நமது பரிசு


வருங்கால சந்ததிக்கான நமது பரிசு
            ஒருவரின் உணவுப் பழக்கத்திற்காக அவரை குறை சொல்ல முடியாது. அவர் அப்படியான உணவுப் பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறார். அதன் பின் அவரும் அடிமையாகி இருக்கிறார். மாற்றங்களை மிக மெதுவாகத்தான் நிகழ்த்த வேண்டும். அங்கே பழக்கம் எனும் ஆணிவேர் ஆழ வேரூன்றி இருப்பதால் அதை சிறிது சிறிதாகத்தான் மாற்றத்திற்கு உள்ளாக்க இயலும்.
            முதல் கட்டமாக,
            உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும் போது இனிப்பு கார வகைகள், ரொட்டி வகைகளை வாங்கிச் செல்வதை விட பழங்கள் வாங்கிச் செல்லலாம். பேரீச்சை, கடலை மிட்டாய், நிலக்கடலை இவைகளையும் வாங்கிச் செல்லலாம். அப்படி வாங்கிச் செல்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு மறைமுகமாக உதவலாம்.
            புத்தகங்களைக் கூட வாங்கிக் செல்லலாம்.
            யார் வீட்டிற்குச் செல்கிறோமோ அவர்கள் வீட்டில் சிறுவர்கள் இருந்தால் சாக்லேட்டுகள்தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்றில்லை, அவர்கள் படிக்கும் வகையிலான சிறுவர் இதழ்கள் கூட வாங்கிச் செல்லலாம். வாசிப்புப் பழக்கத்துக்கு இதன் மூலம் வித்திடலாம்.
            இப்படித்தான் என்றில்லை. மாற்றத்தை எந்தப் புள்ளியிலிருந்தும் துவங்கலாம். நம் வீட்டில் விளைவித்த காய்கறிகளைக் கூட நண்பர்கள், அன்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு செல்லலாம்.
            இனிப்பு, கார வகைகளைத்தான் அவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாமே நம் கை பக்குவத்தோடு தயாரித்து எடுத்துச் செல்லலாம். அவர்களின் மீதான நம் அக்கறையின் வெளிப்பாடு அதுதான்.
            நமது வருகையை அறிந்து அவர்கள் தேநீர், குளம்பி தயாரிப்பது தெரிந்தால் உடன் அதை தடுத்து, இந்தாருங்கள் மூலிகைப் பொடி என்று கொடுத்து மூலிகைத் தேநீரைத் தயாரிக்கச் சொல்லும் வகையில் மூலிகைப் பொடிகளைக் கூட வாங்கிச் செல்லலாம். நம் வீடுகளில் மூலிகைகளை விளைவித்து இருந்தால் மூலிகைகளைக் கூட கொண்டு சொல்லலாம்.
            பாரம்பரிய அரிசி, செக்கு எண்ணெய், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் இவைகளை வாங்கிச் செல்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடுவது மூலம் விழிப்புணர்வையும் உருவாக்கலாம்.
            சரியான வாழ்க்கை முறைக்கு நாம் ஒருவர் மட்டுமே மாற்றத்தைத் துவங்கிப் பயனில்லை. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்துக்குத் தயாராக வேண்டும். அதை ஒரு கலாச்சாராமாக, பண்பாடாக வளர்த்து எடுக்க வேண்டும். அதற்கு நம்மை ஆட்படுத்தி அர்ப்பணித்துக் கொள்வது மூலம் வருங்கால சந்ததி நம்மை வாழ்த்தும் என்றால் அது மிகையில்லை..
            வழங்குவதும், கொடுப்பதும் தவறான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவோ, நொறுக்குத் தீனிகளை ஊக்குவிப்பதாகவோ இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
            இந்த நூற்றாண்டில் ஒரு கலாச்சாரப் புரட்சி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...