18 Jul 2018

பயத்திலிருந்து விடுபட....


பயத்திலிருந்து விடுபட....
            ஒருவரின் அதீத பயம் எதையும் நம்பாமல் செய்து விடுகிறது. பயத்தை விடாமல் எதையும் நம்ப முடியாது. அவர் நம்புவதற்குப் பிரயத்தனப்படுவார். எதையாவது நம்பினால்தான் பயத்திலிருந்து விடுபட முடியும் என அவர் அறிவார். அவரால் எந்த நம்பிக்கையிலும் முழுமையாக நுழைய முடியாது.
            பயத்திலிருந்து விடுபட எதையும் நம்பாமல் இருப்பது கூட ஒரு நல்ல வழி. நம்பிக்கை கொள்வதும் இன்னொரு நல்ல வழி. மனதைப் பொருத்த வரையில் நம்புவதே நம்பாமல் இருக்கச் செய்கிறது. நம்பாமல் இருப்பதே நம்பிக்கை கொள்ள செய்கிறது.
            பயத்தை எதுவும் செய்ய முடியாது. நம்பிக்கை பயத்துக்கு ஒரு மாற்று. அதுவே முழுமையான மாற்று அன்று. புரிந்து கொள்ளுதல் ஒரு நல்லவிதமான மாற்று. புரிந்து கொள்ளுதல் மூலம் பயம் இருக்கிறது, அல்லது இல்லாமல் போகிறது.
            ஒரு நுணுக்கமான உண்மையைப் புரிந்து கொள்ள நுட்பமான பார்வை தேவைபடுகிறது. பயத்தைப் போக்கிக் கொள்ள அதை அப்படியே விட்டு விடுவது நல்ல வழி. அதை அப்படியே விட்டு விடும் போது கண்டு கொள்ளப்படாத தன்மையை அடைகிறது. அது அழிந்து விடுகிறது. அதற்கு எல்லையற்ற துணிச்சல் தேவைபடுகிறது. அந்த துணிச்சல் இருந்திருந்தால் பயமே உள்நுழைந்திருக்கப் போவதில்லை.
            அந்த எல்லையற்ற துணிச்சல் கண்டுகொள்ளாத தன்மையில் இருக்கிறது. பழக்கம் விடுமா? அதற்கு எதையாவது கண்டு கொண்டே இருக்க வேண்டும். அது பயத்தையும் கண்டு கொள்கிறது. பயத்தை உணர்வதும், பயத்தோடு இருப்பதும்தான் பாதுகாப்பு என மனம் நினைக்கிறது என்பதை ஆழ்ந்து பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும். எவ்வளவு முயன்றும் பயத்தை விடுபட முடியாமல் தவிப்பதற்கு அது ஒரு காரணம்.
            பயத்திலிருந்து விடுபட அதை அனுமதிப்பதும், அதை ஏற்றுக் கொள்வதும் முக்கியம். அதைப் புரிந்து கொள்வதன் மூலம் அதிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அந்த விடுதலை கிடைக்க அதைப் புரிந்து கொண்டோம் என்ற உணர்விலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்பது முக்கியம். அந்த விடுதலையை எவரும் எவருக்கும் தர முடியாது. அது அவரவர்களாலே அடையப்பட வேண்டியது. அவரவர்களால் அடையக் கூடியது.
            அடைவதும் அடையப்படாமல் போவதும் விடுபடுவதில்தான் இருக்கிறது. விடுபடுவது அவ்வளவு எளிதா என்ன? அதற்கு மாபெரும் துணிச்சல் தேவைப்படுகிறது. அந்தத் துணிச்சலை அடையாமல் போனால் காலம் முழுவதும் பயத்தைச் சுமப்பதைத் தவிர்க்க முடியாது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...