17 Jul 2018

எளிய முறை தியானம்


எளிய முறை தியானம்
            தியானம் கடினமான ஒன்றா என்று கேட்கிறார்கள். தியானத்தைப் போன்ற எளிமையானது எதுவுமில்லை.
            எளிமையைக் கடினமாக நினைக்கும் உலகின் பொதுபுத்தியின் காரணமாக தியானம் கடினமான ஒரு முறையாக மாறி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
            தியானம் என்பது கற்றுக் கொள்வதற்குரிய ஒன்றாகாது. அது கண்டு கொள்வதற்கு உரிய ஒன்று. அதற்கான செயல்முறைகளைக் காட்டலாம். அதைப் பிடித்துக் கொள்வதும், நழுவ விடுவதும் அவரவர்களின் கைகளிலே இருக்கிறது.
            கற்றுக் கொள்ளாமல் இருக்கும் செயல்முறையின் ஒரு துவக்கப்புள்ளியே தியானம்.
            நிறைய கற்றுக் கொண்டாயிற்று. அந்தக் கற்றுக் கொள்ளல்கள் மூலம் சுயத்தை அழித்துக் கொண்டாயிற்று. அழிவின் முடிவில் ஒரு மீட்சி தேவைபடுகிறது. அந்த மீட்சிக்காகத்தான் தியானத்தை நோக்கி பலரும் ஓடி வருகின்றனர். அப்படிப் பார்த்தால் அப்படி ஓடி வருபவர்களுக்கு தியானம் ஒரு மோசமான செயல்முறை. அது தன்னை நோக்கி ஓடி வருபவர்களை விரட்டி அடிக்கிறது.
            எவ்வளவு ஆர்வமாக ஓடி வருகிறார்களோ, அவ்வளவு அதிகமாக விலகிக் போகுதலைத் தியானம் எளிதில் செய்து விடும்.
            தியானத்துக்காக நீங்கள் எதையும் செய்ய வேண்டாம். அப்படியே இருங்கள். அங்கேயே நில்லுங்கள். அது ஒரு தியானம். ஏனென்றால் தியானம் என்பது இயல்பு. இயல்போடு இருக்கும் இயல்பு.
            வெறுமனே சாலையைக் கவனிப்பது போன்ற ஒரு நிகழ்வு. சாலையின் ஓரத்தில் நின்று சாலையைப் பாருங்கள். வாகனங்கள் செல்கின்றன. ஒன்றுடன் ஒன்று மோதாமல் அல்லது ஒன்றோடு ஒன்று மோதி எப்படியோ வாகனங்கள் செல்கின்றன. வாகனங்கள் செல்வதில் விதிமீறல்கள் இருக்கலாம். விதிப்படிச் செல்லும் வாகனங்கள் இருக்கலாம். இப்போது ஒரு போக்குவரத்துக் காவலரைப் போல் இறங்கி எதையும் சரிசெய்து விட வேண்டாம். இன்னும் கவனியுங்கள். செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றையும் கவனியுங்கள். கவனியுங்கள் என்ற சொல் கடினமாகப் பட்டால் தயவுசெய்து அதைத் தூக்கி எறியுங்கள். வெறுமனே பாருங்கள். எவ்வளவு நேரம் என்பது கணக்கில் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். போதும் என்று தோன்றினால் நிறுத்தி விடுங்கள். இப்போது உங்களது வாகனத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த அதே சாலையில் நுழையுங்கள். உங்களால் எவ்வளவு லாவகமாக உங்கள் வாகனத்தை இயக்க முடிகிறது. நிச்சயமாக தவறாக வாகனத்தை இயக்கும் ஒருவரை நீங்கள் திட்டிக் கொண்டிருக்க மாட்டீர்கள். அவரின் தவறை அனுசரித்து உங்கள் வாகனத்தை லாவகமாக நீங்கள் திருப்பிக் கொண்டிருப்பீர்கள். தவறாக வாகனத்தை இயக்கியவர் வெகு எளிதாக சரியாகுவார். அவர் சரியாகித்தான் ஆக வேண்டும்.
            மனதை ஒரு சாலையாகக் கருதி, அதில் எழும் எண்ணங்களை வாகனங்களாகக் கருதிப் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ரசிகனைப் போல் ஆர்வ கோளாறில் விளையாடுபவருக்குக் கருத்துச் சொல்ல ஆரம்பித்து விடாதீர்கள். வெறுமனே ஆட்டத்தை ரசியுங்கள். உங்கள் எண்ணங்களில் ஒன்றையொன்று இடித்து விடாமல் பயணிக்கும் சூட்சமம் கிடைத்து விடும். இது கற்றுக் கொடுத்து அடையும் ஒன்றல்ல. வெறுமனே பார்த்தலில் அடையக் கூடிய ஒன்று.
            வெறுமனே பார்த்தலுக்கு உங்கள் பார்வையை நீங்கள் விட்டாக வேண்டும். உங்களது பார்வை என்று நீங்கள் சொல்லிக் கொள்ளும் அதுதான் விபத்துகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இன்னும் உண்மையைச் சொன்னால் அது உங்களது பார்வையே அல்ல. அது கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு பார்வை. திணிக்கப்பட்டிருக்கின்ற ஒரு பார்வை. உங்களுக்கான சுய பார்வையை அது தடுத்துக் கொண்டு இருக்கிறது. உங்களது கண்களால் பார்க்காமல் இன்னொருவரது கண்களால் பார்ப்பதைப் போல அது. அந்தக் கண்களைத் தூக்கி எறிந்து விட்டு உங்களது கண்களால் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
            நீங்கள் வெறுமனே பாருங்கள். உங்களது பார்வையை அடைவீர்கள். அந்த பார்வையை அடைவது கூட நீங்கள் அறிய மாட்டீர்கள். அந்தப் பார்த்தலுக்கும் உங்களுக்குமான வேறுபாடு அழியும் நிலையில் புரிந்து கொள்வீர்கள், கற்றுக் கொடுக்கும் எல்லா முறைகளுக்கும் எதிரான செயல்முறை தியானம் என்பதை.
            தியானம் என்பது வெறுமனே பார்த்தல்தான்.
            ஒரு நொடியில் நிகழக் கூடிய அதற்காக நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
            இந்த நோடியில் கூட அது அடையக்கூடியதே, வெறுமனே நீங்கள் பார்க்கத் தயாராக இருந்தால்.
            இந்த வழிமுறைக்கு ஒரு சொல் தேவைப்படுகிறது. அது தியானம் என்று சொல்லால் வழங்கப்படுகிறது. மற்றபடி அந்தச் சொல்லால், அதை விளக்கும் செயல்முறைகளால் அடையப்படக் கூடியதல்ல அது. உங்களால் பார்க்க முடியுமானால் அது அடையப்படக் கூடிய ஒன்றே.
            அதன் பின் எல்லாம் இயற்கையின் மலர்தலைப் போல எல்லாம் நிகழ்கிறது. அதனால் நீங்கள் எந்த அற்புதத்தையும் சாதித்தவர்கள் ஆகி விட மாட்டீர்கள். நீங்கள் ஒரு மலலைப் போல மலர்கிறீர்கள். அப்படி மலரச் செய்வதை இயற்கை அற்புதம் என்று சொல்லிக் கொள்வதில்லை. அது இயற்கையின் இயல்புகளில் ஒன்று. அந்த இயற்கையின் இயல்பை அடைகிறீர்கள் அவ்வளவே. தியானத்தின் மூலம் அற்புதத்தை அடைய அதை நீங்கள் நிகழ்த்துகிறீர்கள் என்றால் அது தியானமே அல்ல. கற்றுக் கொள்ள முயற்சிக்கும் இன்னொரு செயல்முறைதான் அது. கற்றுக் கொள்ளுதல் என்பது திணிக்கப்படும் ஒரு பிம்பம். தியானம் என்பது அசல். அசலை விட பிம்பம் கவர்ச்சிகரமாக இருப்பதற்கு தியானம் என்ன செய்யும் சொல்லுங்கள்.
            கற்றுக் கொள்ளுதல் மூலம் ஒருவர் இன்னொருவராக மாறத்தான் முயற்சிக்கிறார். தியானம் இந்த மாற்றங்களுக்கு எதிரானது. அது உங்களை உங்களாக இருக்கச் சொல்லும் ஒன்று. நீங்கள் நீங்களாக இருக்க பயப்படுவீர்கள் என்றால் தியானத்தைப் போன்ற உங்களுக்கு எதிரான செயல்முறை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...