சரியான தர நிர்ணய அளவுகோல்
யோசிப்பதற்கு எதுவுமே இல்லை எனும் போது
மனம் கொள்ளும் அமைதியே வாழ்ந்ததற்கான ஒரு துளி நிறைவு.
அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
மழை பெய்து அதுவாக ஓய்ந்து விட்டது.
மனதுக்குள் பிரச்சனையோ, நெருக்கடியோ
எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பதை உணரும் தருணம் அது.
கண்டு கொள்ளாமல் இருந்தால் அதுவே சிறிது
நேரத்தில் ஒரு பனிக்கட்டியைப் போல கரைந்து மறைந்து விடும்.
எதையும் நீண்ட நேரம் தன் வசம் வைத்திருக்க
மனத்தால் முடியாது. மாறிக் கொண்டிருப்பதே மனதின் இயல்பு.
ஒருவர் தாமாக அழுத்தம் கொடுத்தாலொழிய,
தாமாக விடாப்பிடியாக பற்றிக் கொண்டாலொழிய எதையும் நீண்ட நேரம் தன் வசம் வைத்திருப்பது
என்பது மனத்தால் இயலாது.
எப்போதும் கவலையோடு இருப்பதாக ஒருவர்
சொன்னாலோ, எப்போதும் ஆனந்தமாக இருப்பதாக ஒருவர் சொன்னாலோ அது ஒரு வகை கடைந்தெடுத்தப்
பொய்.
அப்படி ஒரே வகையான மனநிலை மனதுக்குச் சாத்தியமில்லை.
வேண்டுமானால் ஒருவர் அவைகளை அப்படியே விட்டு
விடலாம். அப்படியே விட்டு விடுபவருக்கு வருவதும் போவதும் தெரியாமல் அவைகள் நிகழ்ந்து
கொண்டிருக்கும், அவ்வளவுதான். அவரை நாமெல்லாம் சேர்ந்து ஞானம் அடைந்தவர் என்று பிதற்றிக்
கொள்ளலாம். அவரை மகான் என்றும் உளறியும் கொட்டலாம்.
எல்லாம் முடிவடைந்த ஒருவர் அது குறித்துப்
பேச முடியாது. பேசுவதன் மூலம் முடிவை எட்ட முடியாத ஒன்று இது.
நமது ஞானிகளுக்கு, நமது மகான்களுக்கு பேசாமல்
இருப்பது கஷ்டம். அளவிட முடியாத ஞானம் என்பது பேசாத் தன்மையிலிருந்தே மெளனமாக வழிகிறது.
அவர்கள் பேசுவார்கள். அவர்கள் பேசுவதிலிருந்தே அளவிடக் கூடிய அவர்களின் ஞானத்தின் தன்மையை
அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக தேவைப்படுவது அளவிடக் கூடிய ஞானமாகத்தான்
இருக்கிறது. அப்போதுதான் ஒருவரின் ஞானம் இன்னொருவரின் ஞானத்தை விட அதிகமாக இருக்கிறது
என்பதை ஒப்பிட்டுக் காட்ட இயலும். அது என்ன வகை ஞானம் என்றால் அது ஒரு வகை ஞானம். வெறும்
உண்மை மட்டுமல்லாது நிறைய நகல்களும் அல்லவா தேவையாக இருக்கிறது!
*****
No comments:
Post a Comment