எதுவும் நடக்கலாம்! எப்படியும் கடக்கலாம்!
கோபத்தில் இருப்பவர்கள் யாரையும் மதிப்பதில்லை.
அவர்கள் மற்றவர்களை உதாசீனப்படுத்தவே கோபப்படுகிறார்கள். இது தெரியாமல் எஸ்.கே. நிறைய
இடங்களில் கோபத்தில் இருப்பவர்களை அமைதிப்படுத்துகிறேன் என்று பலமுறை அவமானப்பட்டிருக்கிறார்.
அப்படி அவமானப்பட்டதற்காக வருத்தமும் பட்டிருக்கிறார். நிலைமை இதுதான் என்று தெரிந்தால்
அதே தவறை மறுமுறை செய்யாமல் இருக்கலாம் என்பதற்காகத்தான் எஸ்.கே. இதை அனைவருக்காகவும்
பிரத்யேமாகச் சொல்கிறார். ஆனால் இதனால் நீங்கள் கோபமாகலாம் என்பதை எஸ்.கே. கணிக்கவில்லை
பாருங்கள்!
*****
"செய்தது எதையும் தவறு என்று நினைக்கத்
தேவையில்லை" என்று எஸ்.கே. ஒரு முறை அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
இப்படி அவர் சொன்னதற்காக "ஏன் அப்படி?"
என்ற கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது.
"அங்கிருந்துதான் நாம் பின்வாங்குகிறோம்.
வேறு வழியில் சென்றிருக்கலாமோ என்று சிந்திக்கிறோம்." என்றார் எஸ்.கே.
"அப்படியானால் அப்போது செய்த அதை
சரியென்று நினைத்துக் கொள்ளலாமா?" என்று எஸ்.கே. விடம் கேட்கப்பட்டது.
"அதை சரி எனவோ தவறு எனவோ எப்படியும்
நினைக்க வேண்டியதில்லை. அந்த நேரத்தில் முடிந்தது அவ்வளவுதான். அதற்கு மேல் நினைக்க
ஒன்றுமில்லை", என்று முடித்தார் எஸ்.கே.
எஸ்.கே.யின் மேல் சடசடவென ஏதோதோ வந்து
விழ ஆரம்பித்தன.
"தயவுசெய்து நாங்கள் செய்வதைத் தவறு
என நினைக்காதீர்கள்!" என்று குரல்கள் ஓங்கி ஒலித்தன.
"நான் உங்களிடம் பேசியதைத் தவறு என
நினைக்கவில்லை!" என்றார் எஸ்.கே. கம்மிய குரலில்.
*****
No comments:
Post a Comment