11 Jun 2018

ஓம் சாந்தி ஓம்!


ஓம் சாந்தி ஓம்!
            நாட்டில் செத்தவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கிறார்களோ இல்லையோ சாவைக் கொண்டாடித் தீர்த்து விடுகிறார்கள். அதற்கிடையே துக்கம் அனுஷ்டிப்பது போல ஒரு நடிப்பையும் நடித்துத் தீர்த்து விடுகிறார்கள்.
            ஒரு சாவு விழுந்த நாளில் மட்டும் அந்த ஊரின் டாஸ்மாக் வருமானம் பல மடங்கு எகிறியிருக்கும். சாவு என்பதே குடியும், கும்மாளமுமாக மாறி விட்டது. அதற்கப்புறம் சண்டைகள், பிரச்சனைகள் தனிக்கதை.
            இப்படி இறந்து போன ஒருவரை அடக்கம் செய்ய சென்ற இடத்தில் குடிபோதையில் விழுந்த ஒருவர் விழுந்ததுதான். மறுநாள் காலையில் அவராக மயக்கம் தெளிந்து எழுந்து வீடு வந்து சேர்ந்தார்.
            செய்தி அறிந்த அக்குடிமகனின் தாய் தெருவை ரண களமாக்கி விட்டார். "எம் புள்ளைய மயானத்துல படுத்துக் கிடக்கத்தானா பெத்தெடுத்தேன்?" என்பது அந்த ரண களத்தில் கேட்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி. "இவ்வளவு பேர் போனானுவளே, எம் புள்ளைய மட்டும் மயானத்துலேயே விட்டு வந்துட்டானுவோளே! சாவு கிராக்கிக!" என்பது இரவு வீடு திரும்பாத மகனைப் பற்றிய கவலையேதும் இன்றி தூங்கிய அத்தாய் கேட்ட மற்றொரு முக்கியமான கேள்வி.
            இது நிற்க!
            அப்புறம் கருமாதி.
            மாமன், மச்சான், பங்காளி வகையறாவில் எவராவது ஒரு பெரிய மனிதர் அத்துகிட்டுப் போவார். அவரைச் சமாதானம் செய்வது இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை போலவோ, இஸ்ரேல் பாலதீஸ்னப் பிரச்சனை போலவோ ஆகி விடும். எவ்வளவு சரியாக நடந்தாலும் பிரச்சனை செய்பவர் பிரச்சனை பண்ணி விட்டுதான் போவார். அப்புறம் சொத்துப் பிரிப்புகள். வெட்டுக் குத்துகள் சகஜமாக நடைபெறும். இதெல்லாம் குடும்பத்துக்குள்ள சகஜமப்பா என்று பெரிசுகள் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, தாடியைத் தடவி விட்டுக் கொண்டு போவார்கள்.
            சண்டை போட்ட சனங்கள் இறந்தவரின் முப்பதாம் நாள் படையலுக்காக கூடுவார்கள். சண்டையிட்டவர்களில் ஒரு சிலர் வைராக்கியமாக வராமல் இருப்பதும் உண்டு. பெரும்பாலும் வந்து விடுவார்கள். ஆடு, கோழி, கருவாடு, மீன் என்று அசைவ வகையறாக்களை ஒரு கை பார்த்து விட்டு அதற்கு முன்னும் பின்னும் பாட்டில்களைக் காலி செய்திருப்பார்கள். ரகளைகள் தொடங்கும்.
            இறந்தவரின் ஆன்மா எப்படியாவது சாந்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான்! வேறு வழி?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...