10 Jun 2018

போட்டாரே ஒரு போடு!


போட்டாரே ஒரு போடு!
            வங்கியில் கடன் கேட்டு மறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தம் சொந்தக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க மறுப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? வங்கிகள் அதற்கும் சில காரணங்கள் வைத்துள்ளன.
            கடந்த சில நாட்களாக பணம் எடுக்கச் சென்றால் பணம் எடுக்கும் ஏ.டி.எம். இயந்திரங்கள் துடைத்து வைத்தாற் போல் வெகு சுத்தமாக இருக்கின்றன. பணம் எடுக்கச் செல்லும் அவ்வறையில் பணத்தைத் தவிர மற்ற எல்லாம் இருக்கின்றன.
            அதனாலென்ன!
            சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையிலேயே பணம் எடுக்கலாம் என்று சென்றால், பத்தாயிரத்துக்கு மேல் பணம் எடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ஏன் என்று கேட்டுப் பார்த்தால், அதற்கு மேல் கொடுப்பதற்கு பணம் இல்லை என்கிறார்கள். வங்கியிலிலேயே பணம் இல்லை என்றால் அப்புறம் என்ன செய்வது?
            ஓர் இடைத்தேர்தல் வந்தால் போதும் பணம் கட்டு கட்டாகப் புரளும். அதுவரை வங்கிகள் இது போன்றுதான் காற்று போன பலூன் போல இருக்கும் போலிருக்கிறது.
            அதே நேரத்தில்,
            ஒரு சிலர் மட்டும் வங்கிக்கு வருவதும் பணத்தை கத்தைக் கத்தையாய் அள்ளிச் செல்வதுமாக இருந்தனர். யார் அந்த ஒரு சிலர்? வங்கியின் மிக முக்கியமான வாடிக்கையாளர்கள் வரிசையில் வருபவர்கள் அவர்கள்.
            எஸ்.கே.க்கு அன்று அவசரத் தேவைக்கு ஐம்பதாயிரம் பணம் தேவைப்பட்ட போது என்ன செய்வது என்று தெரியாமல் வங்கி மேலாளரின் கை, கால்களில் விழுந்தும் காரியம் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் யாருக்குப் பணம் கொடுக்க வேண்டுமோ அவரின் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் செய்து விடுகிறேன் என்றார் மேலாளர்.
            தன் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் எஸ்.கே. அல்லாடுவதைப் போல யார் கணக்குக்குப் பண பரிமாற்றம் செய்து விடுகிறார்களோ அவரையும் அல்லாட விடுவதுதான் வங்கியின் முக்கிய பணி போல.
            எஸ்.கே.க்கு அப்போது ஒரு யோசனை தோன்றியது. வங்கியின் மிக முக்கியமான வாடிக்கையாளராக இருக்கும் ஒருவரைப் பிடித்து அவரின் சிபாரிசில் எப்படியாவது தனது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடலாமா என்று முயற்சித்துப் பார்த்தார்.
            அவரின் வேண்டுகோளை ஏற்று எஸ்.கே.க்கு தெரிந்த அந்த மிக முக்கிய வாடிக்கையாளர் பிரமுகரும் வங்கிக்கு வருகை தந்து மேலாளரிடம் பேசினார்.
            அவர் பேசும் போது உடலின் பின்பக்கத் துளையிலிருந்து போட்டாரே ஒரு வாயு வெளியேற்றம். ஏ.சி. அறை முழுவதும் துர்நாற்றம் பரவத் தொடங்க, எஸ்.கே. விழுந்தடித்து வேளியே ஓடி வந்தார்.
            துர்நாற்றம் தந்த தாக்கத்தில் தனக்குப் பணம் தேவையில்லை என்பதில் எஸ்.கே. இப்போது தெளிவாகியிருந்தார்.
            தனது கணக்கிலிருந்து தனது பணத்தை எடுக்க விடாத வங்கி நிர்வாகத்துக்கு தக்க ஒருவர் மூலம் ஒரு குண்டைப் போடச் செய்து பழி தீர்த்து விட்ட திருப்தி இருந்து அவரது முகத்தில்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...