6 Apr 2018

அவரவர் தேர்வே அவரவர் வாழ்வின் தீர்வு!


குறளதிகாரம் - 10.10 - விகடபாரதி
அவரவர் தேர்வே அவரவர் வாழ்வின் தீர்வு!
            மனிதர்கள் பிறந்தார்கள். அழத் தொடங்கினார்கள். சிரிக்கத் தொடங்கினார்கள். அழுகையும், சிரிப்பும் உலகப் பொதுமொழி. தம்மை அறியாமலே கற்றுக் கொண்ட இயற்கை மொழி.
            அழுகையையும், சிரிப்பையும் கடந்து அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல நினைத்த போது சத்தமிடத் தொடங்கினார்கள்.
            சத்தம் கூவலாக, கத்தலாக, ‍ஊளையாக வெளிப்படத் துவங்கியிருக்கும். விலங்குகளைப் பார்த்து அதன் ஒலிகளும் ஓசைகளாக கேட்க ஆரம்பித்து இருக்கும்.
            ஒலிப்புகளும், ஓசைகளும் ஒழுங்கு பெற்று மொழி உண்டாகியிருக்கும்.
            மொழி முதலில் வெளிப்படுத்தியது உணர்வுகளாகத்தான் இருக்கும்.
            உணர்வுகளாக வெளிப்பட்ட மொழி தேவைகளை வெளிப்படுத்துவதாக விரிந்திருக்கும்.
            தேவைகளை வெளிப்படுத்திய மொழி தகவல் பரிமாற்றச் சாதனமாக மாறியிருக்கும்.
            உணர்வுகள், தேவைகள், தகவல் பரிமாற்றமாக பரிணமித்த மொழி மனம் என்ற ஒன்று இருப்பதை அறிய நேர்ந்திருக்கும்.
            மனத்தின் வெளிப்பாடுகள் சிந்தனைகளாக பிரவகிப்பதை உணர நேர்ந்திருக்கும்.
            ஒரு கட்டத்தில் சிந்தனையின் வெளிப்பாடே மனம் என்பதையும் மொழி உணர்த்தியிருக்கக் கூடும்.
            மொழியினின்று பிறந்த சிந்தனை, மொழியின் சொற்களை ஆராயத் துவங்கியிருக்கும்.
            சொற்கள் உணர்வின் வெளிப்பாடாக, மனதின் வெளித்தோற்றமாக அமைந்திருப்பதைச் சிந்தனை அறிந்திருக்கும்.
            அப்போதுதான் சொற்கள் இன்சொற்கள், வன்சொற்கள் என்று உணர்வின் வெளிப்பாடாக வெளிப்படுவதை மனம் முழுமையாக புரிந்திருக்கும்.
            உணர்வின் வெளிப்பாடாகத் தோன்றும் சொற்கள்தான் உணர்வில் தாக்கத்தையும் ஏற்படுத்துவதை அறிவு தெரிந்திருக்கும்.
            அதாவது,
            இன்சொற்கள் இனிய உணர்வுகளை, இனிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்ற தெளிவும்,
            வன்சொற்கள் கொடிய உணர்வுகளை, கொடிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்ற தெளிவும் மனம், சிந்தனை, உணர்வு, அறிவு ஆகிய அனைத்திற்கும் விளங்கியிருக்கும்.
            இனிமையான விளைவுகள் ஏற்பட வேண்டும் என்றால் இனிய சொற்கள் அல்லவா வெளிப்பட வேண்டும். மாறாக இனிமையற்ற வன்சொற்களால் இனிமையற்ற விளைவை ஏற்படுத்தி விட்டு இனிமையான விளைவுகள் ஏற்படவில்லை என்று வருந்த முடியுமா?
            ஊற்று நீரைப் பார்க்கும் போது விட்டு விட்டு, கடல் நீரை முகர்ந்து குடித்து விட்டு கரிக்கிறதே என்று வருந்த முடியுமா?
            காற்று வீசும் நேரத்தில் ஓய்வாக இருந்த விட்டு, புழுங்கும் நேரத்தில் தூற்ற முடியவில்லையே என்று ஏங்க முடியுமா?
            பகல் நேரம் முழுவதும் நன்றாக உறங்கி விட்டு, இரவு நேரத்தில் உறக்கம் வரவில்லையே என்று வேதனைப் பட முடியுமா?
            வீட்டில் வாங்கி வைத்திருக்கும் விதவிதமானப் பலகாரங்களை எல்லாம் விட்டு விட்டு, பூச்சிகளின் தாக்குதலைச் சமாளிக்க வாங்கி வைத்திருக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி விட்டு உயிர் போய் விட்டதே என கலங்க முடியுமா?
            சொகுசான பஞ்சு மெத்தை இருக்க அதை புறக்கணித்து விட்டு, முள் படுக்கையின் மீது படுத்து விட்டு ஐயோ குத்துகிறதே என்று கத்துவதில் பொருள் இருக்க முடியுமா?
            எல்லாம் தெரிந்த பிறகு செய்யும் தவறு மடத்தனமாகிறது.
            எல்லாம் புரிந்த பிறகு செய்யும் தவறு கற்றறிந்த பேதைத்தனம் ஆகிறது.
            எல்லாம் அறிந்த பிறகு செய்யும் தவறு படித்த முட்டாள் என்ற பெயரை வாங்கித் தருகிறது.
            எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தெளிந்த பிறகு, மாற்றித் தேர்வது வாழ்நாள் முழுமைக்குமான கசப்பை ஏற்படுத்தி விடுகிறது.
            வாழ்க்கை இனிப்பாகத்தான் இருக்கிறது. வார்த்தைகள் கசக்கச் செய்து விடுகின்றன.
            வாழ்க்கை குளுமையாகத்தான் இருக்கிறது. வார்த்தைகள் வெம்மையாக்கி விடுகின்றன.
            வாழ்க்கை மென்மையாகத்தான் இருக்கிறது. வார்த்தைகள் வன்மமாக்கி விடுகின்றன.
            இனிக்கின்ற வாழ்க்கை வேண்டும் என்றால் இனிக்கின்ற வார்த்தை இருக்கிறது.
            கசக்கின்ற வாழ்க்கை வேண்டும் என்றால் கசக்கச் செய்கின்ற வார்த்தை இருக்கிறது.
            அது சரி!
            யாராவது இனிப்பு இருக்க கசப்பைத் தேர்வார்களா?
            அதாவது,
            இனிக்கின்றப் பழங்கள் இருக்க, கசக்கின்ற அல்லது துவர்க்கின்ற காய்களைத் தேர்வார்களா?
            பறவையினங்கள் கூட மரத்தில் இருக்கின்ற இனிக்கின்றப் பழங்களைத்தானே கவர்கின்றன. கசக்கின்ற காய்களைக் கவர்தில்லையே!
            அணிற்பிள்ளைகள் குடைவது கூட இனிக்கின்றப் பழங்கள்தானே, கசக்கின்ற காய்கள் அல்லவே!
            ஆறறிவுக்குக் கீழான பறவைகள், அணிற்பிள்ளைகளே அப்படியென்றால் ஆறறிவு படைத்த,
            யார்தான் இனிக்கின்ற பழங்கள் இருக்க, கசக்கின்ற காய்களை உண்பார்கள்?
            அப்படி யாரேனும் இருப்பார்கள் என்றால்...
            ஐயமே இல்லாமல் அவர்கள்தான் இன்சொற்கள் இருக்க இன்னாத சொற்களைக் கூறுபவர்கள்.
            இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்து அற்று என்கிறார் வள்ளுவர்.
            இனியப் பழங்கள் இருக்க ஏன் ஐயா காய்களைக் கொய்கிறீர்கள்?
            இன்சொற்கள் இருக்க வன்சொற்களை ஏன் ஐயா எய்கிறீர்களா?
            இன்சொற்கள் கனிகள்.
            வன்சொற்கள் மனித குலத்தைப் பிடித்தப் பிணிகள்.
            கனிகளா? பிணிகளா? எடுத்துக் கொள்வது அவரவர் தேர்வு. அவரவர் தேர்வே அவரவர் வாழ்வின் தீர்வு.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...