6 Apr 2018

வாசிப்பு - மாபெரும் பாதை


வாசிப்பு - மாபெரும் பாதை
            வாழ்க்கையில் வாசிப்பதை விட்டால் வேறு வழியில்லை என்று நினைக்கிறேன். வாசிப்பே மாபெரும் வழி.
            அந்த வாசிப்புக்குத்தான் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. பல்கலைக் கழகங்கள் கட்டப்பட்டன.
            அவைகள் தங்களது பாடப் புத்தகங்களால் வாசிப்பு என்ற வானத்தைக் காட்டியிருக்க வேண்டும். வானத்தின் மாதிரியைத்தான் காட்டிக் கொண்டு இருக்கின்றன.
            கூண்டுக்குள் சிறகடிப்பது பாதுகாப்பானதுதான். வானில் சிறகடிக்கும் பரவசத்தை அது தருமா?
            உங்களுக்கு ஒரு வானம் வேண்டும் என்றால் ஒரு புத்தகம் படியுங்கள். இரண்டு வானம் என்றால் இரண்டு புத்தகங்கள் படியுங்கள். நூற்றுக்கணக்கான வானம் வேண்டும் என்றால் நூற்றுக்கணக்கானப் புத்தகங்கள் படியுங்கள். ஆயிரக்கணக்கான வானம் வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கானப் புத்தகங்கள் படியுங்கள். லட்சக் கணக்கான வானம் வேண்டும் என்றால் லட்சக் கணக்கானப் புத்தகங்கள் படியுங்கள். கோடிக் கணக்கான வானம் வேண்டும் என்றால் கோடிக் கணக்கானப் புத்தகங்கள் படியுங்கள். அதையும் தாண்டி தாண்டி இன்னும் இன்னும் என்றால் படியுங்கள், படியுங்கள், படித்துக் கொண்டே இருங்கள்.
            எத்தனை வானம் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அத்தனைப் புத்தகங்கள் உங்களுக்குத் தேவை.
            ஆயிரம் ஆண்டு கால வாழ்வை நீங்கள் சில மணி நேரங்களில் வாசித்து அதற்குள் சென்று வந்து விட முடியும். வாழ்ந்துப் பார்க்க ஆயிரம் ஆண்டுகள் வேண்டும்.
            காலத்தைச் சுருக்கவும் முடியும், நீட்டவும் முடியும் என்பார் ஐன்ஸ்டீன். வாசிப்பின் மூலம் காலத்தை எப்படி வேண்டுமானால் சுருக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்ற நம்புகிறேன்.
            காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்று காலத்தை ஒரு புத்தகமாகவே சுருக்கியிருப்பார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்ற விஞ்ஞானி.
            இந்த உலகமும், ஒரு புத்தகமும் சம எடை எனலாம். பெரிய உலகின் மேல் இருக்கும் ஒரு சிறிய புத்தகம் எப்படி உலகின் எடைக்குச் சமமாகும் என்று நீங்கள் கேட்கலாம்.
            வேண்டுமானால் ஒரு தராசு கொண்டு வாருங்கள். நிறுத்துப் பார்த்து விடலாம். பூமியில் நின்று கொண்டு பூமியை எப்படிப் போட்டு தராசில் நிறுக்க முடியும்? என்று நீங்கள் யாராவது சிந்தித்தீர்களா?
            உங்களால் அப்படிச் சிந்திக்க முடிந்தால் நீங்கள் புத்தகங்களை வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.
            அப்படிச் சிந்திக்க முடியாவிட்டால் நீங்கள் புத்தக வாசிப்பை நோக்கி வர வேண்டும் என்பது பொருள்.
            பூமியில் இருந்து கொண்டே பூமியைத் தராசு தட்டில் போட்டு நிறுக்க முடியும் என்பது உங்களது நம்பிக்கையாக இருந்தால் நீங்கள் வாசிப்பில் பல புத்தகங்களைக் கடந்து விட்டீர்கள் என்பது போருள்.
            பூமியில் இருக்கும் நமக்கு பூமியை நிறையிட பெரிய தராசுக்கு எங்கே போவது? அப்படியே பெரிய தராசு இருந்தாலும் பிரபஞ்சத்தின் எந்த இடத்தில் நின்று கொண்டு எடை போடுவது?
            தராசும் பெரிதாக இருக்க வேண்டும். எடை போடும் இடமும் பெரிதாக இருக்க வேண்டும். அதற்கு உள்ளம் என்ற தராசுதான் பொருத்தமாக இருக்கும். உள்ளம் என்ற இடம்தான் பொருத்தமாக இருக்கும்.
            இப்போது உங்கள் உள்ளமெனும் தராசில் ஒரு தட்டில் ஒரு புத்தகத்தையும், இன்னொரு தட்டில் பூமியையும் வைத்துப் பாருங்கள்.
            பார்த்தீர்களா?
            என்னத் தெரிகிறது? போடா! பூமி ஒரு சின்ன பந்து என்பதாகத்தானே தெரிகிறது. ஆகா! புத்தகம் எவ்வளவு பெரிய பிரபஞ்சம் என்பதாகத்தானே தெரிகிறது.
            தன்னை நேசிக்கும் மனிதர்களால்தான் பிறரையும் நேசிக்க முடியும். உலகில் மனிதர்களை தன்னை நேசிக்க வைப்பதுதான் பெரும் பாடாக இருக்கிறது.
            ஏன் அப்படி? என்று சிந்தித்து இருக்கிறீர்களா?
            தன்னைத் தானே குறையாக காணும் மனிதர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
            தன்னை தானே வெறுக்கும் மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள்.
            தன்னைப் போதாமையாக உணரும் மனிதர்கள் அநேகம் இருக்கிறார்கள்.
            தன்னை அவநம்பிக்கையோடு நோக்கும் மனிதர்கள் அவ்வளவு இருக்கிறார்கள்.
            தன்னை ஒரு பொருட்டாக கருதாத மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
            தன்னை உணரும் மனிதரால்தான் பிறரையும் உணர்ந்து கொள்ள முடியும்.
            தன்னை உணரச் செய்யும் எந்த முயற்சிக்கும் மனிதர்கள் நேரடியாகச் சம்மதிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
            அப்புறம் அப்படி அந்த முயற்சியை எப்படிச் செய்வது? வாசிப்புப் பழக்கத்தின் மூலம்தான் அந்த முயற்சியைக் கொஞ்சமேனும் முன்னெடுக்க முடியும். கொஞ்சமேனும் என்றால் மீதிக்கு என்ன செய்வது? வேறு வழியில்லை. அது அவர்கள் சொந்த முயற்சியாகத்தான் அமைய வேண்டும்.
            மனிதர்கள் தன்னைத் தானே நேசிக்க, தன்னைத் தானே மேன்மையாக உணர படைக்கப்பட்ட மாபெரும் அற்புதங்கள்தான் புத்தகங்கள்.
            புத்தகங்கள் படைப்பின் மாபெரும் அதிசயங்கள்.
            உங்களைப் படைப்பாளர் யார் என்று கேட்டால் கடவுள் என்பீர்கள்.
            உங்களுக்குத் தெரியாததா என்ன? புத்தகங்களைப் படைப்பவர்களும் படைப்பாளர்கள் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள்.
            ஆகவேத்தான் புத்தகங்கள் மாபெரும் படைப்புகள், படைப்புகளின் அற்புதங்கள் மற்றும் அதிசயங்கள் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லும் சிறப்புக்கு உரியவைகள்.
            படைப்பை உணர வேண்டுமா? புத்தகம் படியுங்கள்.
            படைத்தவர்களை உணர வேண்டுமா? புத்தகம் படியுங்கள்.
            நீங்கள் ஏதேனும் புதிததாகப் படைக்க வேண்டுமா? புத்தகம் படியுங்கள்.
            படித்தவர்கள் படைக்கிறார்கள். படைப்பவர்கள் படைப்பாளர்கள் ஆகிறார்கள். நீங்கள் படைப்பாளர்கள் ஆக வேண்டுமா? படியுங்கள். படைப்பாளர் யார் என்று கேட்டதற்கு கடவுள் என்று பதில் சொன்னவர்கள் நீங்கள்தானே. பதில் சொன்னவர்கள் அனைவரும் படியுங்கள். படையுங்கள். படைப்பாளர் ஆகுங்கள்.
            வாசிக்க வாசிக்க நீங்கள் இரண்டு விசயங்களை உணர்வீர்கள். ஒன்று வாசிப்பு ஒரு மாபெரும் பாதை. மற்றொன்று வாசிப்பு ஒரு மாபெரும் போதை.
            (05.04.2018 - வியாழன் அன்று திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரி ஒன்றியம், கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி எனும் அறிவுத் திருவிழாவில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...