15 Apr 2018

உங்களாலும் தீமைகளை அழிக்க முடியும்!

குறளதிகாரம் - 11.9 - விகடபாரதி
உங்களாலும் தீமைகளை அழிக்க முடியும்!
            தீமைகள் அழிக்கப்பட வேண்டும். நன்மைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
            உலகில் மட்டுமல்லாது உலகில் வாழும் மனிதர்களின் மனதிலும் தீமைகள் அழிக்கப்பட வேண்டும். நன்மைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
            உலகில் தீமைகளை வேரறுக்கவும், நன்மைகளை நிலைநிறுத்தவும் சட்டங்களும், நீதிகளும், அரசாங்கங்களும் உள்ளன.
            ஒவ்வொருவரின் மனதிலும் தீமைகளை வேரறுத்து, நன்மைகளை நிலைநிறுத்தி விட்டால் உலகில் சட்டங்கள், நீதிகள், அரசாங்கங்கள் ஆகியவற்றின் தேவையில்லாமல் போய் விடும்.
            மனதின் ஆத்திரமே விரோதமாகிறது. மனதின் விரோதமே பகை வளர்க்கிறது. மனதின் பகையே வார்த்தைகளில் தீச்சொற்களை அள்ளித் தெளிக்கிறது. மனம் அள்ளித் தெளித்த தீச்சொற்களே சண்டையில் வந்து நிற்கிறது.
            மனம் எதை நினைக்கிறதோ அதுவாகவே ஆகிறது.
            ஆத்திரத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் மனம் எதிர்ப்பாகவே இயங்குகிறது.
            அமைதியையே நினைத்துக் கொண்டிருக்கும் மனம் இயல்பாகவே இருக்கிறது.
            மனம் ஒன்றைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டால் அது சாதாரணமாகி விடுகிறது.
            மனம் சாதாரண ஒன்றை அசாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டால், சாதாரணமும் அசாதாரணமாகி விடுகிறது.
            மனம் எப்படி எடுத்துக் கொள்கிறதோ, அதுவே மனிதர்களின் பார்வையாகி விடுகிறது.
            கயிற்றைப் பாம்பாகப் பார்ப்பது மனம்தான். பின்பு அது பாம்பு இல்லை கயிறுதான் என்று தெளிவுபடுத்திக் கொள்வதும் மனம்தான்.
            மனத்தால் தவறாக கருதிக் கொள்ளவும் முடியும். அதை ஆய்ந்துப் பார்த்து தவறென அறிந்து திருத்திக் கொள்ளவும் முடியும்.
            உலகத்தின் மாற்றம் மனிதர்கள் ஒவ்வொருவரின் மனமாற்றத்திலும் அடங்கியிருக்கிறது.
            அதனால்தான் உலகில் நீ தொடங்க நினைக்க நினைக்கும் மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்கு என்று அறிஞர் பெருமக்கள் கூறுவார்கள்.
            உலகின் தீமைகளை வேரறுப்பதற்கு முதலில் உலகில் வாழும் மனிதர்களின் மனதிலிருந்து தீமைகளை வேரறுப்பது நல்லது.
            வள்ளுவரும் அதைத்தான் சரி என்கிறார்.
            மனதில் யார் செய்த இன்னாதவைகளையும் வைக்க வேண்டாம் என்கிறார்.
            மனதிர் யார் செய்த நன்றி கெட்ட தனங்களையும் நினைத்துக் கூட பார்க்க வேண்டாம் என்கிறார்.
            நன்றல்லதை அன்றே மறப்பது நன்று என்கிறார்.
            வள்ளுவரே சொல்லி விட்ட பின் நன்றல்லாதவைகளை மறப்பதுதானே நல்லது. ஆனால்...
            நினைக்கத் தெரிந்த மனதுக்கு மறக்கத் தெரியவில்லையே!
            அதையே நினைத்து மருகும் மனதுக்கு என்ன செய்வது என்று புரியவில்லையே!
            மறப்பதற்கு நினைக்க நினைக்க நினைவில் வந்து தொலைக்கும் நன்றி கெட்டத்தனமான நினைவுகளை என்ன செய்வது என்று அறியவில்லையே!
            வள்ளுவரே அதற்கும் ஒரு வழி செய்கிறார்.
            கொலை செய்வது போன்ற பாதகத்தையே செய்திருக்கட்டுமே. அதை மறப்பது கடினம்தான். அதை மனதிலிருந்து அழிப்பது கடினம்தான். அப்படி கொலை செய்வது போன்ற பாதகத்தை செய்தவரும் ஏதேனும் ஒரு சிறு நன்றியை அதாவது நன்மை தரும் செயலைச் செய்திருக்கலாம் அல்லவா! அந்த சிறு நன்றியை நினைத்துப் பார்த்தால் போதும். எப்படிப்பட்ட இன்னாச் செயல் குறித்த நினைவுகளும் மறந்து போய் விடும். இனிய செயல்கள் குறித்த நினைவுகளே மனதில் நிலைத்து நிற்கும்.
            ஒரு சிறு தீப்பொறி சகல குப்பைகளையும் அழிப்பது போல, ஒருவர் செய்த சிறு நன்றியை நினைக்க, அவர் செய்த ஒட்டுமொத்த இன்னாதவைகள் குறித்த நினைவுகளும் அழியும்.
            ஒரு சிறு ஊசி போதும், இன்னாத நினைவுகளால் ஊதிப் பெருத்த பலூனை உடைத்துத் தள்ள. அந்த சிறு ஊசி போன்றதுதான் ஒருவர் செய்த சிறு நன்றியை நினைத்துப் பார்த்து, அவர் செய்த பாதகம் எனும் பலூனை உடைப்பது.
            ஒரு சிறு துரும்பு போதும், உறுத்திக் கொண்டிருக்கும் அத்தனை கச்சடாக்களையும் நோண்டி வீச. அந்த சிறு துரும்பு போன்றதுதான் ஒருவர் செய்த சிறு நன்றியை நினைத்துப் பார்த்து, அவர் செய்த பாதகம் எனும் கச்சடாக்களை நோண்டி வீசுவது.
            நன்மைகளை நினைக்கும் மனம் கருணை உணர்வால் பெருகுகிறது.
            புன்மைகளை நினைக்கும் மனம் வன்ம உணர்வால் சுருங்குகிறது.
            மனம் நினைக்க வேண்டியது நன்மைகளை, நன்றிகளை.
            மனம் விலக்க வேண்டியது, அழிக்க வேண்டியது புன்மைகளை, வன்மங்களை.
            சிறு நன்றியை நினைத்தால் போதும், பெரும் பாதகமும் மனதை விட்டு அகலும், விலகும், ஒழியும், அழியும்.
            ஒருவர் செய்த பெரிய தீமைகளை நினைத்துப் பார்ப்பதை விட, அவர் செய்த சிறு நன்றியை நினைத்துப் பார்த்தால் எவர் குறித்த தவறானச் சித்திரங்களும் மனதில் உருவாகாது.
            எவர் குறித்தத் தவறானச் சித்திரங்களும் மனதில் உருவாகா விட்டால் எவர் மீதும் எத்தகைய வன்முறையையும் நிகழ்த்தத் தோன்றாது.
            சிறு நன்றியை நினைத்துப் பார்த்து பெரு நன்மையை விளைவிக்கலாம்.
            கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும்.
            ஒரு மனதில் தீமை அழிந்து விட்டால் உலகின் ஒரு பாவம் அழிந்து விடும்.
            ஒவ்வொருவர் மனதிலும் தீமை அழிந்து விட்டால் உலகின் ஒட்டு மொத்த பாவமும் அழிந்து விடும்.
            தீமைகளை அழிக்க ஒவ்வொருவராலும் முடியும். அதற்கு, ஒருவர் செய்த பெரிய பாவத்தை விட்டு விட்டு, அவர் செய்த சிறிய நன்றியை நினைத்துப் பார்த்தால் போதும். மனதின் தீமைகள் அகன்று விடும். மனதின் தீமைகள் அகன்று விட்டால் உலகிலும் தீமைகள் அகன்று விடும். தீமைகளை அழிக்க ஒவ்வொருவராலும் முடியும்!
            ஆம்!
            உலகின் தீமைகளை அழிக்க உங்களாலும் முடியும்!
            அதற்கு கொஞ்சம் மனம் வைக்க வேண்டும். ஒருவர் செய்தது சிறு நன்றியாயினும் அதை மட்டுமே மனதில் வைக்க வேண்டும். ஒருவர் செய்தது கொலையைப் போன்ற மாபாதகம் ஆயினும் அதை மனதை விட்டு அன்றே அகற்றி விட வேண்டும்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...