15 Apr 2018

சில சூக்கும விதிகள்


சில சூக்கும விதிகள்
            மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று சூழ்நிலைகளை மாற்றலாம். அது எந்த அளவுக்குப் பொருத்தப்பாடு உள்ளதாக அமைகிறது என்றால் மாற்றச் சொல்கின்ற அவர்களே அறிந்த ரகசியம் அது.
            அது போன்ற ரகசியங்களில் வரிந்து கட்டிக் கொண்டு போய் நிற்கக் கூடாது. வேண்டுமானால் அவரது எதிர்ப்பு ஏற்படாமல் இருக்க அவர் குறிப்பிடும் மாற்றத்தை விரும்புவது போல நடிக்கலாம். உண்மையாக விரும்பி விடக் கூடாது. அவ்வாறு விரும்பினால் தன்னுடைய சுயமும் போய், மாற்றத்தைச் சொன்னவர் மாறி விட்டால் தானும் நிர்கதியில் நிற்கும் நிலையும் ஏற்பட்டு விடும்.
            இந்த உலகமே ஒரு நாடக மேடை. என்ன நாடகம் நடக்கிறதோ அதற்கேற்றாற் போல் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விட்டு மேடையோடு அதை விட்டு விட வேண்டும். மேடை என்பது அந்தச் சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையோடு அதையும் தலைமுழுகி விட வேண்டும்.
            மேடையை விட்டு இறங்கியதும் நடிகன் நடிப்பதை விடுவதைத் தவிர வேறு வழியில்லை. அது போலத்தான் சூழ்நிலைகளுக்கு மாறாக நடிக்க முடியாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்த மாதிரி நடிப்பதில் கில்லாடியாக இருப்பதும், அதற்காக அந்தக் கில்லாடித்தனத்தில் மூழ்கி விடாமல் இருப்பதும் முக்கியம்.
            சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும். நாடகங்களும் மாறிக் கொண்டே இருக்கும். மாறுவதற்கு ஏற்ப ஒரு நடிப்பு அவ்வளவே. மற்றபடி நாம் நாமாகத்தான் இருக்க வேண்டும்.
            பொதுவாக எதற்கும் ஆணவமாகப் பதில் சொல்வதை விட்டு விட வேண்டும். எல்லாவற்றிற்கும் பணிந்தாற் போல் பதில் சொல்வதே நல்லது. அப்படி முடியாவிட்டாலும் ஒரு நடிப்பாகவாவது பணிந்தாற் போல் பதில் சொல்வதே நல்லது.
            எனக்கு எதுவும் தெரியவில்லையே என்று பதில் சொல்வது தாழ்வு மனப்பான்மை ஆகாது. அதைப் போன்ற தப்பிப்பதற்கானப் பதில் இந்த உலகில் எதுவும் தோன்றவில்லை. கடினமாகக் கேள்வி கேட்பவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி ஐயோ இப்படி ஒரு சிந்தனை உங்களுக்கு எப்படித் தோன்றியது என்று வியப்பதைப் போல நடிப்பதுதான். ஏனென்றால் எல்லாரின் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பது நல்லதன்று. அது ஆபத்தில் சென்று முடியும் ஓர் அபாயகரமான  விளையாட்டு.
            பல கேள்விகளை அவர்களை மதிப்பதைப் போன்று காட்டிக் கொண்டு, அது குறித்துத் தனக்குத் தெரியவில்லையே என்று குறைபடுவதைப் போல நடித்துத் தப்பிப்பதே மேல்.
            எல்லா விசயங்களும் தெரிந்தது போல காட்டிக் கொள்வதைப் போன்ற தீமை எதுவுமில்லை. எந்த விசயமும் தெரியவில்லை என்பதைப் போலக் காட்டிக் கொள்வதைப் போன்ற அருமையான விசயம் எதுவுமில்லை.
            பொதுவாக எங்கும் பிரச்சனைகள் இருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. பிரச்சனைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் பல விசயங்களில் கவனம் விழுந்து நம் மீது கவனம் விழாமல் தப்பிக்கலாம்.
            பிரச்சனைகளையெல்லாம் தீர்த்தால் மனிதர்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்களே என்று நினைத்தால், அவர்கள் பிரச்சனைகள் தீர்ந்ததால் கிடைத்த கால மிச்சத்தை நம் மேல் வம்புகளைப் பிரயோகிப்பதில் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
            யாரும் கஷ்டப்படுகிறார்களே என்று நினைத்து உதவ முடியவில்லை. அப்படி யாருக்கு உதவுகிறோமோ அவர்கள் கஷ்டம் தீர்ந்ததால் நமக்குக் கஷ்ட காலத்தை உருவாக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
            இப்படித்தான் ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவது சில பல நேரங்களில் நல்லதாகிறது. உலகில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் கஷ்டப்படுகிறார்கள்தான். அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் உங்களையும் அறியாமல் உதவ ஆரம்பித்து விடுவீர்கள் என்பதால் இவ்விசயத்தில் வேறு எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
            எது எப்படி இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும். அது மாறாகக் கூடாது என நினைக்கின்ற முண்டங்கள் அதற்குப் பக்க பலமாக இருக்கின்றன.
            கட்டுபாடுகளால், நிர்பந்தங்களால், அச்சுறுத்தல்களால் சூழ்நிலைகளை மாற்றி விட முடியும் என தப்புக் கணக்குப் போட வேண்டாம். மனிதர்களின் ஒத்துழைப்பு அவசியம். அவர்களை அநாவசியமாக கட்டுபாடு, நிர்பந்தம், அச்சுறுத்தல்  இவைகளின் இறுக்கத்தின் காரணமாக முட்டாள்தனமாக செய்து விடும் வகையில் எதையும் தூண்டி விட்டு விடக் கூடாது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...