20 Apr 2018

நிச்சயமற்ற நிலைகளில் சமாளிக்கும் முறைகள்


நிச்சயமற்ற நிலைகளில் சமாளிக்கும் முறைகள்
            சில வேளைகளில் அடையும் மன இறுக்கம் மிகவும் தடுமாறிப் போக வைக்கிறது. வெளியே கிளம்புவதா? வேண்டாமா? என்று குழம்பிக் குழம்பித் தவித்துப் போக வைக்கிறது.
            ஒரு கட்டத்தில் பாதி வழியில் திரும்பலாம் என நினைக்கும் போது  தன்னம்பிக்கையைக் கை விடக் கூடாது, எதற்கும் பயப்படக் கூடாது என்று தோன்றுகிறது.
            இதெல்லாம் எதனால் நிகழ்கிறது? தமக்குத் தாமே இருவேறு எதிரெதிர் மனநிலைகளை உருவாக்கிக் கொள்வதால் நிகழ்பவைகள்தான் அவைகள்.
            தாமே தமக்கு ஆதரவாகவும், எதிராகவும் சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு பைத்தியகாரத்தனத்தின் உச்சம்தான் இது. தன் இரு கைகளும் ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்வதைப் போன்றதுதான் இது.
            தாமே கிளம்ப வேண்டும் என்று நினைப்பதும், கிளம்ப வேண்டாம் என்றும் நினைப்பதுமாகிய ஒரு பெரிய முட்டாள்தனம்தான் இது. இந்த இரண்டிலிருந்தும் வெளியேறி விடலாமா என்றும் பார்த்தாலும் இயலாது.
            சரி! போகாமல் திரும்பினால் அவர்கள் இன்னும் வருத்தப்படுவார்கள் என்றும் இப்படி நம்மால் ஆகிறதே என்று மனம் வெதும்பி திருந்தி விடுவார்கள் என்றும் நினைக்கலாம்.
            ஒரு வேளை நிலை அப்படி இல்லாமல் இன்னும் எதிர்மறையாக ஆகி விட்டால்... அதற்குப் பேசாமல் திரும்பாமல் போயிருக்கலாம் என்று நினைப்பதா?
            உணர்ச்சிவசமான மனதை மாற்றுவதற்காக எந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அது அப்படியே இருக்கட்டும். அது இயல்பு நிலை கிடையாது. இயல்பு நிலையே நிலைக்கும். இயல்பற்ற நிலை சிறிது நேரம் நீடித்து வடிந்து விடும். அதனால் இயல்பற்ற நிலைக்காக அது மாறும் வரை பொறுத்திருப்பது பயன் தரும். இயல்பற்ற நிலைக்காக இயல்பான நிலையைக் கொண்டு வருகிறேன் என்று விரைவாக வரும் இயல்பு நிலைக்குத் தடை ஏற்படுத்தி விடக் கூடாது.
            ஆத்திரத்தால் எதையும் மாற்றி விட முடியாது. ஆத்திரத்தால் அடிக்கும் அடி முன்னர் அடித்ததை விட இன்னும் வேகமாக அடிக்கத் தோன்றுமே தவிர அதைக் குறைத்துக் கொள்ளத் தோன்றாது. மாற்றத்தை ஏற்படுத்த முயலும் நம் முயற்சிகளும் அப்படித்தான். அது தீவிர நிலையை நோக்கியேப் போகும். நம்மாலும் கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் அது கட்டுடைக்கும் நிலையை அடையும்.
            நம்மை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நமக்குக் கோபம்தான் வரும். நம்மை ஏன் மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்? அப்படி யாரையும் நாம் நிர்பந்தப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அவர்கள் அப்படியே இருக்கட்டும். செயல் ரீதியாக என்றில்லை, வார்த்தை ரீதியாகவும், மன ரீதியாகவும் நிர்பந்தப்படுத்துவதும் தவறே. அவர்கள் அதற்கு ஒத்துழைக்காமலோ, ஏற்றுக் கொள்ளாமலோ போனால் கோபம்தான் ஏற்படும்.
            நாம் ஒரு வரையறையை, நாம் ஒரு எதிர்பார்ப்பை, நாம் ஒரு கட்டுபாட்டை உருவாக்காமல் இருந்தால் அதைக் காக்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியமும் இருக்காது. அதை மீறுகிறார்களே என்று யாரையும் தண்டிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
            சுருக்கமாகச் சொன்னால் நிறுவனத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குக் காரணம், பொருண்மையை அதிகரிக்க வேண்டும், விழாவை நடத்த வேண்டும், போட்டிகளில் பங்கேற்புகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும், நிறைய கலைகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதால் ஏற்படும் பிரதிவினைகளே.
            வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்குக் காரணம், இன்னார் இப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்கக் கூடாது, ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும்,  அடிக்கடி வேலை வாங்கக் கூடாது என்று நினைப்பதால் ஏற்படுபவைகளே.
            எது நடந்தால் என்ன? அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, அதைத் தூக்கிப் போட்டு விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
            அது எப்படி இருக்கிறதோ, அது அப்படியே இருக்கட்டும். முடிந்ததைச் செய்யலாம். முடியாவிட்டால் சும்மா இருக்கலாம். அதுவாகவே நடக்கும் காலமும் வரும். அவ்வளவுதான்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...