குறளதிகாரம் - 12.4 - விகடபாரதி
மனிதரை மனிதர்
என்று மதிப்பிடுவது எப்படி?
கனி அழுகினாலும்
அதனுள் தரமான விதைகள் இருக்கும்.
யானை இருந்தாலும்,
இறந்தாலும் ஆயிரம் பொன்.
சங்கு சுட்டாலும்
வெண்மை தரும்.
மனிதர் மறைந்தாலும்
பெருமை நிலைக்க வேண்டும்.
உடல் மறைந்தாலும்
புகழ் இருக்க வேண்டும்.
மனிதர் சேர்த்த
வைத்த செல்வத்துக்கு அழிவுண்டு. சொத்து, சுகங்கள் மறைவதுண்டு. மனிதர் சேர்த்து வைத்த
பெருமைக்கு ஏது மறைவு? மனிதர் நிலைநாட்டிய புகழுக்கு ஏது வீழ்ச்சி?
பெருமையோ,
சிறுமையோ மனிதர் மறைந்தாலும் மறையாது.
புகழோ, பழியோ
மனிதர் மரித்தாலும் மரிக்காது.
பிறக்கும்
போது அழுகின்ற மனிதருக்காக, இறக்கும் போது மற்றவர்கள் அழுதால் அவர் மனிதராக வாழ்ந்திருப்பதாக
பெருமை கொள்ளலாம்.
பிறக்கும்
போது அழுகின்ற மனிதருக்காக, இறக்கும் போது மற்றவர்கள் சிரித்தால் அவர் மனிதராக வாழாமல்
போனதற்காக சிறுமை கொள்ளலாம்.
உலகில் படைக்கப்பட்ட
எந்தப் பொருளும் பயனின்றி அழிவதில்லை. மனிதரும் பயனின்றி அழியக் கூடாது. பயனோடு வாழ
வேண்டும்.
தமக்கும்,
தம் குடும்பத்துக்கும், உலகத்துக்கும் பயனோடு வாழ்ந்தவர்களையே உலகம் நினைவில் கொள்கிறது.
அப்படி வாழும்
மனிதர்களினும் அவர் தகுதியுடையவரா? அவர் தகுதியற்றவரா? என்பதைக் கருத்தில் கொண்டே
பெருமை சேர்கிறது. புகழ் கூடுகிறது.
இறந்த பின்னும்
இறவாப் புகழ் பெறுவதும், மறைந்த பின்னம் மறையாத பெருமை கொள்வதும் வாழும் காலத்தில்
ஒருவர் நடுவுநிலைமையோடு வாழ்ந்தாரா? நடுவுநிலைமைத் தவறி வீழ்ந்தாரா? என்பதைக் கருத்தில்
கொண்டே நிகழ்கிறது.
விதை பழுதா?
இல்லையா? என்பது அதை முளை விடுவதில் தெரிகிறது.
வெண்டைக்காய்
பிஞ்சா? முற்றலா? என்பது முனையை முறித்த மாத்திரத்தில் தெரிகிறது.
மனிதர் ஒருவர்
தகுதியுடையவரா? தகுதியற்றவரா? என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் பெருமையிலும்,
புகழிலும் தெரிகிறது.
நல்லது, கெட்டது
நிறைந்த உலகில் நடுவுநிலைமை தவறிப் பொருள் சேர்த்தவர் பெருமை பெறுவதில்லை.
இன்பங்கள்,
துன்பங்கள் நிறைந்த உலகில் நடுவுநிலைமை தவறிச் செயல்பட்டவர் புகழ் பெறுவதில்லை.
துன்பங்கள்,
துயரங்கள் சூழ்ந்த போதும், வறுமையும், வெறுமையும் நிறைந்த போதும் நடுவுநிலைமை தவறாமல்,
நேர்மை பிறழாமல், மெய்மை மாறாமல் வாழ்ந்தவரே பெருமையும், புகழும் பெறுகிறார்.
அப்படிப்பட்டவரின்
பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் மறையாது எஞ்சி நிற்கிறார்.
அப்படிப்பட்டவரின்
உயிர் பிரிந்தாலும், பெருமை பிரியாது, அருமை திரியாது மனதில் நிற்கிறார்.
ஆக,
எஞ்சி நிற்கும்
புகழும், பெருமையும் ஒருவர் தகுதியோடு வாழ்ந்தாரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
ஒருவர் மறைந்த
பின்னும் மறையாமல் நிற்கும் புகழும், பெருமையுமே அவர் நடுவுநிலைமையோடு தவறாமல் தகுதியோடு
வாழ்ந்தாரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
உடல் அழியலாம்.
புகழ் அழியக் கூடாது.
உயில் ஒழியலாம்.
பெருமை ஒழியக் கூடாது.
புகழும்,
பெருமையும் வாழும் காலத்தில் ஒருவர் தகுதியோடு வாழ்ந்தாரா என்பதற்கான அளவுகோல்.
தக்கார் தகவிலர்
என்பது அவர் அவர் எச்சத்தால் காணப் படும்.
*****
No comments:
Post a Comment