சில சாமர்த்திய எதிர்கொள்ளல்களின் பின்குறிப்பு
முடியவில்லை என்ற இயலாமைதான் கோபமாக வெளிப்படுகிறது.
முடியவில்லை என்ற இயலாமையைக் கருதாமல், முடிவதைச் செய்து கொண்டு பொறுமையாக இருந்தால்,
முடியவில்லை என்பதும் ஒரு நாள் முடிவது ஆகும்.
எதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை.
குறிப்பாக பேச்சில் தேவையற்றது. பேச்சு என்பது வெறும் தகவல் பரிமாற்றத்துக்காகத்தான்.
அதில் சொற்சிலம்பம் ஆடத் தேவையில்லை. ஒரு பிரச்சனை என்றால் சிலம்பம் ஆடித் தப்பித்துக்
கொள்ளலாம். அமைதிக் காலங்களில் ஆடிக் கலவரப்படுத்த வேண்டியதில்லை. சிலம்பமே அதற்குத்தானே.
மென்மையாகப் பேசுவதே நல்லது. வெகு குறைவானச்
சொற்களைக் கொண்டு பேசுவது இன்னும் நல்லது.
நிறைய சொற்களைக் கொண்டு பேசினால் புரிய
வைத்து விடலாம் என்று நினைத்துப் பேசுவது இன்னும் முட்டாள்தனமானது. அவரவர்களுக்கு அவரவர்
மனத்தின் அளவே புரியும்.
எஸ்.கே.வின் உற்சாகத்தைக் குலைப்பதில்
குறியாக இருக்கிறார்கள். அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. வெகு
குறைவாகவே பேச வேண்டியிருக்கிறது.
அவர்கள் அழுதால் எஸ்.கே.வும் அழ வேண்டும்.
அவர்கள் கவலைப்பட்டால் எஸ்.கே.வும் கவலைப்பட வேண்டும். அவர்கள் சுவரில் மோதிக் கொண்டால்
எஸ்.கே.வும் மோதிக் கொள்ள வேண்டும் என்ற கிறுக்குத்தனம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
எஸ்.கே. அமைதியாக இருந்தாலும் அமைதியாக
இருக்க விட மாட்டேன்கிறார்கள். எஸ்.கே.விடம் வறட்டு வம்பு இழுத்து, வாயைப் பிடுங்கி
எஸ்.கே.வை மாட்டி விடுகிறார்கள்.
ஒரு மனிதர் உறங்கும் போது எவ்வளவு கவலைகள்
இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நிம்மதியாக உறங்க வேண்டும். அப்படி எஸ்.கே.வை
உறங்க விட மாட்டேன்கிறார்கள். எஸ்.கே.வைக் கவலைபடுத்தி உறங்கச் செய்வதில் வெற்றி காண்கிறார்கள்.
அவர்களின் கவலைகளைத் தள்ளி விட்டு எஸ்.கே.வைச் சுமக்கச் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்கள்.
நடப்பதெல்லாம் புதிதா என்ன? பழையதுதான்.
பேசப் பேச, பழகப் பழக மாறி விடுவார்கள் என்று நினைத்து எஸ்.கே.தான் தப்புக் கணக்கு
போட்டு விட்டார். பாவம், அவர்களால் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
சுற்றியிருப்பவர்கள் அமைதியாக இருக்க விட
மாட்டார்கள் என்றால் எப்படி அமைதி காண்பது? அவர்கள் எதையாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
அவர்கள் அப்படி பழகி விட்டார்கள்.
எஸ்.கே. அன்று சில மணி நேரங்கள் வரை என்ன
செய்வதென்று தெரியாமல் அப்படியே அமர்ந்து விட்டார். இது போன்று அபூர்வமாகத்தான் நிகழும்.
அதிலிருந்து வெளிவர நேரம் அதிகம் தேவைப்படாது. ஆனால் நிலைமை இப்போது அப்படி இல்லை.
சற்று அதிகமாகவே நேரம் தேவைபடுவது போல ஆகி விட்டது.
சிலர் சாதாரண வேலையையே சிக்கலாக்கிக் கொள்பவர்களாக
இருக்கிறார்கள். அவர்களிடம் போய் ஒரு வேலையை ஒப்படைத்து விட்டு வேலை முடியவில்லையே
என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தம் இருக்க முடியாது.
சோம்பேறிகளிடம் போய் எனக்கு சோறு சமைத்துப்
போட மாட்டேன்கிறீர்களே என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இருக்க முடியுமா?
சில தயாரிப்புகள் அப்படித்தான். சிலர்
அப்படித்தான். குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். திருத்த முடிவதில்லை. அவர்கள்
அப்படியே இருந்து கொள்ளட்டும். அவர்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துக்கு
எஸ்.கே. போன்றவர்கள் தயாராக வேண்டும். அதுதான் காலத்தின் கட்டாயம்.
*****
No comments:
Post a Comment