12 Apr 2018

மறக்காதே! துறக்காதே!


குறளதிகாரம் - 11.6 - விகடபாரதி
மறக்காதே! துறக்காதே!
            வாழ்க்கை என்பது குற்றமும் தண்டனையாகவும்தான் இருக்கிறது. நீதிமன்றம் வழங்கும் தண்டனையிலிருந்து தப்பியவர்கள் கூட அவர்களின் மனசாட்சி வழங்கிய குற்றவுணர்ச்சி எனும் தண்டனையிலிருந்து தப்பித்ததில்லை.
            சட்டங்களுக்கு நீதிகளுக்குக் குற்றமற்றவர்களாக இருப்பதைப் போலவே மனசாட்சியின்படியும் குற்றமற்றவர்களாக இருப்பவர்களே மாசற்றவர்கள்.
            சட்டத்தின் வாயைப் பொத்தி விடலாம். நீதியின் கண்களைக் கட்டி விடலாம். மனசாட்சியின் வாயைப் பொத்துவதோ, மனசாட்சியின் கண்களைக் கட்டுவதோ எந்த நூற்றாண்டிலும் முடியாது.
            குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தே சாகிறது. பாவத்தின் சம்பளம் இப்படித்தான் மரணமாகிறது.
            குற்றமற்ற மனிதர்களாக வாழ்வதே வாழ்வின் குறைந்தபட்ச லட்சியம். அதுவே உச்சபட்ச லட்சியமும் ஆகும்.
            குற்றமற்றவர்களாக வாழ்வதற்கு இரண்டு வழிகள்.
            ஒன்று குற்றமற்று ஒழுகுவதையே ஒழுக்கமாகக் கொண்டு விடுவது. இது எல்லாருக்கும் சாத்தியப்படுவது கிடையாது.
            இன்னொன்று எளிமையான வழி. குற்றமற்றவர்களை அதாவது மாசற்றவர்களை நட்பாகக் கொண்டு அவர்களைப் பின்பற்றி வாழ்வது. உண்மையில் இது மிக எளிமையான வழி.
            இந்த எளிமையான வழி கை கூட அம்மாசற்றவர்களின் நட்பை மறந்து விடாமல் அவர்களோடு எப்போதும் நட்பாக இருப்பதே.
            குற்றம் செய்து விட்டு அதை மறைக்க உதவும் நட்பு பயத்தின் காரணமாக வலுவாகிறது. செல்வந்தர்களோடு கொள்ளும் நட்பு தேவைக்கு உதவுவார்கள் என்ற பலனின் அடிப்படையில் உறுதியாகிறது. ஆனால் குற்றமற்றவர்களோடு கொள்ளும் நட்பு எவ்வித அச்சமோ, பலா பலன்களோ அற்றது. அதனாலேயே அது மறந்து விட ஏதுவாகக் கூடியது.
            குற்றமற்றவர்கள் எனும் மாசற்றவர்களோடு கொள்ளும் நட்பு ஒழுக்கத்தை மட்டுமே அச்சாணியாகக் கொண்டது.
            ஒழுக்கத்தை விட உயர்வானது இல்லை. அதைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. அனுபவப்பட்டப் பிறகே அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்குள் பயமும், பலனும் மனதை ஆட்டிப் படைத்து ஒழுக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி மாசற்றவர்களின் நட்பைக் குறைத்து மதிப்பிட்டு விடுகின்றன. அவர்களின் நட்பை மறக்கச் செய்து விடுகின்றன.
            முடிவில் உண்மை தெரியும் போது மாசற்றவர்களின் நட்பிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் தள்ளி வந்திருப்பது புரிய வரும்.
            அவர்களின் நட்பின் அருகில் இருக்கும் போது குற்றங்கள் நம்மைத் தீண்டுவதில்லை. அவர்களின் நட்பிலிருந்து விலகும் போது குற்றங்கள் சூழத் தொடங்குகின்றன.
            குற்றங்களின் இயல்பு ஆரம்பித்தில் மகிழ்ச்சியையும், முடிவில் தாள முடியாத துன்பத்தையும், துயரத்தையும் தருவதுதான்.
            வாழ்க்கையின் நோக்கம் இன்பம்தான். அந்த இன்பத்தைப் பெறுவதற்கு வழி குற்றங்கள் இல்லாமல் இருப்பதும், குற்றமற்றவர்கள் என்று சொல்லப்படும் மாசற்றவர்களின் நட்பை மறந்து விடாமல் அவர்களோடு நட்பில் இருப்பதும்தான்.
            இன்பத்தின் போது எல்லாரும் தேடி வருவார்கள். துன்பத்தின் போது ஓடி விடுவார்கள்.
            எல்லாரும் விரும்புவது இன்பத்தைத்தான். துன்பத்தை யாரும் விரும்புவதில்லை.
            இன்பமாக இருக்கும் போது துணையிருக்கும் உறவுகள் துன்பத்தின் போது ஓடி விடலாம். நட்பு அப்படி அன்று. அது இன்பம், துன்பம் இரண்டிலும் கலந்து கொள்கிறது. இன்பத்தில் கலந்து கொள்ளா விட்டாலும் துன்பத்தில் துணை நிற்கிறது.
            பகிர்ந்து கொள்ளும் இன்பம் இரண்டு மடங்காகவும், பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாகவும் ஆகும் மர்மம் நட்பில் நிகழ்கிறது.
            உறவுகளில் இருக்கும் சுயநலம் நட்பில் இருப்பதில்லை. அதனாலேயே பல நேரங்களில் உறவை விட நட்பே உயர்வாக இருக்கிறது.
            துன்பத்தில் துணையிருக்கும், தோள் கொடுக்கும் நட்பை ஒரு போதும் துறந்து விடக் கூடாது.
            வாழ்க்கை என்பது மர்மச் சீட்டு விளையாட்டு போன்றது. எப்போது வேண்டுமானால் துன்பம் வரலாம். நல்ல நண்பர்களைத் துறந்து விடாமல் இருந்தால் அவர்கள் துன்பத்துக்கு துணை வருவார்கள்.
            துன்பத்தில் துணை வர நண்பர்கள் இருந்தால் துன்பம் துன்பமாகத் தெரிவதில்லை. தோள் கொடுக்க நண்பர்கள் இருந்தால் துன்பம் கனப்பதில்லை.
            துன்பத்தில் துணை நிற்கும் நட்புகளை துறக்காமல் இருந்தால் வாழ்வில் துன்பமே இல்லை. நண்பர்கள் துணை இருந்தால் துன்பம் எதுவும் இல்லை.
            ஆக வாழ்க்கையில் இரண்டு முக்கியமான கடப்பாடுகள் இருக்கின்றன. ஒன்று மறந்து விடக் கூடாதது தொடர்பானது. மற்றொன்று துறந்து விடக் கூடாதது தொடர்பானது.
            மாசற்றவர்களின் நட்பை மறந்து விடக் கூடாது.
            துன்பத்தில் துணை நின்றவர்களின் நட்பைத் துறந்து விடக் கூடாது.
            இன்பமாக வாழ நினைப்பவர்களுக்கு இந்த இரண்டும் முக்கியம்.
            முதலில் எய்தும் இன்பத்தையும் முடிவில் எய்தும் துன்பத்தையும் புரிந்து கொள்ள முடிபவர்களுக்கே இதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
            முதலில் தொடங்கும் இன்பம் முடிவு வரை இன்பமாகத் தொடர வேண்டுமானால் அதற்கு மாசற்றவர்களின் நட்பும், துன்பத்தில் துணை நிற்பவர்களின் நட்பும் மறக்கப்படாமலும், துறக்கப்படாமலும் பேணப்பட வேண்டும். அப்பேணுதல் ஒரு வகை நன்றியறிதலின் அடையாளம்.
            நன்றியறிதலோடு வாழ்பவர்கள் ஒரு போதும் மாசற்றவர்களின் நட்பை மறப்பதில்லை. துன்பத்தில் உதவியவர்களின் நட்பைத் துறப்பதில்லை. அவர்களின் இன்பம் ஒரு போதும் குறைவதில்லை. அவர்களின் துன்பங்கள் நெடுநாள் நீடிப்பதுமில்லை.
            எப்போதும் இன்பமாக வாழ வேண்டும் என்றால் நாம் எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். நன்றி உள்ளவர்களே நலமாக வாழ்கிறார்கள்.
            செய்நன்றியறிதலே இன்பம். செய்நன்றியறிதலே நலம்.
            அச்செய்நன்றியறிதலின் உண்மையான நோக்கமும் ஒழுக்கமும் நிலைபெற மாசற்றவர்களை மறக்காமலும், துன்பத்தில் உதவியவர்களைத் துறக்காமலும் வாழும் இரண்டு பண்புகளும் அவசியமானவை.
            அதனால்தான் வள்ளுவர்,
            மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு என்கிறார்.
            மாசற்றவர்களை மறக்காதே!
            துன்பத்தில் உதவியவர்களைத் துறக்காதே!
            அவர்களை மறந்தாலும், துறந்தாலும் வாழ்க்கை சிறக்காதே!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...