19 Apr 2018

இன்றே இப்போதே ஒழித்துக் கட்டு!


குறளதிகாரம் - 12.3 - விகடபாரதி
இன்றே இப்போதே ஒழித்துக் கட்டு!
            பாம்பின் படம் அழகாக இருக்கிறது என்பதற்காக கை வைத்து ரசிக்க முடியுமா?
            உண்ண உண்ண குளிர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக நஞ்சை அள்ளிப் புசிக்க முடியுமா?
            இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்பதற்காக வியாதிகளை வாங்கிக் கட்டிக் கொள்ள முடியுமா?
            பின்விளைவுகளை வைத்தே முன்நிகழ்த்த வேண்டிய காரியங்களை ஏற்பதா? வேண்டாமா? என முடிவு செய்ய வேண்டும்.
            ஆனால்,
            ஆக்கம் என்று சொல்லப்படும் செல்வம் இருக்கிறதே,
            அதாவது,
            இன்னும் குறிப்பாக செல்வம் என்று சொல்லப்படுகின்ற பணம் இருக்கிறதே, அது பின்விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் அல்லவா ஆசையைத் தூண்டுகிறது.
            அழித்து ஒழிக்கப்பட வேண்டிய ஆசை அல்லவா அது!
            பொதுவாக வாழ்க்கையில் வேறு எதற்கும் மனிதர்க்கு அவ்வளவு துணிவு வராது போது, பணம் கிடைக்கிறது என்பதற்காக எதையும் செய்யும் துணிவு தன்னையும் அறியாமல் அல்லவா வந்து விடுகிறது!
            அஞ்ச வேண்டிய துணிவு அல்லவா அது!
            அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்பார் வள்ளுவர்.
            பின்விளைவுகள் அறியாத துணிவை துணிவு என்று கொள்வதற்கில்லை.
            பண ஆசையும், பணம் கிடைக்கிறது என்பதற்காக எதையும் செய்யும் துணிவும் நடுவுநிலைமை குறித்து சிந்திப்பதில்லை.
            நடுவுநிலைமையோடு யோசித்தால் பண ஆசை மட்டுபடும்.
            நடுவுநிலைமையோடு ஆராய்ந்தால் பணம் கிடைக்கிறது என்பதற்காக எதையும் செய்யும் துணிவு கட்டுபடும்.
            தம் குடும்பத்துக்காகக் கொள்ளையடித்துப் பணம் சேர்ப்பதாகக் கூறும் ஒருவருக்கு இருக்கும் அதே போன்றே குடும்பம்தானே யாரிடமும் கொள்ளையடிக்க நினைக்கிறாரோ அவருக்கும் இருக்கும்.
            தம் உறவுகளுக்காக முறை தவறி பொருள் சேர்ப்பதாகக் கூறும் ஒருவருக்கு இருக்கும் அதே போன்ற உறவுகள்தானே யாரிடமும் முறை தவறி பொருள் சேர்க்க நினைக்கிறாரோ அவருக்கும் இருக்கும்.
            தம் மேல் பாசமும் நேசமும் கொண்ட சுற்றத்துக்காக கையூட்டும், ஊழலும் செய்வதாகக் கூறும் ஒருவருக்கு இருக்கும் அதே போன்ற சுற்றம்தானே யாரிடம் கையூட்டுப் பெறுகிறாரோ, யார் யாரிடமெல்லாம் ஊழல் செய்கிறாரோ அவர்களுக்கும் இருக்கும்.
            அடிக்கும் போது நமக்கு எப்படி வலிக்கிறதோ அப்படியே பிறருக்கும் வலிக்கிறது.
            சுடும் போது நமக்கு எப்படிச் சுடுகிறதோ அப்படியே பிறருக்கும் சுடுகிறது.
            வெட்டும் போது நமக்கு எப்படிக் காயம் ஏற்படுகிறதோ அப்படியே பிறருக்கும் காயம் ஏற்படுகிறது.
            இப்படி நடுவுநிலைமையோடு சிந்திக்கும் போதுதான் நடுவுநிலைமைத் தவறி வரும் செல்வத்தால் நேரிடும் பின்விளைவுகளை உணர முடிகிறது.
            தங்க ஊசி என்பதற்காக அதை எடுத்துக் கண்ணில் குத்திக் கொள்ள முடியாது.
            வெள்ளி கத்தி என்பதற்காக அதை எடுத்து விரலை நறுக்கிக் கொள்ள முடியாது.
            வைரம் பதித்த வாள் என்பதற்காக அதை எடுத்து மார்பில் குத்தி உயிரைப் போக்கிக் கொள்ள முடியாது.
            அதே போல்தான்,
            நன்மையைத் தருகிறது என்பதற்காக நடுவுநிலைமை தவறி செல்வம் சேர்க்க முடியாது.
            நடுவுநிலைமை தவறிச் சேர்க்கும் செல்வம் செல்வமே ஆகாது.
            நடுவுநிலைமை தவறுதால் கிடைக்கும் பொருள் பொருளே ஆகாது.
            நடுவுநிலைமை தவறுவதால் வரும் ஆக்கம் ஆக்கமே ஆகாது.
            அது பெயரைப் பழிக்கும்.
            புகழை அழிக்கும்.
            சந்ததியை ஒழிக்கும்.
            ஆகவேத்தான் நடுவுநிலைமைத் தவறுவதால் ஆக்கம் கிடைக்கும் என்றாலும்... அது நன்மையையே தருவதாக இருக்கும் என்றாலும்,
            அப்படி வரும் ஆக்கத்தை நினையாமல் அன்றே, அப்போதே அழிய விட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
            ஒரு கணம் தாமதித்தாலும் சபலம் தட்டலாம்.
            ஒரு நொடி தாமதித்தாலும் சமாதானம் உண்டாகலாம்.
            ஒரு பொழுது தாமதித்தாலும் பரவாயில்லை என்று தோன்றி விடலாம்.
            ஆகவேத்தான் அப்படிப்பட்ட எண்ணத்தை அன்றே, அப்போதே ஒழிய விட வேண்டும்.
            சில முடிவுகளை நிதானமாக எடுக்கலாம்.
            சில முடிவுகளை மெதுவாக எடுக்கலாம்.
            சில முடிவுகளை ஆறப் போடலாம்.
            உடனுக்குடன்,
            அன்றே,
            அப்போதே எடுக்கப்பட வேண்டிய முடிவுகளும் இருக்கின்றன.
            நடுவுநிலைமை தவறினாலும் நன்மையைத் தரும் ஆக்கம் எனும் செல்வம் குறித்த எடுக்க வேண்டிய முடிவு என்பது உடனுக்குடன் அன்றே, அப்போதே, அவ்வெண்ணம் தோன்றிய போதே எடுக்கப்பட வேண்டியது.
            அதாவது அப்படி ஓர் எண்ணம் மறுபடியும் தோன்றாத வகையில் ஒழியும்படி ஒரு முடிவுக்கு வர வேண்டிய முடிவான முடிவு அது.
            நன்றே தரினும் நடுவு இகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்.
            தவறான எண்ணங்களைத் தோன்றும் போதே ஒழித்துக் கட்டி விட வேண்டும்.
            வளர விட்டு ஒழித்துக் கட்ட தவறான எண்ணங்கள் வெறும் எதிரிகள் அல்ல, எதிரிகளை விட மோசமான எதிரிகள்.
            இளைதாக முள்மரம் களைவதுதானே சரியாக இருக்கும்?!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...