தப்பித்தலுக்கானப் புறப்பாட்டை நிறுத்தும்
முறைகள்
எஸ்.கே. நினைத்தார், வீட்டை விட்டு ஓடி
விடலாம் என்று. மேலும் நினைத்தார் தான் பணியாற்றும் நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்துக்கு
மாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என்று.
இரண்டையும் எஸ்.கே. செய்ய வேண்டியதில்லை.
வீட்டை அதன் போக்கில் விட்டு விட்டால்... நிறுவனத்தை அதன் போக்கில் விட்டு விட்டால்...
எஸ்.கே. இரண்டை விட்டும் எங்கும் ஓடத் தேவையில்லை.
அதனதை அதனதன் போக்கில் விடாமல் இறுக்கிப்
பிடித்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நினைப்பால்தான் எஸ்.கே. அப்படி
இருக்கவில்லையே என்று அந்த இடத்தை விட்டு ஓட முயற்சிக்கிறார்.
ஏன் மனதில் அப்படி ஒரு விடாப்பிடியான கருத்தை
வைத்துக் கொள்ள வேண்டும்? வீடு என்றால் இப்படி இருக்க வேண்டும், நிறுவனம் என்றால்
இப்படி இருக்க வேண்டும் என்று.
அந்த விடப் பிடியான கருத்துதான் வீட்டைப்
பிடிக்காமல் செய்கிறது. அந்த விடாப் பிடியான கருத்துதான் பள்ளியைப் பிடிக்காமல் செய்கிறது.
இவைகளில் ஒரு சில மாற்றங்களை விரும்பும்
வகையில் செய்து கொள்ளலாம். முற்றிலும் மாற்ற வேண்டும் என்று நினைப்பது தம் அதிகார
வரம்பில் மட்டுமே இல்லை என்பதை எஸ்.கே. புரிந்து கொள்ள வேண்டும். அதை புரிந்து கொள்ள
மறுப்பதுதான் சர்வாதிகாரத்தனம்.
தலைமையில் இருப்பவர்கள் சந்தேகப் பேர்வழி
எனும் போது அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது முடியாத காரியம். தவறு அப்படித்தான்
ஆரம்பமாகிறது. அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று முயன்று நம்பிக்கை கொடுக்க
முடியாமல் விரக்தி அடைய நேரிடுகிறது.
அவர்கள் சந்தேகத்தோடே இருக்கட்டும். அவர்களின்
சந்தேகம். அவர்களின் உரிமை. அதற்கு யார் என்ன செய்ய முடியும்?
இன்னொரு அருகில் இருக்கும் மேல்மட்டத்
தலைவரில் ஒருவர் அதிகார ஆசை பிடித்து ஆடுகிறார் என்றால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்?
அது அவர் விருப்பம். அவர் உரிமை. அவர் ஜனநாயகத் தன்மையோடு இல்லை என்று எஸ்.கே. நினைக்க
வேண்டியதில்லை, அப்படி ஒரு தன்மைக்கு அவரை மாற்ற வேண்டும் என்று எஸ்.கே. செயல்படவும்
வேண்டியதில்லை.
அடுத்தவர்களை மாற்ற வேண்டும் என்று நினைத்துதான்
எஸ்.கே. தம் மனதுக்குள் அநியாயமாகத் தோற்றுப் போகிறார்.
சரியானச் சூழ்நிலைகள் வரும் போது, காலங்கள்
மாறும் போது அவர்கள் மாறி விடுவார்கள். காற்றடித்து வீழ்த்தா விட்டாலும் இலைகள் ஒரு
நாளில் பழுத்து கீழே விழுந்துதான் ஆக வேண்டும்.
எஸ்.கே. யாரையும் வீழ்த்த வேண்டும் என்று
நினைக்க வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு வீழ்ச்சிக் காலம் என்பது தானே வரும்.
அப்போது அவர்கள் வீழ்ந்து கொள்வார்கள். வீழ்ந்து எழுந்து மாறிக் கொள்வார்கள் அல்லது
மாறாமல் இருந்து கொள்வார்கள்.
யாரையும் மாற்றி விடக் கூடாது. ஆனால் வார்த்தைகளால்
மாற்ற முயலுவதைப் போல ஒரு பாவ்லாவைக் காட்டலாம். தப்பில்லை. செயலில் இறங்கி சிக்கிக்
கொள்ளக் கூடாது. எதற்கும் அதிகபட்சம் வார்த்தைகளை அளவோடு பிரயோகிப்பதோடு நிறுத்திக்
கொள்ள வேண்டும். சில நேரங்களில் அதையும் கூட பிரயோகிக்காமல் அமைதியாக இருந்து விடுவது
நல்லது. ஆனால் அதையும் தாண்டி ஒரு அளவுக்கு மேல் முயலுவது அதிகப் பிரசங்கித்தனமே.
எஸ்.கே. ஒரு அதிகப் பிரசங்கி. அதை ஒரு
பலமாக நினைக்கிறார் அவர். அவர் பலவீனமே அதுதான்.
*****
No comments:
Post a Comment