5 Apr 2018

நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள்!


நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள்!
            நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள்தான். எஸ்.கே.வின் அண்மைக்கால நாட்குறிப்பிலிருந்து களவாண்டு உங்கள் பார்வைக்குக் கீழே காண்பவைகள் வைக்கப்படுகிறன. பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயன்படுத்தா இயலாவிட்டால் அப்படிப்பட்டவைகளை எப்படி ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எவ்வகையிலும் உங்களுக்கு நன்மை தருவதே எஸ்.கே.வின் நாட்குறிப்பின் தனிச்சிறப்பு. இதற்கு மேல் பூடகம் பேசிப் பயனில்லை. நீங்கள் தொடருங்கள்...
            எதையும் அதிகம் நோண்டக் கூடாது. அவைகள் நமது நேரத்தை அநாவசியமாக நோண்டி வீணடித்து விடும். இது வாட்ஸ் புக், பேஸ்புக், டிவிட்டர் வகையறாக்களுக்கு மட்டுமல்லாது அநாவசிய சிந்தனைகளுக்கும் பொருந்தும்.
            மற்றொன்று,
            திறமை இல்லை என்று நினைக்க வேண்டாம். அதுவும் நல்லதுதான். இல்லையென்றால் அவ்வளவு அமைதியாக, பொறுமையாக இருக்க முடியாது.
            ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் அது குறித்துப் பேசக் கூடாது. அப்படி பேசினால் அவர்களின் புரியாமைக்கு ஆளாவதுடன், அவர்களின் கோபத்துக்கு ஆளாகி எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும்.
            தெளிவாக இருப்பதாக நினைக்கும் அரை வேக்காட்டுகளிடம் இவ்விசயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த அரை வேக்காடுகள் எப்போதும் தங்கள் முடிவுகளை அடுத்தவர் மேல் திணிப்பதில் மிகுந்த கவனமாக இருக்கின்றன.
            பேசிப் பயனில்லை என்பதால் மெளனம் அதிகம் பயன் தருகிறது. அப்புறம் என்ன செய்வதுதான் பயன் என்றால் செயல்தான் பயன். என்ன பேச நினைக்கிறோமோ அதைச் செயலால் நிகழ்த்திக் காட்டி விடுவது எளிது. எந்தப் பிரச்சனையும் இருக்காது. அவர்களிடம் பேசிப் பேசி தொண்டைத் தண்ணி வற்றிப் போவதை விட, பேசிப் பேசித் தேவையில்லாத சண்டைகள் உண்டாவதை விட அது எவ்வளவோ மேல்.
            எது இயல்பானது இல்லையோ அது சரியானது இல்லை. இயல்பற்றதைச் சரியென நினைத்து அதைத் திணிக்க முற்படுபவர்களிடம் வெறென்ன செய்வது? அவர்கள் பேசுவதை ஏற்றுக் கொள்வதைப் போல சலாம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.
            முயற்சியும் பொறுமையும் இல்லாதவர்களிடம் பேசிப் பயனில்லை. அவர்களின் சோம்பேறித்தனத்தை மெச்சுவதே அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி.
            சுரண்டிப் பெருத்த சுயநலவாதிகளிடம் சென்று உதவி கேட்கலாமா? அது ஏற்புடையதா என்ன? தன்னலச் சேற்றில் ஊறித் திளைத்தவர்கள் அதை விரும்புவார்களா என்ன? கறக்க முடியாத கயவர்களின் பட்டியலில் முதன்மையாக இருக்கக் கூடியவர்களிடம் கறப்பதற்கான முறையே அல்ல அது. எதையும் நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். திட்டமிட்ட படியே செயல்படுத்த வேண்டும். வெளியே போகும் சொற்களுக்கும், செயல்களுக்கும் இது பொருந்தும். மற்றபடி உள்ளுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். ஏனென்றால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. மற்றவர்களுக்குத் தெரியும் விசயங்களில் ஒரு காரியத்தனமானத் திட்டமிடல் எப்போதும் தேவை.
            வெளியே போகும் வார்த்தைகளுக்கு எப்போதும் பதில் சொல்ல வேண்டும். அது போல் வெளியே தெரியும் செயல்களுக்கும் எப்போதும் விளக்கம் சொல்ல வேண்டும். ஆகவே இவ்விசயங்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
            பொதுவாக யாருடைய சொல்லுக்கும், செயலுக்கும் எந்தப் பதிலும், பிரதிவினையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் பொதுவானப் பிரதிவினை ஒன்று உள்ளது. உங்களுக்குத் தெரியாதது இல்லை, பார்த்துச் செய்யுங்கள் என்பதே அது. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும். பிறகு எதுவும் விபரீதமாக நிகழ்ந்தாலும் உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று இருந்து விட்டோம் என்று சொல்லியே தப்பித்தும் கொள்ளலாம்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...