5 Apr 2018

இன்சொல் இருக்க வன்சொல் எதற்கு?


குறளதிகாரம் - 10.9 - விகடபாரதி
இன்சொல் இருக்க வன்சொல் எதற்கு?
            பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நினைக்கிறோமோ, அவ்வாறே தாம் பிறரிடம் நடந்து கொள்வதே ஒழுக்கம் என்பார் தந்தை பெரியார்.
            நமக்கு மற்றவர்கள் நன்மையே செய்ய வேண்டும் என்றால், நாமும் மற்றவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும்.
            நம்மிடம் மற்றவர்கள் உறவாக இருக்க வேண்டும் என்றால், நாமும் மற்றவர்களிடம் உறவாக இருக்க வேண்டும்.
            நம்மை மற்றவர்கள் அரவணைக்க வேண்டும் என்றால், நாமும் மற்றவர்களை அரவணைக்க வேண்டும்.
            நம் மீது மற்றவர்கள் அன்பு செலுத்த வேண்டும் என்றால், நாமும் மற்றவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும்.
            நம்மிடம் மற்றவர்கள் பண்போடு பழக வேண்டும் என்றால், நாமும் மற்றவர்களிடம் பண்போடு பழக வேண்டும்.
            நம்மிடம் மற்றவர்கள் இனிமையாகப் பேச வேண்டும் என்றால், நாமும் மற்றவரக்ளிடம் இனிமையாகப் பேச வேண்டும்.
            நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படியே உலகமும் நம்மிடம் நடந்து கொள்கிறது.
            நாம் எப்படி பேசுகிறமோ, அப்படியே உலகமும் நம்மிடம் பேசுகிறது.
            நாம் எப்படி வினையாற்றுகிறமோ, அப்படியே உலகம் நம்மிடம் வினையாற்றுகிறது.
            தீதும் நன்று பிறர் தர வாரா. நாம் என்ன பேசுகிறோமோ, நாம் என்ன செய்கிறோமோ அதுவே திரும்பி வருகிறது.
            நாம் அன்பாக இருக்கும் போது, எதிரில் இருப்பவரும் அன்பாக இருக்கிறார்.
            நாம் கோபப்பட்டுப் பேசினால், எதிரில் இருப்பவரும் கோபப்பட்டு பேசுகிறார்.
            நாம் சண்டைக்குத் தயாரானால், எதிரில் இருப்பவரும் சண்டைக்குத் தயாராகிறார்.
            நாம் பகை வளர்த்தால், எதிரில் இருப்பவரும் அதையே வளர்க்கிறார்.
            தீ எரிக்கிறது என்பது தெரிந்த பின்னும் தீயை வைக்கலாமா?
            காய் கசக்கிறது என்பது தெரிந்த பின்னும் காயைப் புசிக்கலாமா?
            முள் குத்துகிறது என்பது தெரிந்த பின்னும் முள்ளில் கால் வைக்கலாமா?
            அறமற்றவைகள் அழிவைத் தருகிறது என்பது தெரிந்த பின்னும் அவைகளைக் கைகொள்ளலாமா?
            தீயினாற் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு எனத் தெரிந்த பின்னும் சுடுசொற்களைப் பேசலாமா?
            இன்சொற்கள் இனிமை தருகிறது எனத் தெரிந்த பின்னும் இன்சொற்களைப் பேசாமல் இருக்கலாமா?
            தம்மிடம் மற்றவர்கள் இனிமையாகப் பேசும் போது இனிமையை உணர்கிறோம். தாமும் அப்படி இனிமையாகப் பேசினால்தானே மற்றவர்கள் தம்மிடமிருந்து இனிமையை உணர முடியும்!
            அதுவே தம்மிடம் மற்றவர்கள் கடுமையாகப் பேசும் போது வெம்மையை உணர்கிறோம். தாமும் அப்படி கடுமையாகப் பேசினால் மற்றவர்களும் அதே வெம்மையையே உணர்வார்கள்.
            அன்பு செய்தால் அன்பும், வம்பு செய்தால் வம்புமே விளைகிறது.
            இனிமையாகப் பேசினால் இனிமையும், கடுமையாகப் பேசினால் வெம்மையும் உண்டாகிறது.
            கசப்பை உண்டுவிட்டு இனிமையை எதிர்பார்க்க முடியாது.
            வினை விதைத்தவர் தினை அறுக்க முடியாது.
            வன்சொற்களைப் பேசுபவர் இன்சொற்களின் இனிமையை அனுபவிக்க முடியாது.
            இப்படியாக,
            இன்சொற்கள் இனிமையைத் தருகின்றன என்பது தெரிந்த பின்னும் இன்சொற்களைத்தானே பேச வேண்டும்!
            வன்சொற்கள் வெம்மையைத் தருகின்றன என்பது தெரிந்த பின்னும் ஏன் வன்சொற்களைப் பேச வேண்டும்?
            தீ சுடும் எனத் தெரிந்த பின்னும் ஏன் தீயில் கை வைக்க வேண்டும்?
            நஞ்சு கொல்லும் எனத் தெரிந்த பின்னும் ஏன் அதைப் பருக வேண்டும்?
            நன்றி கெட்டவர்கள் கூட இருந்தே குழி பறிப்பார்கள் என்று தெரிந்த பின்னும் ஏன் அவர்களோடு பழக வேண்டும்?
            கயவர்கள் எச்சில் கையைக் கூட உதற மாட்டார்கள் என்பது தெரிந்த பின்னும் அவர்கள் முன் சென்று ஏன் கையேந்த வேண்டும்?
            கிழக்கில் உதிக்கும் சூரியனுக்கு ஏன் மேற்கு நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும்?
            இன்சொற்களே இனியவை எனத் தெரிந்த பின்னும் ஏன் வன்சொற்கள் வழங்க வேண்டும்?
            நன்மை எது என்று தெரிந்த பின்னும் புன்மையைக் கைகொள்ளும் மனம் பேதைத்தனமானது.
            தீமை எது என்று தெரிந்த பின்னும் அதைப் பின்தொடரும் உள்ளம் முட்டாள்தனமானது.
            விலக்க வேண்டியது எது என்று தெரிந்த பின்னும் அதை அரவணைக்க நினைப்பது மடத்தனமானது.
            கை கொள்ள வேண்டியன இன்சொற்கள். கை விட வேண்டியன வன்சொற்கள்.
            மேன்மை இருக்க, கீழ்மை எதற்கு?
            அழகு இருக்க, அசிங்கம் எதற்கு?
            அறிவு இருக்க இருக்க, முட்டாள்தனம் எதற்கு?
            தெளிவு இருக்க, குழப்பம் எதற்கு?
            புகழ் இருக்க, பழி எதற்கு?
            இன்சொல் இருக்க, வன்சொல் எதற்கு?
            இதைத்தான் வள்ளுவர்,
            இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன் கொலோ வன்சொல் வழங்குவது? என்கிறார்.
            நல்லதைக் கொடுத்தும்,
            அல்லதை விடுத்தும் நல்லதைப் பெறுவோம்!
            இனிமையை வழங்கியும்,
            கடுமையை விலக்கியும் இனிமையைப் பெறுவோம்!
            நன்மையை வழங்கி நன்மையைப் பெறுவோம்!
            இனிமையை வழங்கி இனிமையைப் பெறுவோம்!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...