14 Apr 2018

எதை நினைப்பது? எதை மறப்பது?


குறளதிகாரம் - 11.8 - விகடபாரதி
எதை நினைப்பது? எதை மறப்பது?
            கணக்கு கூட்டலாலும், கழித்தலாலும் ஆனது போல வாழ்க்கை நினைவுகளாலும், மறதிகளாலும் ஆனது.
            ஒரு நாள் என்பது இரவாலும், பகலாலும் ஆனது போல வாழ்க்கை என்பதும் நினைவுகள் மற்றும் மறதிகளால் ஆனது.
            நினைவுகளாலும், மறதிகளாலும் ஆன வாழ்வில் எதை நினைப்பது? எதை மறப்பது?
            ஒரு நாளின் பகலில் விழிப்பதும், இரவில் உறங்குவதும் போல வாழ்வின் நன்றிகளை நினைப்பதும், நன்றல்லாதவைகளை மறப்பதும் வேண்டும்.
            நினைவு என்பது செய்நன்றியை நினைப்பதற்கு.
            மறதி என்பது செய்யாத நன்றியை மறப்பதற்கு.
            கத்தி என்பது காய்கறியையும் நறுக்கும், விரலையும் நறுக்கும் என்பது போல மனிதர்கள் நன்றியுடைமையைும், நன்றிகெட்டதனத்தையும் ஒருங்கே பெற்றுள்ளனர்.
            கத்தி யார் வெட்டினாலும் வெட்டும்.
            மனிதர்களும் அப்படித்தான். எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நன்றி உள்ளவர்களாக இருக்கலாம். எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நன்றியற்றவர்களாக இருக்கலாம். எவர் வேண்டுமானாலும் நல்லதைச் செய்யலாம். எவர் வேண்டுமானாலும் அல்லதைச் செய்யலாம்.
            இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி மனதுள் எதை வைக்க வேண்டும்? எதை வைக்கக் கூடாது? என்பதற்கு ஒரு விதியைப் போல வள்ளுவர் என்ன பேசுகிறார் என்றால்,
            மனதுள் நன்றியை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். நன்று அல்லாதவற்றை மறதியில் தள்ளி விட வேண்டும்.
            மனிதர்கள் வித்தியாசமானவர்கள். நன்றிகளை மறந்து விட்டு நன்று அல்லாதவைகளை நினைவில் வைத்துக் கொண்டு அல்லாடுவார்கள்.
            அந்த அல்லாட்டம் கூடாது. மிருகங்களே நன்றியை நினைவில் வைத்து விசுவாசத்தோடு இருக்கும் போது மனிதர்கள் அப்படி இருக்கக் கூடாது அல்லவா!
            அதையும் தாண்டி சிந்திக்கும் போது...
            நன்று அல்லாதவைகள் ஏன் நினைவில் நிற்காமல் மறதியில் தொலைய வேண்டும் என்றால், மனிதன் மனதால் இயங்குபவனாக இருக்கிறான் என்பதே முக்கியக் காரணம்.
            மனதுள் எதை வைக்கிறோமோ அதற்குத் தகுந்தாற் போல்தான் அது இயங்குகிறது.
            மனதுக்குள் நன்றி, நன்மை போன்றவைகளை வைக்கும் போது அன்போடும், கருணையோடும், மகிழ்வோடும், நெகிழ்வோடும் இயங்குகிறது.
            மனதுக்குள் நன்றல்லாதவைகளை, நன்மையற்றவைகளை வைக்கும் போது கோபம், பழிவாங்கல், குரோதம், வன்மம் கொண்டு இயங்குகிறது.
            ஆகவேத்தான் அப்படிப்பட்ட மனதுள் நன்றியை வைக்கச் சொல்கிறார் வள்ளுவர். நன்றல்லாத குப்பைகளை மறதி எனும் குப்பைத் தொட்டிக்குள் தள்ளச் சொல்கிறார் வள்ளுவர்.
            நல்ல பாத்திரத்தில் குப்பைகளைக் குவித்து வைத்தால் துர்நாற்றம்தான் அடிக்கும். நல்ல மனதுள் நன்றல்லாதவைகளை மறக்காமல், அவைகளை நினைவில் குவித்து வைத்தால் துர்மனமாகத்தான் ஆகும்.
            மறதியை நன்றல்லாதவைகளை மறக்கத்தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு மாறாக நன்றியை மறக்க மறதியைப் பயன்படுத்துவது என்பது மனிதரின் மோசமான வியாதி. அதிலும் செய்த நன்றியை மறப்பது மோசமான வியாதிகளில் எல்லாம் படு மோசமான வியாதி.
            நாம் ஒரு உதவியையும் செய்யாமல் இருக்க, நமக்குச் செய்யப்படும் உதவி வையகத்தையும், வானகத்தையும் விட பெரியதாக இருப்பதால்,
            காலத்தே செய்யப்படும் உதவி உலகத்தை விடவும் பெரியதாக இருப்பதால்,
            பயன் கருதாமல் செய்யப்படும் உதவி கடலை விடவும் பெரியதாக இருப்பதால்,
            பயனை நோக்கும் இடத்து தினையளவு உதவியும் பனையளவாக இருப்பதால்,
            உதவி என்பது எப்போதும் அளவிடற்கரியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட உதவியை மறப்பது நன்றன்று.
            ஒருவர் உதவி செய்யாமல் இருப்பதை அன்றே மறந்து விடுவது நன்று. ‍அதை மறுநாள் மறப்போம் என்றோ, மறுவாரம் மறப்போம் என்றோ, மறு மாதம் மறப்போம் என்றோ, மறு ஆண்டு மறப்போம் என்றோ தள்ளிப் போடத் தேவையில்லை. அன்றே அதன் கதையை முடித்து விடுவது நல்லது.
            நன்றிகள் தொடர்கதையாக தொடர வேண்டும். நன்று அல்லாதவைகள் தொடங்கப்படாத கதைகளாக நிறுத்தி விட வேண்டும்.
            நினைவு காற்புள்ளி. மறதி முற்றுப்புள்ளி. காற்புள்ளி இட வேண்டிய இடத்தில் காற்புள்ளியும், முற்றுப்புள்ளி இட வேண்டிய இடத்தில் முற்றுப்புள்ளியும் இட வேண்டும். மாற்றி இடக் கூடாது அல்லவா!
            நன்றியை நினைப்பது நன்று. நன்று அல்லாதவைகளை மறப்பது நன்று.
            வள்ளுவர் அதை இன்னும் அழுத்தமாகக் கூற வேண்டும் என்ற நோக்கில் நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லதை நினைப்பது நன்றன்று என்று வலியுறுத்திக் கூறுவார்.
            ஆம்!
            நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது அன்றே மறப்பது நன்று.
            நினைக்கத் தெரிந்த மனமே! நன்றியை நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு நன்றி அல்லாதவைகளை மறக்கத் தெரியாதா? என்பதே வள்ளுவர் சொல்லும் செய்தி.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...