இருத்தலின் சில குறிப்புகள்
ஒவ்வொருவரும் தன் மனதின் பாதிப்புக்காக
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அது அடுத்தவர்களின் மனதைக் கொலை செய்வது உட்பட.
சில நேரங்களில் உடலையும்.
யாரும் தங்கள் மனம் பாதிக்கப்படுவதை விரும்புவதில்லை.
அதனால் மற்றவர்களின் மனம் பாதிக்கப்படாத வகையில் பேசப், பழக வேண்டும். அதற்கு ஒருவர்
'முடியவில்லை' என்று சொன்னால் அவரை அத்தோடு விட்டு விட வேண்டும். அவரிடம் போய் தன்னம்பிக்கை
பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. ஒருவர் இயலவில்லை என்று சொன்னால் அத்தோடு விட்டு
விட வேண்டும். அவரிடம் போய் நிபந்தனைகளை விதித்து, கட்டுபாடுகளைத் திணித்து நிர்பந்திக்கக்
கூடாது. அது அவரது மனதைப் பாதிக்கவே செய்யும். எளிமையானச் சூழ்நிலையை மேலும் கடினமாக்கவே
செய்யும்.
இயலாதவர்களிடம் போய் முயற்சியைப் பற்றி
பேசாமல் இருப்பதும், முயல்பவர்களிடம் போய் இயலாமையை பேசாமல் இருப்பதும் பழக்க வழக்கம்
கெடாமல் இருக்க நல்ல மார்க்கம்.
துக்கமாக இருக்கும் ஒருவரிடம் ஆறுதல் படுத்துகிறேன்
பேர்வழி என்று மகிழ்ச்சியைப் பற்றி பேசி, அதனால் அவரது துக்கம் கோபமாக மாறி நம்மை
வசை பாட காரணமாகி நாம் துக்கப்பட்டு வரக் கூடாது.
எதையும் மாற்ற வேண்டியதில்லை. யாரையும்
திருத்த வேண்டியதில்லை. மாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் வஞ்சமாக இருக்கிறார்கள்.
திருத்த வேண்டிய கடமையில் இருப்பவர்கள் சூசகமாக இருக்கிறார்கள். பொறுப்புகளை அப்பாவியின்
தலையில் கட்டி விட்டு நைசாக நழுவுவதில் சமத்தாக இருக்கிறார்கள்.
பேச்சிலோ, செயலிலோ ஒரு குறிப்பிட்ட அளவைத்
தாண்டக் கூடாது. அறிவுரை வழங்குவதிலும், நிர்பந்தம் செய்வதிலும், கட்டாயப்படுத்துவதிலும்
இது பொருந்தும். இதனால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை விபரீதம் ஆவது தடுக்கப்படும்.
இவ்வகையில் ஒரு நிலைமை இயல்பாக இருப்பதற்கும், விபரீதமாக இருப்பதற்கும் ஒரு வகையில்
காரணமாக இருப்பதாகி விடக் கூடாது.
யாரோடும் எந்தப் பிரச்சனையும் வராமல்
இருப்பதற்கு யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் இருப்பது நல்லதொரு வழியாகும். யாரைப்
பற்றி குறை சொல்லி என்ன ஆகப் போகிறது? அதனால் எல்லாம் யாரும் தங்களைத் திருத்திக்
கொள்ள முன்வருவதில்லை. மாறாக அவர்கள் தங்கள் குறைகளை இன்னும் அதிகப்படுத்தவே செய்கிறார்கள்.
பேச்சில் எந்தக் குறையும் வராமல் பேச வேண்டும்
என்று நினைத்தால், எல்லாவற்றையும் நேர்மறையாகப் பேசுவதுதான் சிறந்தது. தம்மையும் அறியாமல்
சில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகளால் சிக்கிக் கொள்ளக் கூடிய அபாயத்தைத் தவிர்ப்பதற்கும்
இந்த நேர்மறையானப் பேச்சுமுறை மிகவும் உதவும்.
எதிர்மறையாகப் பேசி எதையும் மாற்றி விட
முடியாது. அது ஒரு பயமுறுத்தலை உருவாக்கும் என்பது உண்மை. உளவியல் ரீதியாக ஓர் அதிர்ச்சியை
உருவாக்கலாம். மிரட்டலாகத் தோற்றம் தந்து அச்சத்தை விளைவிக்கலாம். ஆனால் அதன் பயன்
நீண்ட காலம் நிலைத்து நிற்காது. எவரிடம் இந்த அணுகுமுறையைக் கையாளுகிறோமோ அவரும்
எதிர்மறையாக ஆரம்பித்து விட்டால் நாம் அவரை
மிஞ்சி எதிர்மறையாக ஆக நேரிடும்.
நேர்மறையாக செயல்பட இயலாத இடங்களும் இருக்கவே
செய்கின்றன. அது போன்ற நேரங்களும் அமையவேச் செய்கின்றன. அது போன்ற இடங்களில், நேரங்களில்
அமைதியாக இருப்பது சிறப்பு.
தம் மனதை யாரைக் கொண்டும் அல்லாமல் தாமே
சரி செய்து கொள்ளும் ஆகப் பெரும் வழிமுறை அது.
அதிகம் செயல்பட வேண்டும் என்று அவசியமில்லை.
குறைவாகச் செயல்பட்டால் போதும். அதில் எதிர்மறை அம்சங்கள் இல்லாமல் இருந்தால் போதும்.
மற்றபடி மனிதர்களின் இயல்பான பலஹீனங்களை,
அறியாமைகளை, முட்டாள்தனங்களைப் பொருத்துக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
*****
No comments:
Post a Comment