13 Apr 2018

ஏழு தலைமுறைக்கேனும் நன்றியோடு இருங்கள்!


குறளதிகாரம் - 11.7 - விகடபாரதி
ஏழு தலைமுறைக்கேனும் நன்றியோடு இருங்கள்!
            பத்து ரூபாய் பணம் கொடுத்து உதவியவரின் நட்பு பத்து நாட்களுக்கு நினைவில் இருக்கும்.
            ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியரின் நட்பு பத்து வாரங்களுக்கு நினைவில் இருக்கும்.
            லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவரின் நட்பு பத்து மாதங்களுக்கு நினைவில் இருக்கும்.
            கோடி ரூபாய் பணம் கொடுத்து உதவியவரின் நட்பு பத்து ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கும்.
            அதுவே அந்த உதவி கடனாகக் கொடுத்து உதவியது என்றால், சிலருக்கு அந்த நொடியே அந்த உதவி மறந்து விடும்.
            ஒருவரிடமிருந்து பெறுகின்ற உதவி ஒருவருக்கு எவ்வளவு காலம் நினைவில் நிற்கலாம்? நான் கணக்கிலா? வாரக் கணக்கிலா? மாதக் கணக்கிலா? ஆண்டு கணக்கிலா?
            உதவிகள் நினைவில் நிற்பது உதவியின் தன்மையைப் பொருத்தா? உதவியைப் பெறுகின்றவரின் தன்மையைப் பொருத்ததா?
            உதவிகள் நினைவில் நிற்பது நன்றியறிதலின் குணம். அது உதவியின் தன்மையைப் பொருத்ததோ, உதவி பெறுகின்றவரின் தன்மையைப் பொருத்ததோ அல்ல. அது ஓர் இயல்பு. மனித குலத்தின் இயற்கையான இயல்பு, இயல்பான தன்மை.
            அந்நன்றியறிதலை நினைவில் வைத்துக் கொள்வதற்கு கால அளவுதான் உண்டோ?
            உதவியைப் பெறுபவர்கள் நன்றி அறிதலோடு இருப்பதற்கு கால அளவு எப்படி இருக்க முடியும்? தலைமுறைகளைத் தாண்டியும் நன்றி அறிதலோடு இருக்கலாம். அப்படித் தலைமுறைத் தாண்டியும் நன்றி அறிதலோடு மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்.
            தற்காப்புக் கலைகளைப் பயில்வோர் முதல் வணக்கத்தை அக்கலையை உருவாக்கியவர்க்குதான் வைக்கிறார்கள். அக்கலையை உருவாக்கியவர் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் மறைந்திருந்தாலும் அவருக்குதான் முதல் வணக்கம்.
            காட்டில் வேட்டையாடும், உணவு சேகரிக்கும் பழங்குடிகள் தங்கள் முதல் வேட்டையை, முதல் உணவை முன்னோர்க்குப் படைக்கிறார்கள். தங்களுக்கு வேட்டையாடக் கற்றுக் கொடுத்த, உணவு தேட கற்றுக் கொடுத்த முன்னோர்க்குச் செய்யும் நன்றியறிதல் அது.
            குறிப்பாக ஒருவர் வாழ்வின் துன்பத்தைத் துடைத்தவர்களின் நட்பைத் தலைமுறை தலைமுறையாக நினைவில் வைத்துப் போற்றலாம். நன்றியறிதலின் நல்ல குணம் அது. செய்நன்றியறிபவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். குலசாமி வழிபாடு என்பது அப்படித் தோன்றியதுதான். தங்கள் குடும்பத்தின் துன்பத்தைத் துடைத்தவர்களையே குலசாமிகளாக வழிபடும் மரபு தோன்றியது.
            வள்ளுவர் செய்நன்றி அறிந்து போற்றுவதற்கு ஒரு கால அளவை நிர்ணயிக்கிறார். குறைந்தபட்ச கால அளவு அது. குறைந்தபட்சம் வாழ்வின் துன்பத்தைத் துடைத்தவர்களை ஏழு தலைமுறைகளாவது நினைவில் வைத்துப் போற்ற வேண்டும் என்கிறார்.
            ஏழு தலைமுறைகள் நன்றியறிதலோடு இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது, தலைமுறைகளுக்கு நன்றியறிதல் எனும் குணத்தை வழி வழியாக, வாழையடி வாழையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வள்ளுவரின் அவாவே இதன் மூலம் புலப்படுகிறது.
            ஏழு தலைமுறைக்குத் தொடரும் இக்குணம் அதன் பின்னும் பல தலைமுறைக்கும் தொடரும். ஆக நன்றியறிதல் என்பது தலைமுறை தலைமுறையாகக் கடத்த வேண்டிய ஒரு பழக்கம். அது தலைமுறையின் இயல்பாக மலர வேண்டிய ஒன்று.
            நன்றியறிதலைத் தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்பதே வள்ளுவரின் விருப்பம்.
            வாழ்வின் துன்பத்தைத் துடைத்தவர்களை ஏழு தலைமுறைக்கும் மறக்காதீர் என்பதில் வள்ளுவர் சொல்ல வருகின்ற செய்தி அதுதான்.
            எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம் கண் விழுமம் துடைத்தவர் நட்பு.
            ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் வாழ்வின் துன்பம் துடைத்தவர்களின் உதவியை நன்றியறிதலோடு அடுத்தத் தலைமுறைக்குச் சொல்ல வேண்டும். இப்படி ஒவ்வொரு தலைமுறையும் அடுத்தடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும். இப்படியாக தலைமுறை தலைமுறையாக நன்றியறிதல் எனும் குணம் வளர்க்கப்பட வேண்டும்.
            தலைமுறை தலைமுறையாக நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏழு தலைமுறைகளாவது அப்படி இருக்க வேண்டும்.
            அப்படி குறைந்தபட்சம் வாழ்வின் துன்பம் துடைத்தவர்களின் உதவியை ஏழு தலைமுறைகளாவது நன்றியோடு நினைந்துப் பார்க்கும் பழக்கத்தை வளர்த்தால், தலைமுறைகள் தாண்டியும் நன்றியறிதல் எனும் உணர்வு தழைக்கும்.
            நன்றியறிதல் என்பது தலைமுறை தலைமுறையாகத் வீச வேண்டிய மானுட வசந்தம். அது தலைமுறைகள் தோறும் மணக்க வேண்டிய சுகந்தம்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...