13 Apr 2018

எஸ்.கே.வின் புதிய பாதை


எஸ்.கே.வின் புதிய பாதை
            ஒருவரிடம் போய் நல்லது செய்வோம் என்று சொல்வார் எஸ்.கே. ஒதுங்கிப் போய் விடுவார்கள். அதுவே அவர்களுக்கு காரியமாகும், ஆதாயமாகும் என்று ஒரு வேலையைச் சொல்வார் எஸ்.கே. வரிந்து கட்டிக் கொண்டு ஓடி வருவார்கள்.
            மனிதர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் மேல் கோபப்பட்டு அர்த்தம் இல்லை.
            விரும்பியபடியெல்லாம் யாரையும் வளைக்க முடியாது. அவர்கள் வளையும் திசையில் வேண்டுமானால் அவர்களை ஒடிக்கலாம்.
            அநாவசியமாக எதையாவது செய்து சக்தியை வீணாக்கிக் கொள்ள எஸ்.கே.வுக்கு நேரமில்லை. அதற்கு வழியுமில்லை.
            எஸ்.கே.வைக் கொஞ்சமாவது அங்கீகரித்தால் தேவலாம். கொஞ்சமாவது பாராட்டினால் தேவலாம். அது கிடைக்காதது. கிடைக்காத ஒன்றுக்காக எதற்கு ஏங்க வேண்டும்? கிடைத்திருப்பது எதுவோ அதைச் சுகமாக அனுபவிக்க வேண்டும்.
            இதிலிருந்து ஒன்று புரிகிறதா? இந்த உலகில் எதுவும் புதிய பாதையில் போகவில்லை. சுற்றி உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்களோ, என்ன சொல்வார்களோ என்ற பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது.
            அவர்கள் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு மாதிரியாக நினைக்கலாம், சொல்லலாம். அது எப்படியோ அவர்களின் அந்தப் போக்கில்தான் உலகம் போய்க் கொண்டு இருக்கிறது. அது காலத்துக்குக் காலம் மாறுபடுவதால் புதிது போல தோன்றலாம். மற்றபடி அப்படி நாலு பேர் என்ன நினைக்கிறார்களோ, சொல்கிறார்களோ அதன்படிதான் நம்முடையப் போக்கும் போய்க் கொண்டு இருக்கிறது.
            எதையாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால்தான் பதற்றம் வரும். எஸ்.கே. அப்படி நினைக்க இனி வாழ்வில் எதுவும் இல்லை. எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தால்தான் அதைச் சாதிக்க முடியாதோ என்ற நடுக்கம் வரும். எஸ்.கே. வாழ்வில் அப்படி எதையும் சாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்.கே. எதற்காகப் பதற்றப்பட வேண்டும்? எஸ்.கே. எதற்காகக் கலங்க வேண்டும்?
            இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கணக்கு இல்லை எஸ்.கே.வுக்கு. எதையும் செய்யலாம் எஸ்.கே. எஸ்.கே. எதற்கு யோசித்துக் கொண்டு இருக்க வேண்டும்? எஸ்.கே. எதற்கு பயப்பட வேண்டும்? எஸ்.கே.வுக்குப் பயத்தை உருவாக்குகிறார்கள். எஸ்.கே.வைப் பயப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள். அதற்காக எஸ்.கே. பயப்படுவது போல நடிக்கலாம். ஆனால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எஸ்.கே. இருக்க வேண்டும்.
            பயத்தின் மைய அச்சைக் கொண்டுதான் சாதிக்க நினைக்கிறார்கள் என்பதால் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அந்தப் புதிய பாதையில்தான் இனி நடைபோட இருக்கிறார் எஸ்.கே.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...