17 Apr 2018

தகுதியை வளர்த்துக் கொள்வது எப்படி?


குறளதிகாரம் - 12.1 - விகடபாரதி
தகுதியை வளர்த்துக் கொள்வது எப்படி?
            ஒற்றுமையாக இருக்க எந்தத் தகுதியும் தேவையில்லை. ஒற்றுமையாக இருப்பதே மிகப் பெரிய தகுதி.
            ஒற்றுமையாக இருக்க முடியாத சூழ்நிலைகளில் ஒரு மனிதர் எப்படிச் செயல்படுகிறார் என்பதே அம்மனிதரின் தகுதியைத் தீர்மானிக்கிறது.
            இந்தியாவின் சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை என்பர். அதுவே இந்தியாவின் தகுதியை உலக அளவில் தீர்மானிக்கிறது.
            இந்தியாவை பல இனங்களின் அருங்காட்சியகம் என்றும் சொல்வர். பல இனங்களுக்கான சமத்துவ நீதி நிலவுவதே பல இனங்களோடு ஒன்றுபட்டு வாழும் இந்தியாவை உருவாக்குகிறது.
            வேற்றுமைகள் இல்லாத இடம் இல்லை.
            அளவில், உருவில், நிறத்தில், குணத்தில், இனத்தில், மனத்தில் என்று எல்லா நிலைகளிலும் வேற்றுமைகள் நிலவுகின்றன.
            அவ்வேற்றுமைகள் நிலவினாலும் வேற்றுமைகளுக்கு இடையே சமநீதி எனும் நடுவுநிலைமை பேணப்பட வேண்டும். அதுவே அவ்வேற்றுமைகளைப் பேணுவதற்கான சிறந்த தகுதியாகும்.
            மக்கள் நிறத்தால் வேறுபடலாம், கருப்பர், வெள்ளையர் என்று. அவர்களுக்கிடையே ஒரு பிரச்சனை என்று வரும் போது கருப்பு, வெள்ளை என்ற நிற பாகுபாட்டின் அடிப்படையில் நீதி செய்யப்படக் கூடாது. அப்படி பாகுபாட்டின் அடிப்படையில் செய்யப்படும் நீதியை வள்ளுவர் பகுதியாற் பாற்பட்டு ஒழுகல் என்கிறார். நீதி செய்தல் என்பது அவ்வாறு இல்லாமல் நடுவுநிலைமையோடு செய்யப்பட வேண்டும். அப்படி நீதி செய்தலையே தகுதி என்கிறார்.
            ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்க்கும், இந்தியர்க்கும் தனித்தனி நீதிகள், ஊதியங்கள் இருந்தாக அறிகிறோம். அவைகள் எல்லாம் பகுதியால் பாற்பட்டு ஒழுகலே. அதாவது நடுவுநிலைமை தவறிய தகுதியற்ற நிலையே.
            இந்திய இன வரலாற்றில் நால் வர்ணத்துக்கும் தனித்தனி நீதிகள், சட்டங்கள் இருப்பதைக் காண்கிறோம். இதுவும் பகுதியால் பாற்பட்டு ஒழுகலே. அதாவது நடுவுநிலைமை தவறிய தகுதியற்ற நிலையே.
            இப்போதும் விவசாயக் கூலிகளில் ஆண்களுக்கு ஓர் ஊதியமும், பெண்களுக்கு ஓர் ஊதியமும் ஒரு சில இடங்களில் வழங்குப்படுவதுண்டு. இதுவும் பகுதியால் பாற்பட்டு ஒழுகலே. அதாவது நடுவுநிலைமை தவறிய தகுதியற்ற நிலையே.
            வங்கிகளில் கோடிகளில் கடன் வாங்கியவர் வெளிநாட்டுக்குத் தப்பி விடலாம், ஆயிரங்களில் கடன் வாங்கியவர் ஜப்தியில் மாட்டி விடலாம் என்ற சூழ்நிலை தற்போது நிலவுகிறதே. இதுவும் கூட பகுதியால் பாற்பட்டு ஒழுகலே. அதாவது நடுவுநிலைமை தவறிய தகுதியற்ற நிலையே.
            சில நேரங்களில் தேர்தலைக் கருத்தில் கொண்டு சாதிகளின் அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும், மாநிலங்களின் அடிப்படையிலும் மாறுபட்ட நிலைபாடுகள் ஆளும் பொறுப்பில் இருப்பவர்களால் எடுக்கப்படலாம், அப்படி எடுக்கப்பட்ட நிலைபாடுகள் நியாயப்படுத்தப்படவும் செய்யப்படலாம் எனும் நிலைமைகள் நிலவுகின்றனவே. அதுவும் பகுதியாற் பாற்பட்டு ஒழுகலே. அதாவது நடுவுநிலைமை தவறிய நிலையே.
            ஆட்சி அதிகாரம் இருப்பவர்களிடம் கோடிகளில் பணம் கட்டுக் கட்டாகப் புரளலாம், எதுவுமில்லாதவர்க்கு தெருக் கோடியில் இருப்பவர்கள் ஏ.டி.எம்.மிலும் பணம் எடுக்க முடியாது அல்லாடலாம் எனும் நிலை அவ்வபோது நிலவுகிறதே. இதுவும் பகுதியால் பாற்பட்டு ஒழுகலே. அதாவது நடுவுநிலைமை தவறிய தகுதியற்ற நிலையே.
            வல்லரசாக இருக்கும் நாடு பெட்ரோலுக்காக எந்த நாட்டின் மீதும் ஆயுதம் வீசலாம், அதே நேரத்தில் வல்லரசாக இல்லாத ஒரு நாடு தன் பாதுகாப்புக்காகக் கூட ஆயுதம் தயாரிக்கக் கூடாது எனும் நிலை நிலவுகிறதே. இதுவும் கூட பகுதியாற் பாற்பட்டு ஒழுகலே. அதாவது நடுவுநிலைமை தவறிய தகுதியற்ற நிலையே.
            சிறுபான்மை மக்களுக்கு ஒரு குரலும், பெரும்பான்மை மக்களுக்கு ஒரு குரலும் சமயங்களில் எழுகிறதே. இதுவும் பகுதியாற் பாற்பட்டு ஒழுகலே. அதாவது நடுவுநிலைமை தவறிய நிலையே.
            கற்பு என்று சொன்னால் அதை ஆண் - பெண் இருவர்க்கும் பொதுவில் வைப்போம் என்று பாரதி சொன்னாரே அதுதான் தகுதி. அதுதான் நடுவுநிலைமை.
            அனைவரும் மனிதர்கள் என்றால் அனைவரும் ஆலயத்துக்குள் நுழையலாம் என்று ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றாரே பெரியார். அனைவரும் மனிதர்கள் என்றால் அனைவருக்கும் சுயமரியாதை உண்டு என்று நிறுவினாரே பெரியார். அதுதான் தகுதி. அதுதான் நடுவுநிலைமை.
            ஏழைக்கு என்ன நீதியோ அதுவே கோடீஸ்வரர்க்கும்.
            ஆண்டிக்கு என்ன நீதியோ அதுவே அரசர்க்கும்.
            எளியோர்க்கு என்ன நீதியோ அதுவே வலியோர்க்கும்.
            நண்பர்க்கு என்ன நீதியோ அதுவே விரோதிக்கும்.
            தனக்கு என்ன நீதியோ அதுவே பிறர்க்கும்.
            உறவுக்கு என்ன நீதியோ அதுவே பகைக்கும்.
            எங்கெல்லாம் பாகுபாடுகள் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் நடுவுநிலைமையோடு நீதி சொல்லப்பட வேண்டும், நீதி செய்யப்பட வேண்டும். அதுவே தகுதி எனும் நடுவுநிலைமை. மாறாக பாகுபாடுகளில் எது ஆதிக்கத் தன்மை பெற்றுள்ளதோ அதற்கு தகுந்தாற் போல் நீதி செய்யப்பட்டால் அதுவே தகுதியற்ற நிலை. நடுவுநிலைமை தவறிய நிலை.
            ஆண் - பெண் என்று பால் பேதங்கள் உண்டாகலாம்,
            நிறத்தால், சாதியால், இனத்தால், மதத்தால் பாகுபாடுகள் தோன்றலாம்,
            பதவி, அதிகாரம், பொருளாதாரம் போன்றவற்றால் முரண்பாடுகள் தோன்றலாம்,
            குணத்தால், மனத்தால் வேறுபாடுகள் தோன்றலாம்
                        அப்போதெல்லாம் நடுவுநிலைமையே தகுதி. வேறுபாடுகளில் பிடித்தவைகளுக்கு ஆதரவாகவோ, எது ஆதாயம் தருமோ அதற்கு ஆதரவாகவோ, எது ஆதிக்கம் பெறுமோ அதற்கு ஆதரவாகவோ நீதி செய்து விடாமல், நடுவுநிலைமையோடு எது சரியோ அதற்கு தகுந்தாற் போல் தகுதியோடு நின்று நீதி செய்ய வேண்டும்.
            அப்படி நீதி செய்வதே தகுதி.
            அது ஆள்வோராக இருந்தாலும், நீதிமானாக இருந்தாலும் அதுவே தகுதி. சாமன்ய மனிதராக இருந்தாலும் அவருக்கும் அதுவே தகுதி. தம் முன்னே நிற்பவரை மனிதராகத்தான் பார்க்க வேண்டுமே தவிர இன்ன சாதியா? இன்ன மதமா? இன்ன இனமா? ஆணா? பெண்ணா? மூன்றாம் பாலினமா? உறவா? பகையா? இன்ன ஊரா? இன்ன நாடா? சிறுபான்மையா? பெரும்பான்மையா? என்று நடுவுநிலைமை தவறிக் காணக் கூடாது.
            ஆள்வோர்க்கும், நீதிமான்களுக்கும் நீதி செய்வதில் பங்கு இருக்கிறது என்றால் சாமன்யர்களுக்கு ஒட்டுமொத்த ஜனநாயகப் பார்வையை உருவாக்குவதில் பங்கு இருப்பதால் பாகுபாடில்லாமல் யாவர்க்கும் தகுதி என்பது நடுவுநிலைமையே. அப்படி பாகுபாடில்லாமல் இருப்பதுதானே நடுவுநிலைமை.
            ஆக, நடுவுநிலைமையே தகுதி. ஆகச் சிறந்த தகுதி.
            உலகில் தகுதியை வளர்த்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நடுவுநிலைமையை மனதில் வளர்த்துக்கு கொள்வதே தகுதியை வளர்த்துக் கொள்வதற்கான முதன்மையான வழி.
            தகுதி என ஒன்று நன்றே பகுதியான் பாற் பட்டு ஒழுகப் பெறின்.
            மனிதர்கள் நிறத்தால், இனத்தால், குணத்தால், ஆண் - பெண் எனும் பால் வகைமையால், செய்யும் தொழிலால், வயதால், நாடுகளால் வேறுபடலாம். அவர்களுக்கு வேறுபட்ட நீதி வழங்கப்படக் கூடாது என்பதுதான் நடுவுநிலைமை.
            ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். நீதி என்பது ஒன்றுதானே!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...