16 Apr 2018

எதிர்ப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள்


எதிர்ப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள்
            அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். நாம் அவர்களைப் புரிந்து கொள்வோம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்களும் நம்மைப் புரிந்து கொள்வதில்லை. நாமும் அவர்களைப் புரிந்து கொள்வதில்லை. அதனால் யாரும் யாரையும் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.
            அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாம் நாமாகவே இருப்போம்.
            அவர்கள் ஒரு குறிப்பிட்ட பதிலைச் சொல்லி விட்டால் அதற்கு மேல் நாம் வாயைத் திறக்க வேண்டியதில்லை. அதற்கு மேல் அவர்கள் பேசி நாம் வாயைத் திறப்பது நம் வாயைப் பிடுங்குவதற்கான அவர்களின் முயற்சியாகவே அது இருக்கும்.
            அது என்ன அப்படி ஒரு மனநிலை என்று நாம் நினைக்க முடியாது. அது அப்படித்தான். அவர்கள் மாற்றிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அழுகை, பரிதாபம் போன்றவைகளுக்கு மண்டியிடும் நீங்கள் அப்படிச் செய்து காரியம் சாதிக்க நினைப்பவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.
            அவர்கள் தங்கள் முகத்தைச் சோகமாக வைத்தே காரியம் சாதிப்பார்கள். புலம்பித் தள்ளியே நம்மை எதையும் செய்ய வைப்பார்கள். அவர்கள் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டு இருப்பார்கள். நாம் உச் கொட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பாட்டுக்கு அழுது கொண்டு இருப்பார்கள். நாம் ஆறுதல் சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பாட்டுக்கு சோகமாக இருப்பார்கள். நாம் இரக்கப்படுவது போல் இருந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
            இதில் எல்லை மீறி புரிதலை மாற்றி மாற்றம் உருவாக்க நினைத்தால் தொலைந்தோம். அதற்கு அவர்களின் மனநிலை இடம் கொடுக்க அனுமதிப்பதில்லை. நம்மை மிகப் பெரிய எதிரியாக நினைத்து தாக்கச் சொல்வதற்கே அவர்களின் மனநிலை தயாராக இருக்கும்.
            அவர்கள் சாப்பிடாமல் அழிச்சாட்டியம் செய்யலாம். அதற்கு நாம் எதுவும் செய்து விட முடியாது. அவர்கள் இப்படித்தான் உணர்ச்சிகரமாக மிரட்டுவதைக் காலம் காலமாக ஒரு நுட்பம் போல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
            இதையெல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டு வர நினைக்கும் ஒரு மனதால்தான் பிரச்சனைகள் ஏற்படும். அதுவாகவே ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற மனநிலையால் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படப் போவதில்லை. நாம் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கப் போகிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
            உங்களுடைய இரு வகை மனநிலைகளை எடுத்துக் கொள்ளலாம்.
            ஒன்று, இப்படிப் பேசுகிறார்களே! செய்கிறார்களே! இதற்கு ஒரு நியாயம் இல்லையா என்று முறையிடலாம்.
            மற்றொன்று, இதை முறையிடுவதை விட அவைகளைப் பொருட்படுத்தாமல் இருந்து விடலாம்.
            எந்த வகையில் நோக்கினாலும் இரண்டாவது வழிமுறைதான் சிறந்தது.
            ஆம்! எதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. எதற்காகவும் எங்கும் முறையிட வேண்டியதில்லை.
            முறையிட்டதற்கு மாறாக முறையிட்டவர்களிடமே நட்பு பாராட்டச் செய்வதுதான் காலம்.
            நட்பாக இருந்தவர்களை முறையிடச் செய்யும் நிலையை உருவாக்குவதுதான் காலம்.
            அதனால் அமைதியாக இருப்பதுதான் எல்லாவற்றிலும் நல்லது.
            ஆத்திரம்தான் அதிகப்பிரசங்கித்தனமாக சொற்களைப் பிரயோகிக்கச் செய்கிறது.
            அமைதியாக இருப்பதன் மூலம் எந்தச் சொற்பிரயோகமும் நடக்கப் போவதில்லை. பிரச்சனை மேலும் மேலும் சிக்கலாகப் போவதில்லை.
            அமைதியாக இருப்பதன் மூலம் விளைவு இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழப் போவதில்லை. அது எதுவாக இருந்தாலும் சரிதான் என்ற ஏற்பு மனநிலை ஏற்பட்டு விடும்.
            இந்த ஏற்பு மனநிலை வந்து விட்டால், எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை.
            ஏற்க முடியாமைத்தான் கோபம் கொள்ளச் செய்கிறது. கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கச் செய்கிறது. கண்மூடித்தனமானச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...