16 Apr 2018

உய்யவோ உய்யவோ உய்!


குறளதிகாரம் - 11.10 - விகடபாரதி
உய்யவோ உய்யவோ உய்!
            வாழ்க்கை உய்ய வழி தேடும் பயணம்.
            அன்பும் அறமும் உய்வதற்கான வழி வகை தரும் பாதை.
            அன்போடும் அறத்தோடும் இருப்பதன் மூலம் உய்ய வழி காண்பது நேர்மறையான ஒரு வகை அணுகுமுறை.
            எதிர்மறையான தன்மைகளைத் தவிர்ப்பதன் மூலம் உய்ய வழி காண்பது மற்றொரு வகை அணுகுமுறை.
            அன்போடும் அறத்தோடும் இருந்து விட்டால் வாழ்வில் உய்வுண்டு.
            அன்போடும் அறத்தோடும் நிற்பவர் எந்நன்றியையும் மறப்பதில்லை. அன்பு நன்றியை நினைக்க வைக்கும். அறம் நன்றிக்கு செய்நன்றியை ஆற்ற வைக்கும்.
            அவ்வண்ணமே இருந்து விட்டால் மனித குலம் உய்யும் வழி அடைந்து விடும்.
            வரலாற்றைப் பார்க்கையில் நிலைமை அப்படியில்லை என்பது பிடிபடுகிறது.
            வரலாறு போர்களால் நிறைந்திருக்கிறது.
            பழிவாங்கல்களால் சூழ்ந்திருக்கிறது.
            நம்பிக்கை துரோகங்கள் கலந்ததாக இருக்கிறது.
            பொன்னுக்கும், பெண்ணுக்கும், பொருளுக்கும், மண்ணுக்கும் ஆசைப்பட்டு நன்றி மறந்து வஞ்சகங்கள் உறைந்ததாக இருக்கிறது.
            அன்போடும், பண்போடும், மென்மையோடும், உண்மையோடும் வாழும் சமூகத்துக்குச் சொல்லப்படும் அறம் அது சார்ந்த தன்மையோடு இலங்கும்.
            போர்களாலும், பழிவாங்கல்களாலும், துரோகங்களாலும், வஞ்சகங்களாலும் உக்கிரமாய் இருக்கும் சமூகத்துக்குச் சொல்லப்படும் அறம் அது சார்ந்த தன்மையோடு இருக்கும்.
            அறம் சற்று உக்கிரமாகும் இடம் அது.
            அறம் பெரும் சீற்றமாக வெளிப்படும் இடம் அது.
            வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அறம் ஏற்காது.
            நினைத்ததைச் சாதிப்பதற்காக யாது வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் என்பதை அறம் ஆதரிக்காது.
            ஆசைப்பட்டதை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் புரியலாம் என்பதை அறம் பொறுக்காது.
            அறம் எதையும் அறுதியிட்டுச் சொல்வதில் பின்வாங்காது.
            மனித குலம் உய்ய எது சரியானதோ அதைச் சரியாகச் சொல்வதே அறத்தின் கடமை.
            நன்றியெனும் நன்மையைக் கொல்வதைப் போன்ற பாவம் இந்த உலகில் எதுவுமில்லை.
            பாவம் எனத் தெரிந்தும் அதற்கு ஒரு பரிகாரம் இருக்கும் என்ற நம்பிக்கையில் பாவம் செய்பவர்கள் மிகுந்த பூமி இது.
            அறியாமல் செய்த பாவத்துக்கு, தெரியாமல் செய்த பாவத்துக்கு, புரியாமல் செய்த பாவத்துக்கு பரிகாரங்கள் இருக்கலாம். உய்ய ஏதேனும் வழி இருக்கலாம்.
            அறிந்தே, தெரிந்தே, புரிந்தே செய்கின்ற பாவங்களுக்கும் கூட ஏதேனும் பரிகாரங்கள் இருக்கலாம். உய்ய ஏதேனும் வழி இருக்கலாம்.
            ஆனால்,
            அறிந்து செய்தாலும் சரி, அறியாமல் செய்தாலும் சரி,
            புரிந்து செய்தாலும் சரி, புரியாமல் செய்தாலும் சரி,
            தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி,
            உணர்ந்து செய்தாலும் சரி, உணராமல் செய்தாலும் சரி,
            செய்நன்றி கொன்ற பாவத்துக்கு மட்டும் பரிகாரம் இல்லை, உய்ய வழி ஏதும் இல்லை.
            நன்மையை அழிப்பதை நன்மையைக் கொல்வது என்றே சொல்கிறார் வள்ளுவர்.
            செய்நன்றியை மறப்பதையும் செய்நன்றியைக் கொல்வது என்றே கூறி அதை கொலை என்ற பட்டியலிலே வைக்கிறார் வள்ளுவர்.
            பின்னால் வரப் போகும் அதிகாரத்தில் கொல்லாமையை வலியுறுத்தும் வள்ளுவர் கொல்லாமைக்கு செய்நன்றி அறிதல் எனும் இவ்வதிகாரத்திலேயே கால்கோள் ஊன்றுகிறார்.
            உயிர்க்கொலையைப் போன்ற ஒரு கொலையாகவே செய்நன்றி மறத்தலையும் நோக்குகிறார் வள்ளுவர்.
            கிளையை வெட்டி விடலாம், ஒட்ட வைப்பது எப்படி?
            உயிரைப் போக்கி விடலாம், மீட்டு வருவது எப்படி?
            ஆகையால் உயிர்க்கொலை என்பது பரிகாரம் இல்லாத பாவத்தின் பட்டியலில் சேர்கின்றது.
            அப்பட்டியலிலேயே செய்நன்றி மறத்தலையும் வைக்கிறார் வள்ளுவர்.
            சற்றேறக்குறைய செய்நன்றி மறத்தலும் உயிர்க்கொலைக்கு ஒப்பானதே. உய்ய வழியில்லாத பாவச் செயல் அது.
            அதனால்தான்,
            எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்கிறார் வள்ளுவர் உக்கிரமாக அறச்சீற்றம் சற்றும் குறையாமல்!
            எதையும் அன்போடும், மென்மையோடும் சொல்பவர்தான் வள்ளுவர்.
            அறம் சிதையுமிடத்து வலிமையோடும், உக்கிரத்தோடும், சீற்றத்தோடும் செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை என்று சொல்பவரும் அவர்தான்.
            காலத்தைக் கடந்து நிற்கும் வரலாற்று நோக்கில் வள்ளுவர் பேசும் அறம் அது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...