பொறுமை எனும் ஆயுதம்
பொறுமையோடு இருப்பது நல்லது. எதற்கும்
அவசரப்பட்டு உடனயடியாகப் பதில் சொல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. அப்போதுதான் வேறு
பல நல்ல தீர்வுகள் கிடைக்கும் போது அவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
அவரசப்பட்டு ஒரு முடிவைச் சொல்லி விடும்
போதோ அல்லது கோபப்பட்டு ஒன்றைச் செய்து விடும் போதோ பின்னர் தோன்றும் ஒரு நல்ல
முடிவைச் செயல்படுத்த முடியாமல் போய் விடுகிறது.
ஆகவேதான் அதிகபட்ச பொறுமை அதிகபட்ச நன்மையைத்
தருகிறது. அதிகபட்ச பொறுமையால் காரியம் நிகழாது போனாலும் அதனால் கிடைக்கும் நல்ல
பாடங்கள் பொக்கிஷங்கள் போன்றவைகள். பணத்தைத் திரட்டி விடலாம். பொக்கிஷங்களைத் திரட்டுவது
கடினம்.
எதையும் அவசரப்பட்டு நிகழ்த்த முற்படக்
கூடாது. அதனால் தேவையற்ற பின்விளைவுகள் ஏற்படலாம். பின்விளைவுகளே அற்ற ஒரு நிகழ்த்தலுக்கு
பொறுமைதான் உதவும்.
ஏன் இந்த மனம் அவசரப்படுகிறது? எதையோ
சாதித்து விட்டேன் என்று மற்றவர்களிடம் காட்டவா? தான் எவ்வளவு பெரிய ஆள் என்று நிறுவவா?
பார்த்தீர்களா நான் உங்களிடமிருந்து மாறுபட்டவன் என்று சொல்லவா?
காரியம்தான் முக்கியம் என்றால் பொறுமை
அவசியம். சாதிப்பதுதான் முக்கியம் என்றால் அடக்கம் அதை விட அவசியம்.
எதையும் அவசரப்பட்டு நிகழ்த்தி எதுவும்
ஆகப் போவதில்லை. நாட்கள் நிறைய இருக்கின்றன. அவசரப்பட்டு நிகழ்த்தி விட்டு மீதி இருக்கும்
நாட்களில் சாவகாசமாக சங்கடப்பட்டுக் கொண்டு இருப்பதா என்ன?
நிகழ்த்துவதில் மட்டுமல்ல, வெளிப்படுத்துவதிலும்
அவசரம் கூடாது. அது ஆபத்து. பொறுமையாகப் படிப்படியாக வெளிப்படுமாறுச் செய்வதே புத்திசாலித்தனம்.
நிகழ்த்தியாயிற்று. அதை மெதுவாக வெளிப்படுத்துவதால் பிழையொன்றுமில்லை.
புத்தியுள்ளவர்கள் பொறுமையாகத்தான் காரியம்
ஆற்றுகிறார்கள். ஒரு காரியத்தை ஆற்றுவதால் ஏற்படும் விரோதங்களை அவர்கள் கணக்கில் கொள்கிறார்கள்.
காரிய விரோதங்கள் சாகும் வரை அவர்கள் பொறுமை காட்டுவதில் கவனம் செலுத்துகிறார்கள்.
காரிய விரோதம் ஏற்படாத வகையில் மறைத்து செயல்படுகிறார்கள்.
பொறுமை ஓர் ஆயுதம் என்பதை உணராதவர்கள்தான்
பொறுமையற்றுச் செயல்படுகிறார்கள். உணர்ந்தவர்கள் பொறுமையை ஆயுதமாக்குகிறார்கள். பொறுமையோடு
இருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment