21 Apr 2018

அழகோ அழகு!


குறளதிகாரம் - 12.5 - விகடபாரதி
அழகோ அழகு!
            மலரின் அழகு அது உரமாக உண்ட கழிவில் இருக்கிறது.
            வாழ்க்கையின் அழகு அது துயரங்களையும், துன்பங்களையும் எதிர்கொண்ட தன்மையில் இருக்கிறது.
            மலரின் அருகில்தான் முள் இருக்கிறது. முள்ளில் குத்திக் கொள்ளாமல் மலரைச் சூடிக் கொள்வதுதான் மலரை அணுகும் மனநிலை.
            இன்பத்தின் அருகில்தான் துன்பமும் இருக்கிறது. துன்பத்தைப் பட்டும் படாமல் கடந்து இன்பத்தை அனுபவிப்பதுதான் வாழ்க்கையை அணுகும் மனநிலை.
            ஒரு நாள் என்பதில் இரவு, பகல் இரண்டும் இருக்கிறது. இரவில் தூங்கி பகலில் விழிப்பதுதான் ஒரு நாளை எதிர்கொள்ளும் முறை.
            நல்லது, கெட்டது இரண்டும் இணைந்ததுதான் வாழ்க்கை.
            மகிழ்ச்சியும், கவலையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.
            வளமையும், வறுமையும் கலந்ததுதான் வாழ்க்கை.
            வளமை வந்ததற்காக குதித்து ஆட்டம் போடுவதோ, வறுமை வந்ததற்காக சுணங்கி சுருங்கிப் போவதோ தேவையில்லை.
            வளமையோ, வறுமையோ இரண்டையும் ஒன்றாக எதிர்கொள்ளும் மனநிலை வாய்த்தால் நன்றாகத்தான் இருக்கும் இல்லையா!
            அப்படி ஒரு மனநிலை வாய்ப்பது முடியுமோ!
            முடியும்!
            நடுவுநிலைமையான மனநிலையால் முடியும்.
            நடுவுநிலைமையான மனநிலை வளமை வரும் போது ஆட்டம் போட்டு அடங்காதக் காரியங்கள் செய்வதில்லை.
            நடுவுநிலைமையான மனநிலை வறுமை நேரும் அதற்காகத் தளர்ந்து போய் தரம் தாழ்ந்த காரியங்களில் இறங்கி விடுவதுமில்லை.
            வளமை எனும் செல்வப் பெருக்கம் இயல்பான மனநிலையில் ஒருவரை இருக்க விடுவதில்லை. ஆடாத ஆட்டங்களையெல்லாம் போட வைக்கிறது. தமது விருப்பத்துக்கு ஏற்ப எல்லாவற்றையும் வளைக்க நினைக்கிறது. அது நீதியின் செங்கோலாக இருந்தாலும் வளைந்து தனக்கு வணக்கம் வைத்தால் என்ன எதிர்பார்க்க வைக்கிறது.
            வளமை எனும் செல்வப் பெருக்கம் ஆணவத்தை உரம் போட்டு வளர்க்கிறது. செருக்கோடு செயல்படுவதை மிடுக்கோடு ஆதரிக்கிறது. ஆணவத்தோடும், செருக்கோடும் நடுவுநிலைமைத் தவறுவதைப் பொருட்படுத்தத் தவறுகிறது.
            வளமை இப்படியென்றால், வறுமை வேறு விதமான துயரங்களுக்குக் காரணமாகிறது.
            வறுமையில் செம்மை என்பது எல்லாருக்கும் வாய்த்து விடும் மனநிலை அன்று. தாளாக வறுமை தவறானச் செயல்களுக்குக் காரணமாகிறது. பசிக்காகத் திருடத் தூண்டுகிறது. வறுமையைப் போக்கிக் கொள்ள களவாடுவதை ஆதரிக்கிறது. வறுமை போகும் என்றால் பொய் சொல்லவும் தயாராகிறது. கொலை புரியவும் காத்திருக்கிறது.
            வளமையிலும் நடுவுநிலைமையோடு இருக்க வேண்டும். வறுமையிலும் நடுவுநிலைமையோடு இருக்க வேண்டும்.
            சுடும் கோடை வெயிலையும்,  கடும் மார்கழிக் குளிரையும் ஒன்றெனப் பாவிப்பது போல்தான் வளமையிலும், வறுமையிலும் நடுவுநிலைமையைக் கொள்வது என்பது.
            அதனால்தான் அப்படிப்பட்ட நடுநிலையாளர்களை வெறுமனே மனிதர் என்ற வகைமையில் வைக்காமல் ஒரு படி மேலே உயர்த்துகிறார் வள்ளுவர். அவர்களைச் சான்றோர் என்கிறார் அவர்.
            நடுவுநிலைமை தவறாதவர்கள் மனிதர் என்ற நிலையிலிருந்து முன்னேறிச் சான்றோர் என்ற நிலையை அடைகிறார்கள்.
            அவர்களுக்குத் தெரியாதா என்ன சாலை என்பது மேடும், பள்ளமும் உள்ளது என்று.
            அவர்களுக்குத் தெரியாதா என்ன பருவகாலம் என்பது வறட்சியான கோடையையும், வளமான மழையையும் உள்ளடக்கிறது என்று.
            அவர்களுக்குத் தெரியாதா என்ன வறண்ட நதியில் ஒரு நாள் வெள்ளம் ஓடும் என்பதும், வெள்ளம் ஓடிய நதி ஒரு நாள் வறண்டு கிடக்கும் என்பது.
            அவர்களுக்குத் தெரியாதா என்ன ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பதும்.
            அவர்களுக்குத் தெரியாதா என்ன கடல் ஒரு காலத்தில் மலையாகும் என்பதும், மலை ஒரு காலத்தில் கடல் ஆகும் என்பதும்.
            அவர்கள் அறியாதா என்ன துறவி ஒரு நாள் பாவியாக இருந்தவர் என்பதும், பாவி ஒரு நாள் துறவி ஆவார் என்பதும்.
            ஆம்!
            வாழ்க்கையில் எல்லாம் மாறும்.
            வாழ்க்கையில் வறுமை எனும் செல்வக் கேடும்,
            வளமை எனும் செல்வப் பெருக்கமும் மாறி மாறி வருகின்றன.
            மாறும் மாற்றத்திற்கு தகுந்தபடியெல்லாம் சமநிலை தவறி விடாமல் இருப்பதே நடுவுநிலைமை.
            வறுமை நேர்ந்து விட்டது என்பதற்காக மனம் கலங்குவதோ, வளமை வந்து விட்டது என்பதற்காக மனம் மாறுவதோ நடுவுநிலைமை ஆகாது.
            வளமைக் காலத்தில் கர்வத்தில் முறைபிறழ்ந்து விடாமலும்,
            வறுமைக் காலத்தில் தாழ்வுணர்வில் மனம் சிறுத்து விடாமலும் நடுவுநிலைமையோடு இருப்பதே சான்றோர்க்கு அழகு.
            மரத்துக்கு மலர் அழகு,
            அம்மலருக்கு மணம் அழகு என்பது போல
            மனிதர்க்கு சான்றாண்மை அழகு,
            அச்சான்றாண்மைக்கு நடுவுநிலைமை அழகு.
            கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி.
            நடுவுநிலைமை தவறாமல் நடப்பதே சான்றோர்களின் பணி.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...