9 Apr 2018

கடலை விடப் பெரியது?


குறளதிகாரம் - 11.3 - விகடபாரதி
கடலை விடப் பெரியது?
            கடல் பெரியது. ஆழமானது. அகலமானது. நீளமானது. பரந்து பட்டது.
            பெரிய கடலில், ஆழமான கடலில் எவ்வளவோ உயிரினங்கள். உலகின் மிகப் பெரிய உயிரினமாகக் கருதப்படும் நீலத் திமிங்கலம் கடலில்தான் வாழ்கிறது. உலகின் முதல் உயிரினம் கடலில்தான் தோன்றியதாக அறிவியல் பேசுகிறது.
            உலகை மாற்றிய வரலாறுகள் கடல் பயணங்களின் வழியேதான் நடந்திருக்கின்றன. இந்திய வரலாற்றின் திருப்பங்களும் கடல் பயணத்தின் வழியேத்தான் நடந்திருக்கின்றன.
            கடலைக் கடந்து கப்பலில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்களால் அடிமைப்பட்ட இந்திய வரலாறுக்கு கடலே வழியாகிறது.
            தமிழர்கள் கடலைக் கடந்து ரோமிலும், கிரேக்கத்திலும் செய்த வணிகம் இன்றைய உலகமயமாக்கலுக்கு அன்றே கட்டியம் கூறியதைப் போல இருக்கிறது.
            கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றுகிறது.
            இந்தியாவுக்கு அறிவியலில் நோபல் பரிசை வாங்கித் தந்த சர்.சி.வி.இராமன் அவர்களின் ஆய்வில் முக்கியமானதாக கடல் ஏன் நீல நிறமாக காட்சியளிக்கிறது என்ற வினாவும் உண்டு. கடல் இப்படியாக இந்தியாவுக்கான நோபல் பரிசை வாங்கித் தரவும் காரணமாக இருந்திருக்கிறது.
            இந்தக் கடல்தான் சங்கத் தமிழ் நூல்கள் பலவற்றையும் கொண்டதாக நூல்கள் பேசுகின்றன. சங்கத் தமிழைப் படிக்க கடலுக்கும் ஆர்வம் போலும், கடல்கோளால் அள்ளிக் கொண்டு விட்டது.
            நீலக் கடலாக, நீளக் கடலாக, ஆழக் கடலாக, அகலக் கடலாக, பெருங்கடலாக, அருங்கடலாக கடல் பெரியது, அரியது, பெருமைக்கும் அருமைக்கும் உரியது.
            உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வைக்கும் உப்பு கடலில்தான் விளைகிறது. அணிந்தவரை மகிழ்விக்கும் முத்து கடலில்தான் விளைகிறது. உண்டால் புரதமாகும், பூரணமாகும் மீன் உணவையும் கடல்தான் அள்ளித் தருகிறது. பூமியின் முக்கால் பாகத்துக்கும் மேல் கடலே நிரம்பியிருக்கிறது.
            பூமியில் இருப்பவனவற்றுள் கடலை விடப் பெரியது எதுவும் இல்லை. கடலே பெரியதாக இருக்கிறது. அப்படியும் சொல்லி விடுவதற்கு இல்லை. வேறென்ன பூமியில் கடலை விடப் பெரியதாக இருக்கிறது?
            பெரிய கடலை விடவும் பெரியது பயன் கருதாமல் செய்யப்படும் உதவி.
            ஆழக் கடலையும் விடவும் ஆழமானது ஆதாயம் கருதாமல் செய்யப்படும் உதவி.
            நீளக் கடலையும் விட நீளமானது எதிர்பார்ப்பு எதுவும் கருதாமல் செய்யும் உதவி.
            விரிந்த கடலையும் விட விரிவானது பிரதிபலன் கருதாமல் செய்யப்படும் உதவி.
            அகன்றக் கடலையும் விட அகலமானது எதிர்காலக் கணக்கிடல்கள் எதுவும் கருதாமல் செய்யும் உதவி.
            பயனையோ,
            ஆதாயத்தையோ,
            எதிர்பார்ப்பையோ,
            பிரதிபலனையோ,
            வருங்காலக் கணக்கிடல்களையோ கருதாமலும், ஆராயாமலும் செய்யப்படும் உதவிகளின் நன்மைகளைக் வெகு துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் அது கடலை விட பெரியது. கடலை விட உயர்ந்த பெருமைக்கு உரியது. கடலின் சிறப்பினும் சொல்வதற்கு அரியது.
            கடலை விடப் பெரியது எது என்றால்...
            வள்ளுவர் சொல்கிறார்,
            பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலின் பெரிது.
            கடல் சிறியது. பயன் கருதாமல் செய்த உதவி பெரியது.
*****

No comments:

Post a Comment

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...