9 Apr 2018

புத்தகங்கள் எங்கே? புத்தகக் கடைகள் எங்கே?


புத்தகங்கள் எங்கே? புத்தகக் கடைகள் எங்கே?
            உங்களில் கை - பை இல்லாதவர்கள் யார்?
            உங்கள் கை - பையில் என்னனென்னவெல்லாம் இருக்கின்றன?
            கைகுட்டை, தண்ணீர் புட்டி, சிகை அலங்காரத்துக்கு சீப்பு, முகத் திருத்தத்துக்குக் கண்ணாடி, சிறுபணப்பை எல்லாம் இருக்கும் அல்லவா!
            உங்கள் கை- பையில் ஒரு புத்தகத்துக்கான இடம் இருக்கிறதா?
            உங்கள் கை- பையில் ஒரு புத்தகத்துக்கு இடம் கொடுத்து இருக்கிறீர்களா?
            நாம் எவ்வளவோ இடத்துக்கு செல்கிறோம். சில இடங்களுக்குச் செல்லும் போதும், சென்ற பிறகும் எவ்வளவோ நேரம் காத்திருக்கிறோம். அப்படிக் காத்திருக்கும் நேரத்தில் ஒரு புத்தகம் துணையிருந்தால் எப்படி இருக்கும்?
            காத்திருக்கும் ஒவ்வொரு மணித் துளியையும் வீணாக்காமல் பொன்னாக்கும் வேலையை கை -பையில் இருக்கும் புத்தகம் செய்யும் அல்லவா!
            கட்டாயம் இனிமேல் உங்கள் கை-பைகளில் ஒரு புத்தகத்துக்கு இடம் கொடுங்கள்.
            நமது ஊரில் என்னென்ன கடைகள் எல்லாம் இருக்கின்றன?
            எங்கே ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள் பார்ப்போம்!
            காய்கறிக் கடை இருக்கிறதா? இருக்கும்!
            மளிகைக் கடை இருக்கிறதா? இருக்கும்!
            துணிக் கடை இருக்கிறதா? இருக்கும்!
            இரும்புக் கடை இருக்கிறதா? இருக்கும்!
            நகைக் கடை இருக்கிறதா? இருக்கும்!
            தேநீர்க் கடை இருக்கிறதா? இருக்கும்!
            மதுபானக் கடை கூட இருக்கும்!
            ஆனால் புத்தகக் கடை இருக்கிறதா? இருக்காது என்றே நினைக்கிறேன்.
            காய்கறிக் கடைகள் மட்டும் எப்படி இருக்கின்றன? புத்தகக் கடைகள் ஏன் இல்லை?
            காய்கறிகளை நாம் வாங்குகிறோம். அதனால் காய்கறி கடை இருக்கிறது.
            மளிகைப் பொருட்களை வாங்குகிறோம். அதனால் மளிகைக் கடை இருக்கிறது.
            துணிகளை வாங்குகிறோம். ‍அதனால் துணிக் கடை இருக்கிறது.
            நகைகளை வாங்குகிறோம். அதனால் நகைக் கடை இருக்கிறது.
            தேநீர் வாங்குகிறோம். தேநீர்க் கடை இருக்கிறது. மதுபானங்களையும் வாங்குகிறோம்.
            மதுபானக் கடை இருக்கிறது. புத்தகங்களைப் பொதுவாக நாம் புறக்கணிக்கிறோம். அதனால் புத்தகக் கடைகள் பெரும்பாலும் அமைவதில்லை.
            நாம் எதை வாங்குகிறோமோ அதற்கானக் கடைகள்தான் இருக்கின்றன. ஓர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கி விட்டால் நாம் புத்தகங்களை வாங்கத் துவங்கி விடுவோம். புத்தகங்களை வாங்கத் துவங்கி விட்டால் புத்தகக் கடைகள் உருவாகி விடும்.
            குறைந்தபட்சம் ஒவ்வொரு ஊர்க் கடைத்தெருவிலும் ஒரு புத்தகக் கடையாவது இருக்க வேண்டும்.
            அதற்குப் புத்தகங்கள் படிப்பவர்கள் பெருக வேண்டும். பாடநூல்களைத் தாண்டியும் படிப்பும், வாசிப்பும் இருக்கின்றன என்பதை உணர்ந்து காலம் முழுவதும் வாசிக்கும் தலைமுறையை உருவாக்க வேண்டும்.
            வளமான நலமான தலைமுறைக்கு புத்தக வாசிப்பு சுவாசிப்பைப் போல வேண்டப்படுவதாகும். புத்தக வாசிப்பே மனித குலத்தை மென்மைபடுத்துகிறது, மேன்மைப்படுத்துகிறது.
            புத்தகங்களை உங்கள் அருகில் கொண்டு வரும் ஓர் எளிய முயற்சியே அறிவுத் திருவிழா எனும் இப்புத்தகக் கண்காட்சி ஆகும்.
            ஒவ்வொரு திருவிழாவும் கொண்டாடத்தான். ஏன் புத்தகங்களையே திருவிழாவாகக் கொண்டாடக் கூடாது?
            கொண்டாடிய பின் திருவிழாவின் மகிழ்ச்சி வடிந்து விடலாம். ஆனால் புத்தகங்களைக் கொண்டாடும் அறிவுத் திருவிழா அப்படியா! கொண்டாட்டம் முடிந்த பின் மகிழ்ச்சி பன்மடங்கு பெருகுவது இத்திருவிழாவில் மட்டும்தான்.
            புத்தகங்களைக் கொண்டாடுவோம். புத்தறிவைத் தேடுவோம். புத்துணர்வைச் சூடுவோம். அறிவுத் திருவிழாக்களை ஆவலோடு நாடுவோம்.
            (திருவாரூர் மாவட்டம், கோட்டூர் கலைவாணி மழலையர் &‍ தொடக்கப் பள்ளியில் 07.04.2018 (சனி) மற்றும் 08.04.2018 (ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற ஆறாவது செங்காந்தள் அறிவுத் திருவிழாவின் நிறைவு நாளான 08.04.2018 (ஞாயிறு) மாலை அன்று நடைபெற்ற பெருவிழாவில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****

2 comments:

  1. அருமை ஐயா! வாழ்க்கை எனக்கு அருமையான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான். தங்களைப் போன்ற அருமையான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

      Delete

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...