22 Apr 2018

சுருக்கமான சமூக வரலாறு


சுருக்கமான சமூக வரலாறு
            இங்கே அடிக்கடி பஞ்சாயத்துகள் நடக்கின்றன. நடக்கின்ற அனைத்தும் கட்டப் பஞ்சாயத்து வகையறாக்கள்தான். அதனால் ஊரில் நான்கு பேருக்கு போ‍தையேற்றிக் கொள்ள இரவானால் இராவாக சரக்கு கிடைக்கிறது. மற்றவர்களுக்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் கிடைக்கிறது.
            பொதுவாக இதுபோன்று நடக்கின்ற பஞ்சாயத்துகளுக்கு அழைப்பதற்கு முன் கிராமம் உங்களுக்குச் சார்பாகத்தான் நடக்கும் என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால் பஞ்சாயத்தில் அதைக் கெடுப்பதற்கு என்றே குடிகாரர்கள் இருப்பார்கள். முடிவில் அவர்களின் பேச்சைக் கேட்டு அப்படியே தீர்மானம் எழுதி கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். கையெழுத்து போட முடியாது என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் மறுமுறை கையெழுத்துப் போட கை இருக்காது. துண்டாக்கி விடுவார்கள்.
            கோபத்தின் உச்சிக்கே சென்று பஞ்சாயத்தில் சத்தமிடலாம். கண்டுகொள்ள மாட்டார்கள். எல்லாம் ஓர் அளவுக்குத்தான். கொஞ்சம் பொறுப்பார்கள். எல்லை தாண்டினால் நான்கு தட்டு தட்டி வீட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.
            கோபப்பட்டது சரியா? தவறா? என்று இருவேறு மனங்களால் வீட்டிற்கு வந்த பிறகு அல்லாடலாம். இந்தப் பஞ்சாயத்துகளை முறையாகப் புகாராகவும் கொடுக்க முடியாது. கொடுத்தால் அங்கேயும் அதுதான் நடக்கும். கொஞ்சம் நாகரிகமாக நடக்கும். பண விரயம் கடுமையாக இருக்கும். கொஞ்சம் அநாகரிமாக இருந்தாலும் கிராமப் பஞ்சாயத்துகள் சல்லிசாக இருக்கும்.
            பொதுவாகப் பஞ்சாயத்தில் கோபப்படுவதை விட சாதுர்யமாக நடந்து கொள்வது புத்திசாலிதனமானது. அப்படி சாதுர்யமாக நடந்து கொள்வதற்கு சுயதன்மையும், தைரியமும் அவசியம்.
            சார்ந்திருத்தலை விரும்புபவர்களுக்குப் பஞ்சாயத்துகளில் தப்பிப்பதற்கு வழியில்லை. அவர்களுக்குப் பஞ்சாயத்தின் பாதகங்களையும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
            இந்தப் பஞ்சாயத்துகளைப் பொருத்த வரையில் சுயதன்மையையும், தைரியத்தையுமே அதிகம் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. அதில் தயக்கம் காட்டக் கூடாது. தயக்கம்தான் நிலவும். காரணம் அப்படியே சார்ந்திருக்க பழக்கப்பட்டுப் போனதுதான்.
            சார்ந்திருத்தலுக்கு எதிராக இருப்பது என்பது நமது வழக்கத்தில், கலாச்சாரத்தில், சமூகத் தன்மைகளில் இல்லாததாக இருக்கிறது. அப்படியானால் இநதச் சமூகம் கொடுப்பதைக் கொண்டு வாழ்வது ஆனந்த வாழ்வாகத்தானே இருக்க வேண்டும். சமூக வாழ்க்கையோ துயரம் கவிழ்ந்ததாக இருக்கிறது. அதற்குக் காரணம் சமூகம் அதிகப்படியான கட்டுபாடுகளைத் திணிக்கிறது. சின்னப் பிசகுககளைக் கூட, சமூக விதியைச் சரியாகப் பின்பற்றாததனால் வந்த விளைவு என்று எளிதாக குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.
            சமூகம் அடிமைத்தளையை விரும்பும் ஓர் அமைப்பு. சமூகம் அடிமைத்தனத்துக்கு விதிவிலக்காக இருக்க இயலாது. அதற்குக் காரணம் சமூகம் என்பது செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டுபாட்டில் இருக்கிறது. ஆதிக்கம் மிகுந்தவர்கள் சமூக விதிகளைக் காப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மட்டும் சமூகத்தின் மித மிஞ்சிய சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு, சமூகத்தின் மற்றைய அனைவர்க்கும் அடிமைத்தனத்தைப் பரிசாக அளித்து, அதிலும் மகிழ்ச்சி காண்கிறார்கள்.
            சமூகத் தளையிலிருந்து விடுதலை பெற ஒவ்வொரு மனிதரும் தைரியம் மிகுந்தவராக இருக்க வேண்டும். சுயதன்மையில் ஒளிர்பவராக இருக்க வேண்டும்.
            சமூகத்தின் அனைத்துத் தன்மைகளையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்படி கேள்விக்கு உட்படுத்தி ஆய்ந்து பார்த்தால் சமூகத் தளைகள் ஒவ்வொன்றும் தனிமனிதர்களில் சிலருக்கு ஆதாயம் தரக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பதை அறியலாம். அப்படிப்பட்ட சமூகத் தன்மைகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொருவரும் மனதளவில் காவலர்களாக இருப்பதை அறியலாம். சமூகத்தின் சாதி, மதம், பிரிவினைகள் எல்லாம் சமூகத் தன்மைகளுக்குத் தூண்களாக விளங்குவதைக் காணலாம்.
            சமூகத்தில் அனைவர்க்கும் நலம் பயக்கக் கூடிய, தனிமனித உரிமைகளையும், மகிழ்ச்சியை உருவாக்கக் கூடிய சமூக விதிகள் சிறிது காலம் கூட தாக்குப் பிடிக்காமல் தவிடு பொடியாகி விடுகின்றன. வெகு எளிதாக சமூகத்தின் ஆதிக்கச் சக்திகளும், ஆரவாரத் தன்மைகளும் சமூகத்தின் பொதுநீதிக்குச் சாவுமணி அடித்து விடுகின்றன.
            சமூகத்தை முரண்பாடுகளுக்குள் சிக்க வைத்து, தாங்கள் மட்டும் அந்த முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டுவதன் மூலம் சமூகத் தலைவர்களாகக் கருதப்படுபவர்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கடவுள் தன்மையும் தோற்றமும் அபாயகரமானவை. அவர்களின் குருட்டாம் போக்கான சிந்தனைகளின் வழியே சமூகம் பயணப்பட வேண்டும் என்பதில் சாதுர்யமாகச் செயல்படுகிறார்கள். அவர்களால் சிறுசிறு ஆதாயங்களை நாய்க்குப் போடப்படும் பொறையைப் போல பெறுகின்ற சில அடிபொடிகள் அவர்களின் கொள்கையை வழிநடத்துபவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் சமூகத்தின் பொதுநீதிக்கு வர சமூகத் தலைவர்கள் முயன்றாலும் இந்த அடிபொடிகள் விட மாட்டார்கள். புதிது புதிதாக ஒவ்வொரு தலைமுறையிலும் அடிபொடிகள் உருவாகி சமூகத்தின் பொதுநீதிக்கு எதிரான தன்மையை உடைத்து எறிபவர்களாக விளங்குவார்கள்.
            சமூகத்திற்கு எதிரான கலகக் குரல் என்பது தனிமனிதனின் சுயமரியாதைக்கான குரலே ஆகும். மனிதர்கள் சுயமரியாதை மூலம் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். சுயமரியாதை என்பதும் சுயதன்மையின் ஒரு பகுதியே ஆகும். அது வெறும் பகுதி மட்டுமே. சுயதன்மை என்பதோ இன்னும் சுயமரியாதையை விட உயர்ந்தது. அது தன்னுடைய மரியாதை என்ற அளவையுத் தாண்டி அனைவரது மரியாதையையும் விரிவாகச் சிந்திக்கக் கூடியது. விரிவான தன்மையில் செயல்பட பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு அத்தகைய தைரியம் இருப்பதில்லை. தங்களது குறுகிய தன்மையில் கிடைக்கும் சில குருட்டுத் தனமான ஆதாயங்களையும் இழந்து விடவும் அவர்களால் முடியாது.
            இப்படித்தான் பஞ்சாயத்துகள் நிலைபெறுகின்றன. கட்டப் பஞ்சாயத்துகள் வளம் பெறுகின்றன. ஒரு கிராமப் பஞ்சாயத்தைப் பேச ஆரம்பித்து எவ்வளவு தூரத்துக்கு வந்து விட்டோம்! என்ன செய்வது? அதுதான் சமூக வரலாறாக இருக்கிறது. நாம் படிக்கின்ற சமூக வரலாறு வேறு. அது எழுத்தில் வந்தது. நாம் பேசியது எழுத்தில் வராதது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...