2 Apr 2018

மாபெரும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்...


மாபெரும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்...
            அவரவர்க்கு அவரவர் சுயநலம் முக்கியம். அதில்தான் கருத்தாக இருப்பார்கள். தங்களின் சுயநலத்துக்குப் பாதிப்பில்லாத வகையில் பொதுநலம் பேசுவார்கள். தங்கள் சுயநலத்துக்குப் பாதிப்பு வந்தால் குறைந்தபட்ச பொதுநலத்தையும் தூக்கி எறியத் தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டுதான் கொஞ்சமேனும் பொதுநலமானக் காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
            அவர்கள் மேல் கோபப்பட்டு என்னவாகப் போகிறது? பேசாமல் இருந்து என்னவாகப் போகிறது? அவர்கள் அப்படி ஒருபடித்தான வகையினர். அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்ள வேண்டும். பேசிக் கொள்ளவும் வேண்டும்.
            எல்லாவற்றிலும் இருப்பது போல நடந்து கொள்ள வேண்டும். ஆனால் எதிலும் இருக்கக் கூடாது. பற்றற்ற நிலையில் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று இதை குழப்பி விட்டுக் கூடாது.
            பற்று கொண்டோ, ஆசை கொண்டோ குறைந்தபட்சம் விருப்பமேனும் கொண்டோ காரியம் செய்தால் அவ்வளவுதான். சராசரியான அளவு செயல்படுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் தேவையில்லை.
            அதாவது செய்தது மாதிரியும், செய்யாதது மாதிரியும். அதைத்தான் இந்த உலகம் விரும்பும்.
            யாரையும் திருப்திபடுத்த முடியாது என்பதால், திருப்திப்படுத்துவது போல நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நிஜமாகத் திருப்திபடுத்த முயன்று நிராதவராவாகி விடக் கூடாது.
            சிலர் விசயத்தில் தலையிடக் கூடாது. அவர்கள் எப்போது எப்படி முடிவெடுப்பார்கள் என்பது குழப்பமாக இருக்கும். அவர்களும் குழம்பி நாமும் குழம்புவதில் அர்த்தம் இருக்க முடியாது. அவர்கள் குழம்புவதோடு இருக்கட்டும். அதற்கு அவர்களை அவர் போக்கில் விட்டு விட வேண்டும். தேவையில்லாமல் நாம் தலையிடக் கூடாது.
            எதிலும் அவசரப் படக் கூடாது. அதற்கானக் காலம் கனிந்து வரும் வரையில் அவசரம் காட்டக் கூடாது. அவசரம் காட்டினால் நாம் வேலையைச் செய்ய நெருக்கடி காட்டுகிறோம் என நினைத்து நமக்கு நெருக்கடிக் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். தேவையா இதெல்லாம்?
            அதற்கான நேரம் வரும் போதுதான் அந்தக் காரியம் ஆக வேண்டியவர்கள் அவசரப்படுவார்கள். அந்த அவசரத்தைப் பயன்படுத்தி எளிதாகக் காரியம் செய்யலாம். இல்லையென்றால் கஷ்டம்தான்.
            சமயங்களில் சில நிலைமைகளில் சில வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் போது எந்த வேலையைச் செய்வது என்ற குழப்பம் எற்பட்டு விடும். ஆக எப்போதும் குழப்பம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். இதற்குக் காரணம் முறையான ஒத்துழைப்பு இல்லாத ஆட்களைச் சுற்றி வைத்துக் கொள்வதுதான். வேலையில் பொறுப்பின்மையான ஆட்களை வைத்துக் கொண்டால் தேவையில்லாத கால தாமதங்களுக்கும், செயலற்ற தன்மைக்கும் ஆளாவதைத் தவிர்க்க முடியாது. அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் முடித்து விட வேண்டும். இவ்விசயத்தில் யாரையும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது.
            மற்றவர்களை எவ்வளவு நம்பினாலும் அந்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்ற முடியாமல் போகும் போது என்ன செய்வது என்ற மாற்று வழியையும் சிந்தித்து வைத்து இருக்க வேண்டும்.
            மற்றவர்களை நம்பியெல்லாம் திட்டங்களை வகுக்கக் கூடாது. அவர்கள் எப்போது கைவிட்டு ஓடுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. தம்மை நம்பித்தான் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். அது போலத்தான் மற்றவர்களை நம்பியெல்லாம் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது. யார் எப்போது கழன்று போவார்கள் என்று யாருக்கும் தெரியாது. தம்மை நம்பித்தான் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அதன் பேர் தலைமை என்பார்கள். அதுதான் நிலைமையைத் தீர்மானிக்கிறது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...