2 Apr 2018

அதர்மத்தை அழிக்க அற்புத வழி!


குறளதிகாரம் - 10.6 - விகடபாரதி
அதர்மத்தை அழிக்க அற்புத வழி!
            மனிதரின் அடையாளம் மொழி.
            அவர் மனதின் வெளிப்பாடு சொற்கள்.
            நல்ல சொற்கள் நல்ல விளைவுகளையும், தீய சொற்கள் தீய விளைவுகளையும் தூண்டுகின்றன.
            சொற்களில் இருக்கின்றன விளைவுகள்.
            சொற்களில் நனைகிறது வாழ்க்கை.
            சொற்களில் கடந்து செல்கிறது காலம்.
            சிறு சுடுசொல் பொறுக்க மாட்டால் கயிற்றில் தொங்கியவர்கள் இருக்கிறார்கள்.
            சிறு ஏளனச் சொல்லுக்காகப் பொங்கி எழுந்து கொலை புரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
            சொற்கள் தாக்குகின்றன. அவதூறுகளைத் தாங்க முடியாமல் மனம் வலிப்பது அதனால்தான்.
            சொற்கள் வருத்துகின்றன. அபாண்டங்களைத் தாங்க முடியாமல் கண்கள் கண்ணீர் சொரிவது அதனால்தான்.
            கோபமாகப் பேசினால் காரியம் ஆகி விடும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். கோபமானச் சொற்கள் உருவாக்கும் பய உணர்வும், எதிர்மறை மனநிலையும் சொற்களிலேயே அடங்காதவைகள்.
            அல்லவைகளைப் பேசினால் நடக்காததையும் நடத்திக் காட்டி விடலாம் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அல்லவைகளானச் சொற்கள் மனதில் ஏற்படுத்தும் காயங்களும், வடுக்களும் எண்ணிக்கையில் அடங்காதவைகள்.
            காரியம் நடக்கிறதோ, நடக்கவில்லையோ,
            எதிர்பார்ப்பது நிறைவேறுகிறதோ, நிறைவேறவில்லையோ,
            முயற்சிகள் வெல்கிறதோ, தோற்கிறதோ...
            நல்லச் சொற்களையே நாடி இனிமையாகச் சொல்வதே நல்லது. ஆம் இன்சொற்களே மிக நல்லது. இனியவைக் கூறலே மிக மிக நல்லது.
            இன்சொற்களால் நல்லன நிகழ்கிறதோ இல்லையோ, அல்லன நிகழ வாய்ப்பில்லை.
            நல்லன சில நிகழ வேண்டும் என்பதற்காக, அல்லன பல நிகழ்த்துவது பொருத்தம் ஆகாது.
            ஆயிரம் நல்லன நிகழ்ந்து, ஒரு சில அல்லன நிகழ்ந்தாலும் நிகழ்த்தப்பட்ட நல்லன பொருளற்றதாகி விடும், ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு சொட்டு நஞ்சு போல.
            நல்லவைகள் நிகழாமல் போனாலும், அல்லவைகள் நிகழாமல் போகச் செய்யும் இன்சொல்லே எப்போதும் சிறந்தது. அதே வேளையில் இன்சொல்லால் இனியவைகள் எனப்படும் நல்லவைகள் நிகழாமலும் போகாது.
            நல்லவை நாடிச் சொல்லும் இன்சொற்களால்தான் அல்லவை நிகழாமல் போகிறது. அல்லவை நிகழாமல் போகும் போதுதான் அறம் தழைக்கிறது. அன்பு முளைக்கிறது.
            அல்லவை எனப்படுவது யாதெனக் கேட்பின், நல்லவை அல்லாத அனைத்தும் அல்லவைகளே.
            அறம் தழைக்கவும், அன்பு முளைக்கவும் இனியச் சொற்களே வான் மழையும், விளைநிலமும் போல.
            அல்லவைச் சுருங்கவும், அறம் பெருகவும், நல்லவைகளை நாடி அவைகளை இனிமையாகச் சொல்ல வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
            சொல்வதை இனிமையாகச் சொல்லா விட்டால் அதனாலும் கூட அல்லவைகள் தலைவிரித்தாடும் சூழ்நிலை ஏற்படும். சொல்வதில் இனிமை இல்லாவிட்டால் அதனாலும் கூட அறம் அர்த்தமற்றுப் போகும் அபாய நிலை ஏற்படும்.
            சொல்லின் இனிமையில் அல்லவை மறைகிறது.
            சொல்லின் இனிமையில் அறம் உறைகிறது.
            இன்சொல்லே அல்லவைகளின் கூற்று. இன்சொல்லே அறத்தின் ஊற்று.
            அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.
            அல்லவைகளை அழிக்க ஆயுதம் எதற்கு? நாக்கு என ஒன்று இருக்கு. அதில் பிறக்கும் இன்சொல்லில் அல்லவைகளை அழிக்கும் ஆற்றல் இருக்கு.
            அல்லவைகளை அழிக்கவும், அறத்தைச் செழிக்கவும் செய்யும் ஆற்றலும் வலிமையும் இன்சொல்லில் இருக்கிறது.
            இன்சொல்லின் ஆற்றலால் அறத்தின் அச்சில் சுழலட்டும் இவ்வுலகம். இன்சொல்லே இனிய வாழ்வின் வெற்றித் திலகம்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...