2 Apr 2018

சாவு வீட்டின் கிராக்கி


சாவு வீட்டின் கிராக்கி
இந்த வீட்டில்
கணவனின் வசைச் சொற்களின்
எரிச்சல் தாங்க முடியாமல்
ஒருத்தி தீக்குளித்து இருக்கிறாள்
வேலை கிடைக்காத
விரக்தியின் மனபாரம் தாங்க முடியாமல்
மேலே சுருக்கிடப்பட்ட கயிற்றில்
சுமையை இறக்கி வைத்து இருக்கிறான் ஒருவன்
தனியாக வாழ்ந்த விதவைப் பெண்ணொருத்தி
பலரோடு இணைத்துப் பேசப்பட்டதற்காக
தனிமையில் விஷமருந்தி
பொதுவெளியில் நாற்றம் கிளம்பி
பிணமாய் மீட்கப்பட்டு இருக்கிறாள்
கடன் தொல்லை தாங்க முடியாத
எலும்பும் சதையுமான
நாற்பத்தைந்து கிலோ எடைக்காரன்
கையறுத்துக் கொண்டு
சிவப்புக் கறை படிய
அறையெங்கும் உருண்டு புரண்டு இருக்கிறான்
குறைந்த வாடகைக்கு போகிறது என்று
வருத்தமாக இருக்கிறது வீட்டுக்காரருக்கு
செத்து விட்ட ஆத்மாக்கள்
வாடகைக் கொடுக்காமல்
அந்த வீட்டில் குடியிருப்பதாக
பேசிக் கொள்கிறார்கள் ஊர் மக்கள்
ஏற்கனவே செத்து விட்ட ஒருவன்
மறுபடியும் செத்தாலும் பரவாயில்லை என்று
குறைந்த வாடகையைக் கருத்தில் கொண்டு
குடியேறிக் கொண்டு இருக்கிறான்
சாவு வீடென அழைக்கப்பட்டாலும்
கிராக்கி இருக்கத்தான் செய்கிறது
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...