3 Apr 2018

மகிழ்ச்சியும், நன்மையும் வேண்டும் என்பார்க்கு...


குறளதிகாரம் - 10.7 - விகடபாரதி
மகிழ்ச்சியும், நன்மையும் வேண்டும் என்பார்க்கு...
            நாள் என்பது இரவு, பகல் என்பதால் ஆக்கப்பட்டுள்ளது போல, வாழ்வு என்பது நன்மை, தீமை என்பதால் ஆக்கப்பட்டுள்ளது.
            நன்மையை விரும்புவதும், தீமையை விலக்குவதும் மனித மனத்தின் இயல்பு அல்லவா! நன்மையின் மேல் மனித மனம் கொண்ட தீராக் காதலே 'எல்லாம் நன்மைக்கே!' என்ற ஆறுதலை உருவாக்குகிறது.
            நன்மை செய்பவர்கள் வாழ்த்தப்படுவதும், தீமை செய்பவர்கள் வீழ்த்தப்படுவதும் வரலாறாக விளங்குகிறது.
            நன்மைக்கு நன்றியும், தீமைக்கு மன்னிப்பும் பண்பின் வெளிப்பாடாக அமைகிறது.
            இத்தகைய நன்மைக்கும், தீமைக்கும் வித்தாவது நாக்குதான். அந்நாவிலிருந்து பிறக்கும் சொற்கள்தான்.
            மனிதரது பெரும்பாலான குற்றங்கள் அவரது நாவிலிருந்துதான் பிறக்கின்றன என்கிறார் நபிகள் நாயகம்.
            நாக்கே மனிதர்களுக்கான நன்மையையும் செய்கிறது, தீமையையும் செய்கிறது. நாக்கின் வழியது நன்மையும், தீமையும்.
            நாக்கு நல்ல சொற்களைச் சொன்னால் நன்மை நடக்கிறது. நாக்கு தீயச் சொற்களைச் சொன்னால் தீமை நடக்கிறது.
            இப்படிப்பட்ட நாக்கு நல்ல சொற்களை மட்டுமே சொல்ல ஏதேனும் வழி இருக்காதா?
            நாக்கு நல்ல சொற்களைச் சொல்ல நல்ல மனம் வேண்டும்.
            அத்தகைய நல்ல மனம் உண்டாக நல்ல பண்புகள் அதில் நிரம்பியிருக்க வேண்டும்.
            நல்ல மரம் இனிய கனிகளைக் கொடுப்பதைப் போல, நல்ல பண்புகள் இனிய மனத்தைக் கொடுக்கும். அத்தகைய இனிய மனம் நாவிலிருந்து பிறக்கும் சொற்களுக்கு இனிமை கொடுக்கும்.
            நல்ல பண்பிலிருந்து சிறிதும் விலகாத நல்ல மனமே இனிய சொற்களைச் சொல்கிறது. அத்தகைய இனியச் சொற்களே கனிந்தப் பயன்களைத் தருகிறது.
            அப்படி நற்பயனைத் தந்து நற்பண்பிலிருந்து விலகாதச் சொற்களே இனியச் சொற்களாகும்.
            இனியச் சொற்கள் என்பன நற்பயன் தராத வெற்றுச் சொற்கள் ஆகாது.
            இனியச் சொற்கள் என்பன வெறும் காதுக்கு மட்டுமே இதமான பண்பற்றச் சொற்கள் ஆகாது.
            இனியச் றொற்கள் என்பன நற்பயனும், நற்பண்பும் இரு கண்களாகக் கொண்ட ஒரே பார்வையின் இரண்டு விழிகள் ஆகும்.
            அத்தகைய தன்மைப் பொருந்திய இன்சொற்களே இன்பத்தையும் தந்து, நன்மையையும் தருகின்றன.
            உலகில் இன்பம் தருபவைகளாக இருக்கும் போதைப் பொருட்கள் நன்மை தராதவைகள்.
            உலகில் நன்மை தருபவைகளாக இருக்கும் போராட்டங்கள் இன்பம் தராதவைகள்.
            இனியச் சொற்கள் அப்படியல்ல. இன்பத்தையும் தருகின்றன. நன்மையையும் தருகின்றன.
            ஏனென்றால் இன்சொற்கள் என்பன பயனும், பண்பும் கலந்தவை. அதில் பயன் நன்மையைத் தருகிறது. பண்பு இன்பத்தைத் தருகிறது.
            பயன் தரும் நன்மையும், பண்பு தரும் இன்பத்தையும் கொண்ட இனியச் சொற்களே பூமிப் பந்தின் சிறகுகள்.
            சிறகுகள் மென்மையானவை. தடவும் போது இன்பத்தைத் தருபவை.
            சிறகுகள் பறக்கும் தன்மையவை. பறக்கும் போது பயன் தருபவை.
            இனியச் சொற்களும் சிறகுகளைப் போன்றவைகள்தான்.
            பேசும் போது மென்மையைத் தந்து இன்பத்தைத் தரும். செவியில் கேட்கப்படும் போது பறக்கும் சுகத்தைத் தந்து நன்மையைத் தரும்.
            இன்பத்தையும், நன்மையையும் தரும் இனியச் சொற்களே உலகின் வழக்காகட்டும். பண்பிலிருந்தும், பயனிலிருந்தும் விலகாத இனியச் சொற்களே உலகின் கிழக்காகட்டும்.
            இனியச் சொற்களால் உலகம் விடியட்டும். வன்சொற்கள் உருவாக்கி வைத்திருக்கும் இருட்டு முடியட்டும்.
            நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைபிரியாச் சொல்.
            இன்சொற்களே! இன்சொற்களே! நாவில் சென்று நில்லுங்கள். நானிலம் முழுவதையும் இனிமையால் வெல்லுங்கள்!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...