3 Apr 2018

விஷேசக் காரணங்களை உருவாக்கும் முறை


விஷேசக் காரணங்களை உருவாக்கும் முறை
            எஸ்.கே. அடையும் மன உளைச்சல்களுக்கு அளவில்லை. எதையும் எஸ்.கே. அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளும் வகையில் எஸ்.கே. நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டப் போதிலும், தன்னைத்  தானே அப்படி ஆளாக்கிக் கொள்ள அவரது மனமே நிர்பந்தித்தப் போதிலும் எஸ்.கே. அந்த முடிவுக்கு ஒரு போதும் உடன்பட்டதில்லை.
            நிறுவன மையத்துக்கு வரத் தனக்குப் பிடித்தம் இல்லாத வகையில் மாறிக் கொண்டு இருந்த போதிலும் எஸ்.கே. நிறுவன மையத்துக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறார்.
            பயந்தவர்களுக்காக எந்தக் காரியத்தையும் செய்ய இயலாது. அவர்களுக்கு எதிலுமே திருப்தி இருக்காது. இப்போது இதைச் செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள், சிறிது நேரம் கூட கழித்திருக்காது இன்னொன்றைச் செய்ய வேண்டும் என்பார்கள். நிலையற்ற மனதால் அவதிப்படுபவர்களிடம் நிலையான ஒன்றைச் செய்யப் போய் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். அப்படிப்பட்டவர்களிடம் எஸ்.கே. நிறையவே அவதிப்பட்டு இருக்கிறார்.
            மனிதர்கள் எப்படியோ அப்படியே அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் போய் வீண் விவாதம் பண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஆபத்தானது என்பதைக் கருத்தில் கொண்டு எஸ்.கே. சண்டபிரசன்ட விவாதங்களுக்குச் சென்றது கிடையாது. ஆனால் மனதுக்குள் ஆழமான, நீண்ட பல விவாதங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்.
            எவருக்கும் எதையும் முந்திப் போய் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. கொடுக்கின்ற எல்லாமே விலை உயர்ந்த பொக்கிஷங்கள். அதற்கான டிமாண்ட் உருவாகும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். அல்லது அதற்கான டிமாண்டை மறைமுகமாக உருவாக்கி விட்டுதான் கொடுக்க வேண்டும் என்பது எஸ்.கே. அறிந்த ஒன்றாக இருந்தாலும் டிமாண்டுக்காகக் காத்திராமல் கூட அவர் நிறைய விசயங்களை வழங்கியிருக்கிறார்.
            வெளியில் போகும் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் அவ்வளவு முக்கியம். இல்லையென்றால் மொத்துப்படுவது தானாகத்தான் இருக்க முடியும் என்பது அறிந்தும் பெருந்தன்மையாகப் பேசி சிறுமைபடுத்தப்பட்ட அனுபவங்கள் எஸ்.கே.வுக்கு நிறையவே இருக்கிறது.
            சில விசயங்கள் எஸ்.கே.யிடம் ரொம்ப அதிகமாகத்தான் இருக்கின்றன. சாதாரண அதிகம் இல்லை. அதிகமோ அதிகம். ஒருவரின் அதிகப்படியான விசயங்களைப் பொறுத்துக் கொண்டு ஒருவர் ஒருவரோடு வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது இருக்கிறதே, அது நரகம். அந்த அதிகத்தை எஸ்.கே. பிறருக்கும் வழங்கியிருக்கிறார். தானும் அனுபவித்திருக்கிறார்.
            தான் மாற்றத்திற்கான செயல்முறைகளை உருவாக்கி, அது கடைசியில் தனக்கே ஆபத்தாக முடிவது எஸ்.கே.யின் பிரத்யேக தன்வரலாறு.
            சுற்றியுள்ளவர்கள் அதை உணரும் வகையில் இல்லை என்பதுதான் தனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டதாக அடிக்கடி எஸ்.கே. புலம்புகிறார்.
            அவசரப்பட்டு         தாம் உருவாக்கும் மாற்றம் எதிர்மறையாகத்தான் போகின்ற போதிலும் தம் முயற்சியைக் கைவிட்டதில்லை. கைவிட முடியாத அளவுக்கு கரடியைப் பிடித்த விட்ட கதைதான் முயற்சிகளைப் பொருத்த வரையில் எஸ்.கே.யின் கதை.
            ஒரு சீரியத் தலைமை மையம் இன்மையால் ஒரு நிறுவனம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதை எஸ்.கே. தன் கண் முன்னே கண்டு கொண்டு இருக்கிறார். இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான் என்பார் எஸ்.கே. எதுதான் நல்லதில்லை எஸ்.கே.வுக்கு? தான் பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்து விடலாம், ‍தேவையில்லாத வேலை நெருக்கடி தனக்கு இல்லை என்று இதற்கு விஷேசக் காரணம் கூறுவார் எஸ்.கே.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...