8 Apr 2018

உலகை விடப் பெரியது எது?


குறளதிகாரம் - 11.2 - விகடபாரதி
உலகை விடப் பெரியது எது?
            உயிருக்குப் போராடும் ஒருவருக்காக ஆம்புலன்ஸை அழைப்பது சிறிய உதவியாக இருக்கலாம். உரிய காலத்தில் வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸால் உயிர் காக்கப்படும் போது அச்சிறிய உதவி மாபெரும் உதவியாக மாறுகிறது.
            விபத்தில் அடிபட்ட ஒருவருக்குச் செய்யப்படும் முதலுதவி சிறியதாக இருக்கலாம். உரிய காலத்தில் செய்யப்படும் அம்முதலுதவி சிறியதாகத் தோற்றம் தரினும் மாபெரும் உதவியாக மாற்றம் கொள்ளும்.
            தாகத்தால் தவிக்கும் ஒருவருக்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் ஒரு சொட்டு நீர் தேவாமிர்தத்திற்குச் சமமாகும்.
            பசியால் வாடும் ஒருவருக்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் ஒரு கவள உணவு விருந்துக்குச் சமமாகும்.
            நெருக்கடிக் காலத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு ரூபாய் லட்ச ரூபாய்க்குச் சமமாகும்.
            உரிய காலத்தில் செய்யப்படும் உதவிக்கு அளவுகோல் ஏது?
            உரிய காலத்தில் செய்யப்படும் உதவியே உலகத்தில் பெரியது. உலகத்தில் பெரியது என்பதை விட உலகத்தை விட பெரியது என்று சொல்வதற்கும் உரியது.
            உரிய காலத்தில் தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் வந்தால்...
            உரிய காலத்தில் முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகை கிடைத்தால்...
            உரிய காலத்தில் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்தால்....
            உரிய காலத்தில் அரசின் கருணை உதவிக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால்...
            உரிய காலத்தில் உரிய மேலாண்மை வாரியங்கள் அமைக்கப்பட்டால்...
            உரிய காலத்தில் உரிய சட்டங்கள் இயற்றப்பட்டால்...
            உரிய காலத்தில் உரிய தடைகளை நீக்கினால்...
            உரிய காலத்தில் உரியவர்களுக்கான உதவிகள் போய் சேர்ந்தால்...
            அத்தகைய உதவிகள் உலகை விடப் பெரியது. உரிய காலத்தில் கிடைக்கும் அந்த உதவிகள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடப்பதுதான் என்றாலும் அந்த உதவுகள் உலகத்தை விடப் பெரியதாகிறது.
            இந்த உலகில் உரிய காலத்தில் நீர் கிடைக்காமல் தாகத்தால் தவிப்பவர்கள் ஏராளம். உரிய காலத்தில் உணவு கிடைக்காமல் பசியால் வாடுபவர்கள் ஏராளம். உரிய காலத்தில் உரிய நலத்திட்டங்கள் கிடைக்கப் பெறாமல் வருந்துவோர்கள் ஏராளம். உரிய காலத்தில் உரிய நீதிகள் கிடைக்கப்படாமல் வஞ்சிக்கப்படுபவர்கள் ஏராளம்.
            உரிய உதவிகள் உரிய நேரத்தில் சென்று சேரும் போதுதான் உலகம் உலகமாக இயங்கும். இல்லையேல் உலகம் கலகமாகவே இயங்கும்.
             உரிய காலத்தில் செய்யப்படும் உதவிகளுக்கு சிறியது, பெரியது, நடுத்தரமானது என்று அளவு கணக்கு எதுவும் இல்லை.
            காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
            உலகை விட பெரியது உரிய காலத்தில் செய்யும் உதவி.
            உலகை விட பெரிய உதவிகளைச் செய்ய விரும்புபவர்கள் உரிய காலத்தில் உரிய உதவிகளைச் செய்ய முயலலாம்.
            காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது போல, காலம் கடந்த உதவியும் தடுக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட உதவியே ஆகும்.
            உலகத்தை விட பெரியது எது?
            உலகத்தை விட பெரிய இன்னொரு கிரகமா என்றால்... அது உலகத்தில் இருப்போரால் உரிய காலத்தில் செய்யப்படும் உதவியே ஆகும்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...